You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரியங்காவை விட ஸ்மிரிதி இரானி அழகு: பாஜக தலைவரின் கருத்தால் சர்ச்சை
உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும்பிரியங்கா காந்தியை விட அழகானவர்கள் தனது கட்சியில் இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் வினய்கட்டியார் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையாக மாறியுள்ளது.
உத்தர பிரதேச தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது வினய் கட்டியார், பிரியங்கா ஒரு நட்சத்திர பிரசாரகர் அல்ல என்றும் அவர் அழகானவர் என்பதால் காங்கிரஸ் அவரை முன்னிறுத்தியுள்ளது. ஆனால் அவரை விட அழகானவர்கள் பாஜகவில் உள்ளனர் என்றும் பாஜகவின் ஸ்மிரிதி இரானி பிரியங்காவை விட நன்றாகவும் பேசக்கூடியவர் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வினய்கட்டியாரின் கருத்து தொடர்பாக தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்டபோது, ''வினய்கட்டியார் மிகவும் மூத்த தலைவர். அவர் பிரியங்காவை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கவில்லை. பிரியங்கா ஓர் இளம் தலைவர். பலரும் அறிந்தவர். வினய் காட்டியார் மிகவும் சாதாரணமான தொனியில் தான் பேசியிருப்பார் (lighter vein),'' என்றார்.
வினய் கட்டியரின் கருத்து பாலியல் ரீதியான கருத்து என்று பிரியங்கா கூறியுள்ளது பற்றி கேட்டபோது, ''வேறு வார்த்தைகளை அவர் குறிப்பிட்டிருந்தால் நானும் அது பாலியல் ரீதியான கருத்து என்று கூறியிருப்பேன். சாதகமான முறையில்தான் வினய்கட்டியார் பேசியுள்ளார். அவர் ஒரு நேர்மையான தலைவர்,'' என்றார்.
தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி, வினய் கட்டியாரின் கருத்து அவர் சார்ந்த சித்தாந்தத்தை பிரதிபலிக்கிறது என்றார். ''வினய் கட்டியார் பிரியங்காவை விட தனது கட்சியை சேர்ந்த ஸ்மிரிதி இரானி மிகவும் அழகானவர் என்று கூறியுள்ளார். நாங்கள் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஸ்மிரிதி இரானியை ஒரு அரசியல்வாதியாகவும், ஒரு பெண் தலைவராகவும் பார்க்கிறோம். பிரியங்கா மற்றும் ஸ்மிரிதி இரானியை வினய் கட்டியார் அவமானப்படுத்தியுள்ளார்,'' என்றார்.
''வினய் கட்டியார் சார்ந்துள்ள பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் சிந்தாந்தம் பெண்கள் வீட்டிற்குள் மட்டும் இருப்பவர்கள், குழந்தை பெறுவதும், ஆண்களுக்கு பணி செய்து கிடப்பதும்தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை கொண்டது. அவர் அதன்படி பேசியுள்ளார். அவரின் கருத்தோடு அவரின் சித்தாந்தமும் ஒழிக்கப்பட்டால்தான் இதுபோன்ற சர்ச்சைகள் முடிவுக்கு வரும்,'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர :பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்