ஜல்லிக்கட்டு விவகாரம் : மாநில அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இச்சூழலில் இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த சில நாட்களாக மாநிலம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது.
பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து, பிரதமர் மோதியை சந்திக்க புதுதில்லி சென்றார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச்சட்டம் குறித்து பிரதமர் மோதியிடம் கோரிக்கை வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், உலகில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைப்படி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும், வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிக்குதித்து ஓடிவரும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தமிழக முதல்வரின் அறிக்கை கூறுகிறது.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் 1960 ஆம் ஆண்டின் மிருக வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் உத்தரவு நேற்று இரவு பெறப்பட்டதாகவும், இந்த அவசர சட்டத்திற்கான ஒப்புதல் மாநில ஆளுநரிடம் பெறப்பட்டதாகவும் அதில் கூறியுள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டதனால், அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் நாளை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வை நேரில் தொடங்கி வைப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்












