You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய முஸ்லிம் பெண்கள் புர்கா ஆடை அணிவது கட்டாயமா? கலாசாரத்துக்காகவா அல்லது கடமைக்காக அணிகிறார்களா?
சமூக ஊடகங்களில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி வெளியிட்ட அவரது மனைவியின் புகைப்படம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
அவரது புகைப்பட பதிவுக்கு பதிலளித்த சிலர், முகமது ஷமியை இஸ்லாத்தைப் பின்பற்றுமாறும், அவரது மனைவி ஹிஜாப் மற்றும் நாகரீகமான உடை உடுத்துவதை உறுதிப்படுத்துமாறும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சர்ச்சை குறித்தும், இஸ்லாமிய முறைப்படி உடை அணிவது குறித்து எழும் விவாதங்கள் குறித்தும், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாதிக் பிபிசி தமிழோசையிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
''மேற்கு வங்காளம், தமிழகம் குறிப்பாக தென் தமிழகத்தில் புர்கா (முகத்தை மறைக்கும் துணி) அணிவது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. தமிழகத்திலும், ஏன் இந்தியாவிலும் புர்கா அணிவது சற்றே ஒரு புதிய வரவு தான்'' என்று புர்கா உடை கலாசாரம் குறித்து பேராசிரியர் சாதிக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ''அக்காலத்தில் ஹஜ் புனித பயணம் செல்வது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், தற்போது அது எளிதாகி விட்டது. இவ்வாறு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சிலர் , அங்கு தாங்கள் சென்று வந்ததை வெளிக்காட்டுவதற்காக புர்கா அணிந்து வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.
''மேலும், தாலிபன் போன்ற இயக்கத்தினர் புர்கா அணிவதை கட்டாயமாக்கி உத்தரவிடுகின்றனர். இது தற்போது பலர் புர்கா உடை அணிவதற்கு காரணமாக உள்ளது'' என்று தெரிவித்த சாதிக், தன்னை போன்ற பலர் புர்கா அணிவது காட்டாயமில்லை என்று கருத்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
''ஆனால், அதே நேரத்தில் பெண்கள் புற அழகை காட்டும் உடைகளை அணிய வேண்டியது தேவையில்லை என்றும், அது தவிர்க்கப்படலாம்'' என்று சாதிக் கூறினார்.
புர்கா உடை அணிவது இந்தியாவில் எப்போது பிரபலமானது?
இஸ்லாமிய கோட்பாடுகளின்படி உடை அணிவது குறித்து கருத்துத் தெரிவித்த சாதிக், ''இஸ்லாமிய முறைப்படியும், முகமது நபியின் வாக்கின்படியும் பெண்கள் தங்கள் கணவரை தவிர மற்றவர்களுக்கு தங்கள் உடல் தெரியாத வகையில் ஆடை அணிய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த 10 முதல் 20 ஆண்டுகள் வரை தான் புர்கா உடை அணியும் கலாச்சாரம் பரவி வருகிறது. ஆனால், அவ்வாறு புர்கா உடை அணிபவர்கள் அதனை நன்கு புரிந்து கொண்டு அணிகிறார்களா அல்லது கடமைக்காக அணிகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது'' என்று தெரிவித்தார்.
நேர்த்தியான உடை அணிய வேண்டும்
நவநாகரீக உடை என்ற பெயரில் பிகினி போன்ற உடைகள் அணிவது சரியாக இருக்காது. இஸ்லாமிய கலாசாரத்தை பின்பற்றும் அதே வேளையில், தலை முதல் கால் வரை மறையும் உடை அணிவது கட்டாயமில்லை என்பதே தனது கருத்து என்று சாதிக் குறிப்பிட்டார்.
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். அமைப்பினர், தாலிபன் அமைப்பினர் போன்றவர்களின் வருகைக்குப் பின்னர் இசை, ஆடை அணிவது போன்ற பல அம்சங்களில் புதிய பாணிகள் உருவாகி வருவதாக பேராசிரியர் சாதிக் மேலும் தெரிவித்தார்.