You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுசூதனன் நீக்கம் செல்லாது: நத்தம் விஸ்வநாதன்
அ.தி.மு.கவின் அவைத்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து மதுசூதனனை அக்கட்சியின் பொதுச் செயலாளார் வி.கே.சசிகலா நீக்கியது செல்லாது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.கவின் அவைத்தலைவர் மதுசூதனன் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், அவைத்தலைவர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்படுவதாக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும், அ.தி.மு.கவின் புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்படுவதாகவும் சசிகலா அறிவித்துள்ளார்.
இச்சூழலில், மதுசூதனின் நீக்கம் குறித்து தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியில் இடம்பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
மதுசூதனை நீக்கம் செய்து வி.கே.சசிகலா பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றும், அவர் தாற்காலிக பொதுச் செயலாளராக மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், தாற்காலிக பொதுச் செயலாளரரால் நியமனங்கள் மேற்கொள்ளவோ அல்லது உறுப்பினர்களை நீக்கவோ அதிகாரம் கிடையாது என்றும், அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் செல்லாது என்றும் கூறினார்.
முன்னர், வி.கே.சசிகலா 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் கட்சியில் இணைந்தார் என்றும், பொதுச் செயலாளர் பதவிக்குவர ஐந்தாண்டுகள் கட்சியில் தொடர்ந்து உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்றும் மதுசூதனன் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தகுதியற்றவர் என்றும், இவரது பொறுப்பை ஏற்றுக் கொள்ள கூடாது என்றும் கூறி தேர்தலை ஆணையத்திடம் மனு போட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்