You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – 2300-க்கும் மேற்பட்டோர் பலி
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பின்னதிர்வு வகையில் சேராது என்று அதிகாரிகள் கூறினர்.
சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சிரியா, துருக்கி, லெபனான், சைப்ரஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.
உலகம் எங்கிலும் இருந்து தலைவர்கள் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக உறுதி அளித்துள்ளனர்.
பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்தார்.
கடந்த 84 ஆண்டுகளில் இது மோசமான பேரிடர் என்று துருக்கி அதிபர் எர்துவான் கூறியுள்ளார். 1939-ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 33 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்காக ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் பல நூறு பேர் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பது கடுமையான பருவநிலை காரணமாக மிகவும் சிரமமாக உள்ளது.
தியர்பாகிரில் உள்ள பிபிசி துருக்கி செய்தியாளர், நகரத்திலுள்ள ஒரு வணிக வளாகம் இடிந்து விழுந்ததாகத் தெரிவித்தார்.
சிரியாவில், அலெப்போ, ஹமா, லதாகியா ஆகிய பகுதிகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள முகமது எல் சாமா என்ற மாணவர் பிபிசியிடம் பேசியபோது, "நான் எதையோ எழுதிக் கொண்டிருந்தபோது, திடீரென்று முழு கட்டடமும் குலுங்கியது. என்ன செய்வது என்று என்னால் சிந்திக்க முடியவில்லை," என்று தெரிவித்தார்.
மேலும், "நான் ஜன்னலுக்கு அருகில் இருந்தேன். அதனால், அவை உடைந்துவிடுமோ என்று அஞ்சினேன். இது நான்கு-ஐந்து நிமிடங்கள் நீடித்தது. அது மிகவும் பயங்கரமாக இருந்தது," என்று அவர் கூறினார்.
காசா பகுதியில் உள்ள பிபிசி தயாரிப்பாளரான ருஷ்டி அபுவலூஃப், அவர் தங்கியிருந்த வீட்டில் சுமார் 45 விநாடிகள் நடுக்கம் ஏற்பட்டதாகக் கூறினார்.
இந்த நிலநடுக்கத்தின் வலிமை ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவாகியுள்ளதாக துருக்கிய நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நிமிடங்களில் இரண்டாவது நிலநடுக்கம் அப்பகுதியில் தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.
துருக்கி உலகின் மிகவும் தீவிரமான நிலநடுக்க மண்டலங்களில் ஒன்று.
1999ஆம் ஆண்டில், நாட்டின் வடமேற்கில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 17,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.
நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது?
பூமியின் மேலடுக்கு தட்டுகள் எனப்படும் தனித்தனி பாகங்களாக உள்ளன. ஒவ்வொன்றும் மற்றொன்றை நெருக்கியபடி அமைந்திருக்கின்றன.
இந்த அமைப்பு அவ்வப்போது நகருவதற்கு முயற்சி செய்கிறது. ஒரு தட்டு நகர முயற்சிக்கும்போது மற்றொரு தட்டு அதைத் தடுக்கிறது. இதனால் உராய்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் ஒன்று மற்றொன்றின் மீது மோதி மேற்பரப்பில் அதிர்வை ஏற்படுத்துகிறது. இதைத்தான் ஆய்வாளர்கள் நிலநடுக்கம் என்கிறார்கள்.
தற்போது துருக்கியில் ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கம் அரேபியன் தட்டும் அனத்தோலிய தட்டும் உரசியதால் ஏற்பட்டிருக்கிறது.
பூமித் தட்டுகள் நகர்ந்து உராய்ந்ததால் மிகப் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: