You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா முன்பு எதிர்ப்புத் தெரிவித்த திட்டங்கள், இப்போது ஏற்கப்படுவது ஏன்? - மு.க. ஸ்டாலின் கேள்வி
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றுவதற்கு முன்பாக எதிர்ப்புத் தெரிவித்த திட்டங்கள் அனைத்திற்கும் தற்போது தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பது எப்படி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மின்சார வாரியம் தொடர்பான "உதய் திட்டம்", தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், மருத்துவக் கல்லூரிகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாநில அரசு தனது பழைய கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் முற்றிலும் மறந்துவிட்டு, அந்த திட்டங்களுக்கு எல்லாம் ஒப்புதல் தெரிவித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் பிரதமரை ஜெயலலிதா சந்தித்தபோது அளித்த மனுவில், சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டை ஏற்படுத்தும் ஜிஎஸ்டி வரியை ஏற்க முடியாது என்றும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டண உயர்வை ஏற்படுத்தும் உதய் திட்டத்தை ஏற்க முடியாது என்றும் கூறியிருப்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மாநிலத்தின் சமூக, பொருளாதார நோக்கங்களுக்கு எதிரான மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை ஏற்க முடியாது என்றும் ஜெயலலிதா முன்பு கூறியிருந்ததையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக எதிர்ப்புத் தெரிவித்த இந்த நான்கு திட்டங்களுக்கு இப்போது தமிழக அரசு எப்படி மாற்றிக்கொண்டது என்றும், மாநில நிர்வாகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவும் நேரத்தில் அரசு முன்பு எதிர்ப்பு தெரிவித்த அத்தனை திட்டங்கள், சட்டங்கள் எல்லாவற்றிற்கும் அவசர அவசரமாக அனுமதியளிக்க வேண்டிய நிர்பந்தம் இந்த ஆட்சிக்கு ஏன் வந்திருக்கிறது என்றும் ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
குளிர்காய நினைப்பது யார்?
மாநிலத்தில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில் எங்கிருந்தோ குளிர் காய நினைப்பது யார் என்றும் யாருடயை நிகழ்ச்சி நிரலின்படி அதிமுக ஆட்சி செயல்படுகிறது என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
அதேபோல, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ரகசியமாக இருப்பது ஏன் என்றும் ஸ்டாலின் கேட்டிருக்கிறார்.
மின்வாரியம் தொடர்பான உதய் திட்டத்தின்படி, மாநில மின்வாரியங்களுக்கு இருக்கும் 75 சதவீதக் கடனை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலக் கடன்களையும் படிப்படியாக மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, சரியான இலக்குகளுடன் செயல்படும் மாநில மின்வாரியங்களுக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கூடுதல் நிதியுதவி செய்யப்படும். கூடுதல் நிலக்கரி ஒதுக்கீடு, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சார ஒதுக்கீடு போன்றவை செய்யப்படும். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததது.
மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்களைத் தேர்வுசெய்ய வேண்டுமென கொண்டுவரப்பட்ட விதிகளையும் தமிழக அரசு எதிர்த்தது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே பொதுவிநியோகத் திட்டம் சிறந்த முறையில் செயல்படுவதால், குறிப்பிட்ட பயனாளிகளுக்கு உணவு உத்தரவாதத்தை அளிக்கும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்க முடியாது என தமிழக அரசு கூறிவந்தது.