அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை போலீசார் அப்பறப்படுத்தி வரும் சூழலில், தற்போது நடைபெறும் சம்பவங்கள் தனக்கு வேதனையளிப்பதாகவும், போராட்டக்காரர்கள் உடனடியாக அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறும் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அமைதியான முறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றிகரமாக நடந்த ஜல்லிக்கட்டு அறவழிப் போராட்டம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. ஆனால், தற்போது நடக்கும் சம்பவங்கள் மனத்துக்கு வேதனையளிக்கிறது'' என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அறவழிப் போராட்டத்துக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக கூறியுள்ள ரஜினிகாந்த், போராட்டத்தின் போது ஆதரவளித்து பாதுகாப்பு அளித்த காவலர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதற்கு இடம் கொடுக்காமல் நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இளைஞர்கள் உடனடியாக அறவழிப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கலைக்க போலிசார் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து முயன்று வருகையில், சென்னைக் கடற்கரையை ஒட்டியுள்ள பல பகுதிகளில் வன்செயல்கள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சென்னை கடற்கரையை அண்மித்த ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் வன்செயல்கள் நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், தமிழகத்தின் பல இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை போலீசார் அப்பறப்படுத்தி வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்