'ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்': இளைஞர்கள் கூட்டத்தால் அதிர்ந்த சென்னை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்றும், இதனை நடத்த ஏதுவாக மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டுமென்றும் வலியுறுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பேரணியொன்றை நடத்தினர்.

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை நடந்த இந்த பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இன்றைய பேரணியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இன்றைய ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், 'அறம்' அறக்கட்டளை அமைப்பின் நிறுவனருமான பாலக்குமார் சோமு பிபிசி தமிழிடம் இது குறித்து பேசிய போது, '' இன்று காலை 7 முதல் 9.30 மணி வரை நடந்த பேரணியில், ஏறக்குறைய 8000 முதல் 10, 000 பேர் வரை கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் இளைஞர்கள் தான். ஏராளமான பெண்களும் இதில் கலந்து கொண்டனர்'' என்று தெரிவித்தார்.

இன்றைய பேரணியின் நோக்கம் குறித்து பாலக்குமார் சோமு மேலும் தெரிவிக்கையில், ''மக்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு மத்திய அரசு இது குறித்து ஒரு அவசர சட்டம் இயற்ற வேண்டும். மாநில அரசும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பீட்டா போன்ற அமைப்புகள் இது தொடர்பாக தொடுத்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறித்து குறிப்பிட்ட பாலக்குமார் சோமு , '' நீதிமன்ற வழக்குக்கும், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கும் எந்த தொடர்புமில்லை. மத்திய அரசு இது குறித்து எவ்வித காலதாமதமுமின்றி ஓர் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

சமூகவலைத்தளங்களில் விடுத்த அழைப்பிற்காக பல ஆயிரக்கணக்கானோர் இன்றைய பேரணியில் திரண்டனர். எந்த அரசியல் கட்சிக்கும் இன்றைய பேரணிக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்த பாலக்குமார் சோமு, ''மாடுகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்தது மிகவும் தவறு. மாடுகளை வைத்து யாரும் பணம் சம்பாதிப்பது இல்லை. இதனை பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பேரவை வலியுறுத்தி வருகிறது'' என்று மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 2014-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பின்னர், தமிழக அரசின் வற்புறுத்தலால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நலவாரிய கூட்டமைப்புகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை ஏற்று இந்தாண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

கடந்த டிசம்பர் 7-ஆம் தேதியன்று நடைபெற்ற இவ்வழக்கின் விசாரணையில் அரசின் சார்பாக ஆஜரான அரசு முதன்மை வழக்கறிஞர் நரசிம்மா, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமென்றும், ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒரு தனி நிகழ்வாக பார்க்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து சங்க காலத்திலிருந்தே குறிப்புகள் இருக்கின்றன என்றும், இவை மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையே நிலவிய தொடர்புகளைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்ட மூத்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென்றும், இரண்டு ஆண்டுகளுக்கு மத்திய அரசு அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதியளித்து, பின்னர் இப்போட்டிகளை தொடர்ந்து நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

ஆனால், தடை விதிக்கப்பட்டதற்கு முன்னர் இருந்த சூழல்களும், காரணங்களும் தற்போதும் நிலவுவதால், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கூடாது என்று விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் விசாரணை தற்போது முடிவடைந்துள்ள சூழலில், தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.