You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கு ஊதியம் எவ்வளவு?
இரண்டு லட்சம் ரூபாய்க்கும் சற்று அதிகமாக மாத ஊதியம் பெறும் இந்திய ரிசர்வ் வங்கியின்ஆளுநர் உர்ஜித் படேலின் வீட்டில் ரிசர்வ் வங்கியின் சார்பாக உதவி ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட உர்ஜித் படேல், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான வீட்டில் (துணை ஆளுநருக்கு வழங்கப்படும் வீடு) தங்கி வருகிறார் என்று தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், இது தொடர்பாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விடையளித்த ஆர்பிஐ, ''தற்போதைய ஆர்பிஐ ஆளுநரான உர்ஜித் படேலின் வீட்டில் பணியாற்ற ரிசர்வ் வங்கியின் சார்பாக உதவியாட்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போதைய ஆளுநருக்கு, ரிசர்வ் வங்கியின் சார்பாக இரண்டு வாகனங்கள் மற்றும் இரண்டு வாகன ஓட்டிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது'' என்றுதெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கேட்கப்பட்ட கேள்வியில், முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் தற்போதைய ஆர்பிஐ ஆளுநரான உர்ஜித் பல படேல் ஆகியோர் பெறும் ஊதியம் குறித்த விவரம் கேட்கப்பட்டது.
ஆர்பிஐ ஆளுநராக உர்ஜித் பட்டேல் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், கடந்த அக்டோபர் மாதத்தில் அவர் பெற்ற முழு மாத ஊதியம் 2.09 லட்சம் என்றும், இதே ஊதியத்தை தான் ரகுராம் ராஜன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதியன்று, அப்போதைய ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி விலகிய போது, அவருக்கு நான்கு நாட்கள் ஊதியமாக 27,933 ரூபாய் வழங்கப்பட்டது.
கடந்த 2013 செப்டம்பர் 5-ஆம் தேதியன்று, ரகுராம் ராஜன் ஆர்பிஐ ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட போது, அவர் 1.69 லட்சம் ரூபாய் மாத ஊதியம் பெற்றார். பின்னர், 2014 மற்றும் 2015 மார்ச் மாதத்தில், அவரது மாத ஊதியம் முறையே 1.78 லட்சம் ரூபாய் மற்றும் 1.87 லட்சம் ரூபாயாக திருத்தியமைக்கப்பட்டது. இந்தாண்டு ஜனவரி மாதத்தில், அவரது மாத ஊதியம், 2.04 லட்சம் ரூபாயிலிருந்து 2.09 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதாக ஆர்பிஐ, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளது.
மூன்று கார்கள் மற்றும் நான்கு வாகன ஓட்டிகளை முந்தைய ஆளுநரான ரகுராம் ராஜனுக்கு ஆர்பிஐ வழங்கியிருந்தது.
''மும்பையில் ரகுராம் ராஜனுக்கு ஆர்பிஐ வழங்கியிருந்த மாளிகையில் அவருக்கு உதவியாக பணியாற்ற ஒரு காவல் பொறுப்பாளர் மற்றும் ஒன்பது பராமரிப்பு பணியாளர்களை ஆர்பிஐ அளித்தது'' என்று ஆர்பிஐ மேலும் தெரிவித்துள்ளது.
அண்மையில், நாட்டின் மத்திய வங்கியான ஆர்பிஐயின் தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுருக்க இறுதி பட்டியல் மற்றும் உர்ஜித் பட்டேலின் நியமனம் ஆகியவை குறித்த தகவல்களை வெளியிட மறுத்த மத்திய அரசு, இத்தகவல்கள் முக்கிய அமைச்சரவை ஆவணங்கள் என்றும் இவற்றை பொது மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக வைக்க இயலாது என்றும் தெரிவித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதியன்று ரகுராம் ராஜனுக்கு பதிலாக இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.