You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் - இரானில் ஏன் தொடங்கியது? எப்படி நடக்கிறது?
பாதுகாப்புப் படையினரின் கொடூரமான அடக்குமுறையை மீறி இரான் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மக்கள் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டங்கள் இரானிய அதிகாரிகளுக்கு கடும் சவாலாகப் பார்க்கப்படும் நிலையில், போராட்டத்திற்கான காரணம் என்ன, இது எப்படித் தொடங்கி, எப்படித் தொடர்கிறது என்று எளிமையாகப் பார்ப்போம்.
பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் அணிந்து மறைக்க வேண்டும் என்ற இரான் நாட்டு சட்டத்தை மீறியதாகக் கூறி மாசா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையால் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த மாசா அமினி உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் வெடித்தது.
அவரது தலையில் காவல்துறையினர் தடியால் தாக்கியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாசா அமினி கோமா நிலையில் இருக்கும் புகைப்படங்களுடன் அவர் காவல் நிலையத்தில் சரிந்து விழும் காணொளி ஒன்றையும் அதிகாரிகள் வெளியிட்டனர். அவை இரான் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.
அமினியின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு மேற்கு நகரமான சாக்ஸில் முதல் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பெண்கள் தங்கள் ஹிஜாப்களைக் கிழித்து எறிந்தனர்.
அதன் பின்னர் நாடு முழுவதும் விரிவடைந்த இந்தப் போராட்டம், கூடுதல் சுதந்திரம் வேண்டும் என்பதில் தொடங்கி அரசைக் கவிழ்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தற்போது நடைபெற்றுவருகிறது.
பெண்களின் பங்கு என்ன?
'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' மற்றும் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியைக் விமர்சிக்கும் வகையில் 'சர்வாதிகாரிக்கு மரணம்' ஆகிய முழக்கங்களுடன் பெண்கள் தங்கள் ஹிஜாப்களைத் தீயிட்டுக் கொளுத்துவதையும், தலைமுடியை பொது இடங்களில் வெட்டிக்கொள்வதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது.
இதற்கு முன்பு சில பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது எழுந்துள்ள எதிர்ப்பு அளவிற்கு முன்பு இருந்ததில்லை.
முன்னெப்போதும் இல்லாத வகையில், பள்ளி மைதானங்களிலும் தெருக்களிலும் மாணவிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஆண்களும் இளைஞர்களும் இந்தப் போராட்டத்தில் பெரிய அளவில் கலந்துகொண்டு, பெண்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
போரட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கடுமையாக முயன்று வருகின்றனர்.
இரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அதன் பரம எதிரி நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்தான் காரணம் என்று இரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டுகிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை விமர்சகர்கள் மறுக்கின்றனர்.
எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்?
பிபிசி மற்றும் பிற சுயாதீன ஊடகங்கள் இரானுக்குள் இருந்து செய்தி வெளியிடுவது தடுக்கப்பட்டுள்ளதால், அரசு ஊடகங்கள் கூறும் தகவலைச் சரிபார்ப்பது கடினமாக உள்ளது. எனினும், சமூக ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் சில விவரங்களை அளிக்கின்றன.
நார்வேயைச் சேர்ந்த இரான் மனித உரிமைகள் குழு, பாதுகாப்புப் படையினரால் 23 குழந்தைகள் உட்பட குறைந்தது 201 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.
அமைதியான வழியில் போராடுபவர்களைக் கொலை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளைக் காவல்துறையினர் மறுத்தாலும், போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தும் காணொளிகள் உள்ளன.
கடந்த கால போராட்டங்கள்
2009ஆம் ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு பல லட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்தனர். எனினும், நடுத்தர வர்க்கத்தினரால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டம் முக்கிய நகரங்களில் குறைவாகவே நடந்தது.
பொருளாதார நெருக்கடி காரணமாக 2017 மற்றும் 2019ஆம் ஆண்டு நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், அவை பெரும்பாலும் தொழிலாளர் வர்க்கத்தினர் வசிக்கும் பகுதிகளில் நடந்தன.
தற்போது முதன்முறையாக, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும், அனைத்து வயதினரையும் உள்ளடக்கிய போராட்டங்கள் பல நகரங்களுக்குப் பரவியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்