சவால்களைத் தாக்குப் பிடிப்பாரா சசிகலா?

காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாக இருந்த வி.கே. சசிகலா, அதிமுக பொது செயலாளரராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் எதிர்கொண்டு சமாளித்த சவால்கள் ஏராளம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஜெயலலிதாவின் தோழியாகவும், நிழலாகவும் இருந்த சசிகலா
படக்குறிப்பு, ஜெயலலிதாவின் தோழியாகவும், நிழலாகவும் இருந்த சசிகலா

சாதாரண குடும்பத்தில் பிறந்த சசிகலா, இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தமிழக ஆளுங்கட்சியுமான அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது வரை எண்ணற்ற திருப்பங்கள் கொண்டுள்ளது அவரது வாழ்க்கை.

1980-களின் துவக்கத்தில் தன் கணவர் நடராஜனின் மூலம், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரான சந்திரலேகாவின் அறிமுகம் சசிகலாவுக்கு கிடைத்தது.

சந்திரலேகாவின் மூலம் அப்போதைய அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரான ஜெயலலிதாவின் நட்பை சசிகலா பெற்றார். ஆரம்பத்தில் ஜெயலலிதா கலந்து கொண்ட அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்யும் வேலை சசிகலாவுக்கு கிடைக்க, அடுத்த வந்த 33 ஆண்டுகளில் இருவரும் உற்ற தோழிகளாக, அமைய இது உதவியது.

'சசிகலா எனது உடன் பிறவா சகோதரி'

பரமபத விளையாட்டில் இருப்பதை போல ஜெயலலிதா மற்றும் சசிகலா இடையிலான நட்பும் பல ஏற்றம், இறக்கங்கள் கொண்டது.

''சசிகலா எனது உடன் பிறவா சகோதரி போன்றவர். அவரிடம் எனது மனதில் உள்ள பல விஷயங்களையும் நான் பகிர்ந்து கொள்வேன். என் தாய் இப்போது உயிரோடு இருந்தால் என்னை எவ்வாறு பார்த்து கொள்வாரோ, அவ்வாறு சசிகலா என்னை பார்த்துக் கொள்கிறார்.'' என்று சசிகலா குறித்து ஒரு முறை ஊடகங்களிடம் பேசிய போது ஜெயலலிதா தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா

பட மூலாதாரம், Image copyrightIMRAN QURESHI

படக்குறிப்பு, தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா

தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் பொதுக்குழு தீர்மானத்தில், ''மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் வாழ்ந்து, அவரை கண்ணை இமை காப்பது போல் காத்த, அவரின் உடன் பிறவா சகோதரியாக விளங்கிய , தொண்டர்களால் 'சின்னம்மா' என்றழைக்கப்படும் திருமதி. வி. கே. சசிகலாவே கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்ற உகந்தவர் என்பதால், அவரை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க இந்த பொதுக்குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

சசிகலாவின் உறவினர்கள் பலரும் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். சசிகலாவின் அக்கா மகன் டி .டி வி. தினகரன் அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்தார்.

பத்திரிகையாளர் சோவுடன் சசிகலா
படக்குறிப்பு, பத்திரிகையாளர் சோவுடன் சசிகலா

தினகரனின் மூலம் ஜெயலலிதாவின் கவனத்தை பெற்ற ஓ. பன்னீர்செல்வம்

சசிகலாவின் உறவினர்கள் பலரின் செல்வாக்கால், பலர் அதிமுகவில் கட்சி பதவிகளையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் பெற்றதாக கூறப்படுகிறது.

பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் டி .டி வி. தினகரன் போட்டியிட்ட போது, பிரசார பணியில் ஈடுபட்ட தற்போதைய தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தினகரனின் கவனத்தையும், அதன் மூலம் ஜெயலலிதாவின் அறிமுகத்தையும் பெற்றார்.

ஓ. பன்னீர்செல்வம்

அதே வேளையில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் தலையீடுகள் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகமாக இருந்ததாக அரசு அதிகாரிகள், அதிமுகவினர் மற்றும் ஊடகங்களில் பலமுறை புகார் எழுந்ததுண்டு.

சசிகலாவுக்கு வேண்டாதவர்களாகி விட்ட பல அதிமுக தலைவர்கள் அதற்கு பிறகு கட்சியில் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு.

சர்ச்சைகளை ஏற்படுத்திய வளர்ப்பு மகன் திருமணம்

சசிகலாவின் உறவினரான சுதாகரனை தனது வளர்ப்பு மகனாக ஜெயலலிதா அறிவித்தார். கடந்த 1995-ஆம் ஆண்டில், சுதாகரனுக்கு ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆடம்பரத் திருமணம் பல சர்ச்சைகளை உருவாக்கியது.

கடந்த 1991-1996-இல் அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான டான்சி (தமிழ்நாடு சிறுதொழில் கழகம்) நிலத்தை வாங்கியது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியதோடு, ஜெயலலிதாவுக்கு தண்டனையையும் பெற்றுத் தந்தது. பின்னர் அந்த வழக்கை அவர் உச்சநீதிமன்றத்தில் வென்றார்.

தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு தண்டனை விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

தற்போது அந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் அரசியல் வாழ்க்கையில் மட்டுமல்ல அதிமுகவின் அரசியல் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் தீர்ப்பாக இருக்கும் என்பது மிகையில்லை.

தனது நேரடி அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள சசிகலா

பட மூலாதாரம், AIADMK

படக்குறிப்பு, தனது நேரடி அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள சசிகலா

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா

கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற மற்றும் நாடளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். ஆனால், அவர்கள் கட்சியை விட்டு விலக்கப்படவில்லை.

கடந்த 2011 டிசம்பர் 11-ஆம் தேதியன்று, யாரும் எதிர்பாராத வகையில், தனக்கும், தனது ஆட்சிக்கு எதிராக சசிகலாவின் குடும்பத்தினர் சில முயற்சிகளில் ஈடுபடுவதாகக் தெரிவித்த ஜெயலலிதா, சசிகலாவை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.

சசிகலா உள்பட பத்துக்கும் மேற்பட்ட அவரது குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

அதற்குப் பிறகு அவரது சகோதரர் திவாகரன் கைது செய்யப்பட்டார். வி. மகாதேவனது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.

2011-இல் சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2011-இல் சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்

பின்னர், அதற்கு மூன்று மாதங்களுக்கு பின்னர், சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்டு மீண்டும் , தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாக தெரிவித்த ஜெயலலிதா, அதே நேரத்தில், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட, அவரது உறவினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

சசிகலா

பட மூலாதாரம், Image copyright

காலம் மாறியது; காட்சிகளும் மாறியது

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பல சசிகலாவின் உறவினர்களும், தற்போது அவர் மறைவின் பின்னர் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடலைச் சுற்றி நின்ற சசிகலாவின் உறவினர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது உடலைச் சுற்றி நின்ற சசிகலாவின் உறவினர்கள்

ஜெயலலிதா காலமான பிறகு இந்த உறவினர்களே அவரது உடலைச் சுற்றி நின்றது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதிமுகவின் பொதுக் செயலாளராக சசிகலா ஆகியுள்ள இந்நேரத்தில், அவரது உறவினர்களை வாழ்த்தியும், புகழ்ந்தும் சில அதிமுக நிர்வாகிகள் பதாகைகளை வைத்து வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளங்களில் சசிகலா மற்றும் அவரது உறவினர்களை புகழ்ந்து பதிவிடுகின்றனர்.

சில அதிமுக நிர்வாகிகள் சசிகலா தமிழக முதல்வராக வேண்டுமென்றும் , அதற்கு ஓ.பன்னீர்செல்வம் வழிவிடமென்றும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். வரும் நாட்களில், இவர்களின் கோரிக்கை தீவிரம் பெறுமா, தமிழக முதல்வராக சசிகலாவை முன்னிறுத்துவார்களா என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

இளவரசி, சசிகலா

பட மூலாதாரம், KASHIF MASOOD

படக்குறிப்பு, தனது உறவினர் இளவரசியுடன் சசிகலா

சசிகலா சந்திக்கவுள்ள சவால்கள்

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சில இடங்களில்அதிருப்தி வெளிப்படுத்தியுள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணிக்கை கூடுமா ஆகியவை, இனி வரும் நாட்களில் சசிகலா சந்திக்கும் முக்கிய சவால்களாக அமையும்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாகவும், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்த மாநில அரசு தவறிவிட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு கூறியுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக நடிகை கௌதமி, பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் அனுப்பினார். ஜெயலலிதாவின் தோழி என்று கூறப்படும் கீதா என்பவரும் இது குறித்த ஐயங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனை தமிழக அரசு மற்றும் அதிமுக எவ்வாறு அணுகப் போகிறது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

ஜெயலலிதாவின் உருவப்படத்தை அதிமுக தலைவர்களுடன் வணங்கும் சசிகலா

பட மூலாதாரம், AIADMK

படக்குறிப்பு, ஜெயலலிதாவின் உருவப்படத்தை அதிமுக தலைவர்களுடன் வணங்கும் சசிகலா

இது வரை ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, நிஜமான அவதாரம் எடுத்துள்ளார்.

தற்போது, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பில்லாமல் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா, வரும் நாட்களில் தான் சந்திக்கும் சவால்களை எவ்வாறு எதிர் கொள்வார் என்பதும், அவரது உறவினர்கள் அவருக்கு உறுதுணையாக இருப்பார்களா அல்லது சர்ச்சைகளை உண்டாக்குவார்களா என்பதை பொறுத்தே சசிகலாவின் எதிர்காலம் அமையும்.