'பிரிஜ் பூஷணால் பாதிக்கப்பட்டவர் நான்' - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் வெளியிட்ட வீடியோ

பட மூலாதாரம், @Phogat_Vinesh
ஒலிம்பிக் வீராங்கனையும், இந்திய மல்யுத்த வீராங்கனையுமான வினேஷ் போகத், ஞாயிற்றுக்கிழமை தனது சமூக ஊடகப் பக்கத்தில் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, இந்திய மல்யுத்த சம்மேளனம் நடத்தும் ஒரு தரவரிசைப் போட்டி குறித்து பல சந்தேகங்களையும் அச்சங்களையும் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், "முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த 6 பெண் வீராங்கனைகளில் தானும் ஒருவர்" என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் கோட்டையான கோண்டாவில் ஒரு தரவரிசைப் போட்டி நடத்தப்படவுள்ளதாக இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளதாக வினேஷ் போகத் தெரிவித்தார். தனது பாதுகாப்பு மட்டுமன்றி, அந்தத் தொடர் நேர்மையாக நடக்குமா என்பது குறித்தும் வினேஷ் ஆழ்ந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் சஞ்சய் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் பேசுகையில், வினேஷின் பாதுகாப்பிற்குத் தான் 'தனிப்பட்ட முறையில் உத்தரவாதம்' அளிப்பதாகக் கூறினார். அதே நேரத்தில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் வினேஷ், இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
வினேஷ் போகத் தனது பல்வேறு சமூக ஊடகக் கணக்குகளில் வெளியிட்ட வீடியோவில், தானும் பாதிக்கப்பட்ட ஒருவர் (Survivor) என்று கூறியதோடு, இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால், தற்போதைய சூழல் காரணமாகத் தான் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வினேஷின் இந்த அறிக்கை குறித்து இந்தச் செய்தி வெளியாகும் வரை பிரிஜ் பூஷண் சரண் சிங் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இது தொடர்பாக ஏதேனும் பதில் அல்லது அறிக்கை வந்தால், அதைச் செய்தியில் இணைப்போம்.
கடந்த 2023-ஆம் ஆண்டு, அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவரும் முன்னாள் பிஜேபி எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராகப் பாலியல் சுரண்டல் புகார்களை முன்வைத்து போராட்டம் நடத்திய வீராங்கனைகளில் வினேஷ் போகத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் போகத் என்ன கூறியுள்ளார்?

பட மூலாதாரம், Boris Streubel/Getty Images for Laureus
வினேஷ் போகத் கூறுகையில், "ஒரு மாதத்திற்கு முன்பு மல்யுத்த சம்மேளனம் ஒரு தரவரிசைப் போட்டியை நடத்தப்போவதாக அறிவித்தது. இந்தப் போட்டி உபி-யில் உள்ள கோண்டாவில் நடத்தப்படுகிறது... அங்குதான் பிரிஜ் பூஷணின் வீடு மற்றும் அவரது தனியார் கல்லூரி உள்ளது."
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இந்தத் தரவரிசைப் போட்டி உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள நந்தினி நகர் மகாவித்யாலயாவில் மே 10 முதல் 12 வரை நடைபெற உள்ளது. கோண்டா முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் தான் நந்தினி நகர் மகாவித்யாலயாவின் நிறுவனர் ஆவார்.
அச்சம் தெரிவித்த வினேஷ், "அங்கு கடினமாக உழைக்கும் ஒவ்வொரு வீரருக்கும் உரிய நீதி கிடைக்கும் என்பது நடக்காத காரியம். எந்த நடுவர் யாருடைய போட்டிக்குச் செல்வார், யார் எத்தனை புள்ளிகள் தருவார், எந்த மேட் தலைவர் எங்கு அமருவார், யாரை ஜெயிக்க வைக்க வேண்டும், யாரைத் தோற்கடிக்க வேண்டும் என்பது அனைத்தும் பிரிஜ் பூஷணின் ஆட்களால் கட்டுப்படுத்தப்படும். அனைத்து வீராங்கனைகளின் எடையும் சரியாகப் பார்க்கப்படுமா, அவர்களின் கடின உழைப்புக்கான பலன் மேட்டில் கிடைக்குமா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை," என்றார்.

பட மூலாதாரம், David Ramos/Getty Images
வினேஷ் கூறுகையில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் எழுப்பினோம். ஆறு பெண் வீராங்கனைகள் புகார் அளித்திருந்தனர், அதன் அடிப்படையில் இன்றும் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளது. ஆனால் இன்று நான் உங்கள் அனைவரிடமும் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். புகார் அளித்த அந்த ஆறு பேரில் நானும் ஒருத்தி என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்." என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "ஏற்கனவே விளையாட்டு வீரர்களாகிய எங்களுக்கு மிகுந்த அழுத்தம் இருக்கிறது, அங்கு சென்று என்னால் 100 சதவீதம் சிறப்பாகச் செயல்பட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இத்தகைய சூழலில் ஒரு பெண் போட்டி போடுவது மிகவும் கடினம் என்று நான் கூறுவேன். இந்த நிலையை அனுபவிப்பவர்கள் யாராக இருந்தாலும் என்னுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியும்."
"நான் அந்தப் போட்டிக்குச் சென்றால், என்னுடன் எனது குழுவும், நலம் விரும்பிகளும் இருப்பார்கள். யாருக்காவது ஏதேனும் விபரீதம் நடந்தால், அதற்கு நேரடியாக இந்திய அரசுதான் பொறுப்பு."
"எனக்கு எந்தச் சலுகையோ அல்லது சிறப்பு மரியாதையோ தேவையில்லை. மேட்டில் எடுக்கப்படும் முடிவு ஒவ்வொரு வீரரின் கடின உழைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும், ஏதோ ஒரு ரவுடியின் விருப்பப்படி இருக்கக் கூடாது என்பதே எனது விருப்பம். அவர் யாரை நினைக்கிறாரோ அவரை ஜெயிக்க வைப்பார், யாரை நினைக்கிறாரோ அவரைத் தோற்கடிப்பார்."
'பாதுகாப்பிற்குத் தனிப்பட்ட உத்தரவாதம்'

பட மூலாதாரம், Vipin Kumar/Hindustan Times via Getty Images
வினேஷின் அறிக்கை குறித்துப் பேசிய இந்திய மல்யுத்த சம்மேளனம் தலைவர் சஞ்சய் சிங், வினேஷ் போகத்தின் பாதுகாப்பிற்குத் தான் 'தனிப்பட்ட உத்தரவாதம்' அளிப்பதாகக் கூறினார். ஆனால் அதே சமயம், வினேஷ் காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், இந்தப் பிரச்னையை அரசியல் ஆக்கக்கூடாது என்றும் கூறினார்.
சஞ்சய் சிங் நாளிதழிடம் கூறுகையில், "வினேஷின் பாதுகாப்பு குறித்து நான் தனிப்பட்ட உத்தரவாதம் அளிக்கிறேன். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக, அவரும் அவரது குழுவும் கோண்டாவில் முழுப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன். நானே நேரில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன். தயவுசெய்து வந்து மேட்டில் உங்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்துங்கள்."
மேலும் அவர், "மறுபுறம், அவர் அரசியல் செய்ய விரும்பினால் அது அவரது விருப்பம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், நான் அது குறித்துக் கருத்துச் சொல்ல மாட்டேன். உண்மை வெளிவரட்டும்," என்றார்.
"கோண்டாவில் நடைபெறவுள்ள தேசிய ஓபன் தரவரிசைப் போட்டிக்கு சுமார் 1200 விண்ணப்பங்கள் வந்துள்ளன, அவற்றில் சுமார் 800 விண்ணப்பங்கள் ஹரியானா மல்யுத்த வீரர்களுடையது. அவர்கள் யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை," என்றும் சஞ்சய் சிங் கூறினார்.
"நடுவர்கள் பாரபட்சமாக இருப்பார்கள் என்று வினேஷ் கவலைப்பட்டால், இந்தப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து நடுவர்களும் இந்திய மல்யுத்த சம்மேளனம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் குழுவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தத் தேர்வு முற்றிலும் நடுநிலையானது. யார் நடுவர் என்பதில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கோ அல்லது எனக்கோ எந்த பங்கும் இருக்காது," என்றார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான போராட்டம்

பட மூலாதாரம், ARUN THAKUR/AFP via Getty Images
2023-ஆம் ஆண்டு, இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எழுந்தன. சில இந்திய மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தினர். இருப்பினும், பிரிஜ் பூஷண் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.
மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட 'கேல் ரத்னா' மற்றும் 'அர்ஜுனா' விருதுகளை டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் விட்டுச் சென்றனர். இந்த விருதுகளைப் பிரதமரிடம் ஒப்படைக்குமாறு டெல்லி போலீசாரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம், வினேஷ் போகத் உள்ளிட்ட போராட்டக்காரர்களுக்குப் பின்னடைவாக, டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான 'போக்சோ' வழக்கை முடித்து வைத்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































