ஜெயலலிதா காலமானார்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ''தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் காலமானார்'' என்று தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 22-ஆம் தேதியன்று, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலில், காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

காணொளி

லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீல் வரவழைக்கப்பட்டார். அவர் சென்னையில் தங்கியிருந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார். அப்போலோ மருத்துவக் குழுவினருக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தார்.

அதே நேரத்தில், டெல்லியில் இருந்து அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவர்களும் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கினர்.

சமீபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவர் தனியறைக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வர் பூரண குணமடைந்துவிட்டதாகவும் எப்போது வீடு திரும்புவது என்பதை அவரே முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார்.

காணொளி

மேலும் வாசிக்க

இந்த நிலையில் அவரது உடல்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீர் பின்னடைவு ஏற்பட்டது..

அவரது உடல்நிலை குறித்துக் கேள்விப்பட்டதும் ஏராளமான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் மருத்துவமனை முன்பு கூடியுள்ளனர்.

தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ், பின்னிரவில் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல்களை நேரடியாகக் கேட்டறிந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது தொடர்பாக மருத்துவர்கள் விளக்கமளித்தார்கள்.

பாதுகாப்பு அதிகரிப்பு

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியானதுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தலைநகர் சென்னையில் மருத்துவமனை முன்பும், நகரின் முக்கியப் பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.