You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரண்பேடி மீது ஒழுங்கு நடவடிக்கை கோரி புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புகார்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சியை மீறி ஆளுநராக உள்ள கிரண்பேடி மூலம் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெறும் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கடிதத்தை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை விதித்து முதல்வர் நாராயணசாமி பிறப்பித்த உத்தரவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரத்து செய்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசு அலுவகல ரகசியங்கள் சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்ட வழிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான அனந்தராமன் ஆளுநர் தனக்குரிய கடமைகளைச் செய்யாமல், அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றம் சாட்டினார். ''மத்திய அரசின் வழிமுறைப்படி அரசு கோப்புகள் அரசால் அளிக்கப்பட்டுள்ள இணையம் மற்றும் பிற தொடர்பு சாதனங்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது,'' என்று கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதாக சொல்லும் ஆளுநர் பேடி, இது வரை மத்திய அரசிடம் நிதி ஆதாரங்களைக் கோரும் வகையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்கிறார். ''நாங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு குறித்து கடிதம் அளித்துள்ளோம். தேவைப்பட்டால் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்திப்போம்,'' என்றார் அனந்த ராமன்.
தொடர்ந்து கிரண்பேடி தனது ட்விட்டர் தளத்தில் அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பேச முடியும் என்றும் தான் புதுச்சேரியில் பணி செய்யும் காலத்தில் ஒவ்வொரு நாளையும் அதன் வளர்ச்சிக்காக உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.