அம்மு முதல் அம்மா வரை: எத்தனை பெயர்கள், அடைமொழிகள்?

காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டு பெயர்கள் உண்டு. அவரது மற்றொரு பெயர் கோமளவல்லி. இது அவரது பாட்டியின் பெயராகும். பின்னர் அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததிலிருந்து ஜெயலலிதா என்ற பெயரே நிலைத்தது.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா அவரை 'அம்மு' என்றழைப்பார். ஜெயலலிதாவின் பல திரையுலக நண்பர்களும், அவரது தாயார் அழைப்பதை போலவே 'அம்மு' என்றே அழைத்தனர். 'அம்மு' என்று அவரை அழைப்பவர்கள் அக்காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கியவர்களாக விளங்கினார்கள்.

ஜெயலலிதா அரசியலில் நுழைந்த காலத்திலும், அவர் அதிமுகவின் ஒரு பிரிவை வழிநடத்த ஆரம்பித்த 1989-ஆம் ஆண்டு காலட்டத்திலும் பல அதிமுகவினரும் அவரை 'மேடம்' என்றே அழைத்தார்கள். தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவரும், 1989 காலகட்டத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக விளங்கிய திருநாவுக்கரசர் போன்றோர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து உரையாடும் போதும், பேட்டிகளிலும், 'மேடம்' என்றே குறிப்பிட்டனர்.

ஆரம்பத்தில் ஜெயலலிதா குறித்து குறிப்பிடும் போது, அன்றைய அதிமுக தலைவர்களில் ஒருவரும், பின்னாட்களில் திமுக அமைச்சருமான நாஞ்சில் மனோகரன் ' செல்வி ஜெயலலிதா' என்று கூறினார். ஜெயலலிதா திருமணமாகதவர் என்பதால் நாஞ்சில் மனோகரன் கூறியது போல பல தலைவர்களும், குறிப்பாக வட இந்திய தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும் ஜெயலலிதாவை 'செல்வி' என்றோ 'செல்வி ஜெயலலிதா' என்றோ குறிப்பிட்டு வந்தனர்.

அதிமுகவின் நிறுவனத் தலைவரான எம்ஜிஆர் 'புரட்சித் தலைவர்' என்றே அவரது கட்சியின் தொண்டர்களால் அழைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து கட்சியை வழிநடத்தியவரும் , கட்சியின் பொது செயலாளருமான ஜெயலலிதாவை 'புரட்சித் தலைவி' என்ற அழைக்க ஆரம்பித்தனர்.

'தங்க தாரகை' , 'ஜான்சி ராணி' - இவையெல்லாம் அதிமுகவினரும், அவரின் நலன் விரும்பிகளும் ஜெயலலிதாவுக்கு அளித்த பட்டங்களாகும்.

பின் வந்த ஆண்டுகளில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவரின் செயல்பாடுகளால், அவரது கட்சியினர் மற்றும் பிற கட்சியினர், சமூக இயக்கத்தினர் 'சமூக நீதி காத்த வீராங்கனை' , 'காவிரி தந்த கலைச்செல்வி' என்று பல அடைமொழிகளை வழங்கினர்.

ஆனால், இவற்றை எல்லாம் விட அவருக்கு நிலைத்து நின்ற அடைமொழி அல்லது பெயர் 'அம்மா' என்பது மட்டுமே. ஆரம்பத்தில் அதிமுகவினரால் மட்டும் 'அம்மா' என்றழைக்கப்பட்ட ஜெயலலிதா, பிற்காலங்களில் கூட்டணிக் கட்சிகள், மாற்றுக் கட்சியினர், திரையுலகினர் என்று பலராலும் அவ்வாறே அழைக்கப்பட்டார்.

'அம்மா' என்பது ஜெயலலிதாவின் சொந்த பெயர் போல பலரின் மனதில் தங்கிவிட்டது.

அரசு நலத்திட்டங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கும் உணவகங்கள் தொடங்கப்பட்டபோது, அந்த கேண்டீன்களுக்கும் அம்மா உணவகம் என்ற பெயர் சூட்டப்பட்டு, பின்னர் அவரது அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்டங்களுக்கும் ’அம்மா’ என்ற அடைமொழி தரப்பட்டது. இது போல அரசு திட்டங்களுக்கு தனது புனை பெயரை சூட்டி, தனக்கு சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

எண்ணற்ற அடைமொழிகள் மற்றும் பெயர்கள் இருந்தாலும், அம்மு மற்றும் அம்மா ஆகியவை ஜெயலலிதாவை அவரின் நலன்விரும்பிகள் மற்றும் மக்களிடமும் வெகுவாக இணைத்த பெயர்களாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: