சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்டோரியா கௌரி நீதிபதி நியமனத்திற்கு எதிராக எழும் கலக குரல்: எதிர்ப்பும் ஆதரவும் ஏன்?

    • எழுதியவர், விஷ்ணு பிரகாஷ்
    • பதவி, பிபிசி தமிழ்

உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் சார்பாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இந்தப் பட்டியலில் உள்ள பெண் வழக்கறிஞரான விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்கக்கூடாது எனக் கூறி வழக்கறிஞர்கள் குழு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியது.

இதே வழக்கறிஞரை நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவித்து மற்றொரு வழக்கறிஞர் குழு கடிதம் எழுதி இருக்கிறது.

இந்நிலையில், இன்று அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே நபருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுவதன் பின்னணி என்ன?

யார் இந்த விக்டோரியா கௌரி?

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இவர் பதவி வகிக்கிறார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

நியமனத்திற்கு எதிராக எழுந்த எதிர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 21 வழக்கறிஞர்கள் பிப்ரவரி 2ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட கொலீஜியத்தின் 3 நீதிபதிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞராகப் பணிபுரியும் லெக்‌ஷ்மண சந்திரா விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் வழங்கிய பரிந்துரைகளை திரும்பப் பெறுமாறு மூத்த வழக்கறிஞர்களான என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை உள்ளிட்ட 21 பேர் கோரிக்கை வைத்துள்ளனர்.

விக்டோரியா கௌரி, சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்பு பேச்சுகளைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தைத் திரும்பப் பெறுமாறு அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிபதியாக வரும் நபர்கள் எந்தச் சார்பு நிலையும் இல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதிப்புகளையும் மாண்புகளையும் காக்க வேண்டும். விளிம்புநிலை மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பயன்படுத்தி அவர்களை துன்பத்தில் ஆழ்த்தக்கூடாது.

இது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் விக்டோரியா கௌரியின் வெறுப்பு பேச்சுகள் இதை மீறும் வகையில் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் யுடியூப் பக்கத்தில், "தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பாதிப்பாக இருப்பவர் யார்: ஜிஹாத்தா அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளா? - விக்டோரியா கௌரியின் பதில்கள்" என்ற தலைப்புடன் இருக்கும் வீடியோவின் லிங்கையும், "பாரதத்தில் கிறிஸ்துவ மிஷனரிகளின் கலாசார படுகொலை - விக்டோரியா கௌரி" என்ற தலைப்பில் இருக்கும் மற்றொரு வீடியோவின் லிங்கையும் அந்தக் கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இரண்டு வீடியோக்களிலும் விக்டோரியா கௌரி பேசிய கருத்துகள் சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக உள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் இந்த வீடியோக்களில் விக்டோரியா கௌரி பேசியதையும் வழங்கறிஞர்கள் தங்களின் கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் உள்ள லிங்கில் இருக்கும் ஒரு வீடியோ தற்போது பொதுமக்களின் பார்வைக்கு தெரியவில்லை. அந்த வீடியோ தற்போது பிரைவேட்டாக வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீடியோவில் அவர் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

விக்டோரியா கௌரிக்கு ஆதரவு

சென்னை வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தைப் போலவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை சேர்ந்த 54 வழக்கறிஞர்கள் ஒரு கடிதத்தை கொலீஜியத்திற்கு அனுப்பி இருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தில் விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், "18 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இருந்து நீதிபதியாக இருக்கிறார். விக்டோரியா கௌரி சட்டத்தின் வளர்ச்சிக்காக பங்களிப்புகளை வழங்கியுள்ளவர்.

இதற்கு முன்பு வழங்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளான பலரும் அரசியல் கட்சிகளில் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் விக்டோரியா கௌரி நியமனத்தின்போது மட்டும் அவரின் அரசியல் சார்பு நிலையை விமர்சனம் செய்கின்றனர்.

அவரின் நியமனம் அரசியல் ரீதியாக நடக்கவில்லை. விக்டோரியா குறித்த தகவல்கள் காவல்துறை, உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் தான் கொலிஜீயத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழங்கறிஞர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் பக்க சார்பின்றி நியாயமாகத் தங்களது சட்டப் பணிகளைச் செய்துள்ளனர்.

அவர்களைப் போல விக்டோரியாவும் செயல்படுவார். அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய எழுந்த கோரிக்கையைப் புறந்தள்ள வேண்டும்," என்று அந்தக் கடிதத்தில் 54 வழங்கறிஞர்கள் கையெழுத்திட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட கொலீஜியத்தின் 3 நீதிபதிக்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

'அரசியல் சாசனத்தை மீறியுள்ளார்'

விக்டோரியா கௌரியின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதிய வழக்கறிஞர்களில் ஒருவரான என்.ஜி.ஆர்.பிரசாத் பிபிசியிடம் பேசியபோது, விக்டோரியா கௌரி பல சந்தர்ப்பங்களில் சாதி, மதம் அடிப்படையில் வெறுப்புப் பேச்சுகளை வெளிப்படுத்தி இருப்பதாகக் கூறினார்.

மேலும் அவர், "மதச்சார்பற்ற நிலைக்கு எதிராக அவர் பேசியிருக்கும் கருத்துகளைச் சுட்டிக்காட்டி அவரால் நடுநிலையாகச் செயல்பட முடியாது என நாங்கள் கருதுகிறோம்.

இதற்கு முன்பு திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களாக இருந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மத ரீதியான வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய யாரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது கிடையாது.

விக்டோரியா கௌரியின் அரசியல் நிலைப்பாட்டையோ, அவர் கட்சியில் இருப்பதையோ நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அவரது கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் அரசியல் சாசனத்திற்கு எதிராகப் பேசியிருப்பதைத்தான் கொலீஜியத்திற்கு சுட்டிக்காட்டி கடிதம் எழுதியிருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

நியமனம் திரும்பப் பெறப்படுமா?

விக்டோரியா கௌரியின் நியமனத்திற்கு ஆதரவும் எழுப்பும் ஒரே நேரத்தில் எழுந்துள்ள நிலையில் அவரது நியமனம் ரத்து செய்யப்படுமா என்று ஓய்வுப் பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் பிபிசி தமிழ் கேட்டபோது அவர், "விக்டோரியா கௌரியின் மீது வெறுப்புப் பேச்சு தொடர்பான சர்ச்சை மட்டுமே எழுந்துள்ளது. அவருக்கு எதிராக வழக்குகள் ஏதுமில்லாத நிலையில், இந்த நியமனத்தில் எந்தச் சிக்கலும் ஏற்பட வாய்ப்பில்லை," என்றார்.

கொலிஜீயத்தின் பரிந்துரையின்போது, குறிப்பிட்ட மதத்திற்கு எதிராகப் பேசிய கருத்துகளை நீதிபதிகள் கவனத்தில் கொள்வார்களா என்று கேட்ட போது, நீதித்துறைக்கும் அரசுக்கும் சுமூகமான உறவு இல்லை எனக் கூறியவர், இந்தச் சூழலில் கொலிஜீயத்தின் தேர்வு முறை குறித்துப் பதிலளிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

இந்த விவகாரத்தில் விக்டோரியா கௌரியின் கருத்தை அறிவதற்காக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, இது குறித்து இப்போது பேச முடியாது எனக் கூறி தொடர்பைத் துண்டித்து விட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: