பாலியல் தாக்குதலி்ல் ஈடுபட்டவர்களுக்கு பாடம் கற்பித்த தடகள வீராங்கனை பூனியா

2017ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று பெங்களுருவில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கதாகவும், அதே போன்று நிழகவிருந்த ஒரு சம்பவத்தை தான் தடுத்ததாகவும், இந்திய ஒலிம்பிக் வீராங்கனை கிருஷ்ணா பூனியா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானின் சூறு மாவட்டத்தில் 2017 ஜனவரி 1ம் தேதி, ரயில்பாதை அருகில் மூன்று இளைஞர்கள் இரண்டு பதின்ம வயது பெண்களை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ய முயன்றனர். அதை கண்ட பூனியா, ''அவர்களை துரத்தி, ஒரு நபரை பிடித்து விட்டேன். பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை புகார் அளிக்கச் செய்தேன், '' என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

மிகவும் பரபரப்பான இடங்களில் கூட பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் தான் இருக்கிறார்கள் என்பதை தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது என்கிறார் பூனியா. ''நான் இந்தச் சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பரபரப்பான ரயில் பாதை அருகில், அதுவும் பல பேர் நடமாடும் அந்த இடத்தில் அந்த பதின்ம வயது பெண்களை பாலியல் சீண்டல் செய்ய முயல்கின்றனர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் காரில் இருந்து வெளியேறி, அவர்களை துரத்தி பிடிக்கும் வரையில், அங்கிருந்தவர்கள் யாரும் எதுவும் செய்ய முன்னவரவில்லை,'' என்றார்.

''இந்த நிகழ்வுக்கு பிறகு அந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர் மற்றும் நடுக்கமுற்றனர். இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தால்,தங்கள் குடும்பத்தினர் தாங்கள் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறி மறுத்துவிட்டனர்.

''குறைந்தபட்சம் ஒரு பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களாவது புகார் தர முடிவு செய்தனர்,'' என்றார் தடகள வீராங்கனை பூனியா.

.

தூண்டுதலாக இருந்த பூனியா

இதற்கிடையில் இந்தியாவில் ட்விட்டர் தளத்தில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆண்களை எதிர்த்து நின்ற பூனியாவுக்கு பாராட்டுக்கள் என கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

பூனியா பாதிக்கப்பட்ட பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாக பிபிசியிடம் தெரிவித்த காவல் ஆய்வாளர் கோபிராம், ''அவர்கள் அளித்த புகாரின் மீது விசரணைகள் தொடங்கிவிட்டன. அந்த ஆண்கள் மீது குற்றச்சாட்டு விரைவில் தாக்கல் செய்யப்படும். இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக பூனியாவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்தோம். பொது மக்கள் இது போன்ற சம்பவங்களின் போது, விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்றார்.