கமில்லா – அரசருக்கு பக்கபலமாக இருக்கும் புதிய ராணி

    • எழுதியவர், சாரா கேம்ப்பெல்
    • பதவி, அரச குடும்ப செய்தியாளர்

புதிய மன்னர் சார்ல்ஸின் மனைவியான, கமில்லா, இளம் வயது முதலே அவரது நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். 17 ஆண்டுகளாக அவருடைய மனைவியாக இருக்கும் கமில்லா, தற்போது அவரது ராணியாகியுள்ளார்.

தேசிய, சர்வதேச விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் சார்ல்ஸின் பக்கத்திலிருந்து அவரை பொதுமக்கள் பார்த்திருக்கின்றனர். ஆனால், அப்படியிருப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை கமில்லா ஒப்புக்கொண்டுள்ளார்.

கமில்லா பார்க்கர் பவுல்ஸ் அளவுக்கு இழிவுபடுத்தப்பட்ட பெண்கள் வெகு சிலர் தான். வேல்ஸ் இளவரசி டயானாவின் திருமண முறிவோடு இவர் தொடர்புபடுத்தப்பட்டார்.

சார்ல்ஸை வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்த பிறகு, தன்னுடைய நடத்தை மற்றும் தோற்றத்திற்காக ஊடகங்களால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டார். அதையெல்லாம் பொறுமையாகக் கடந்து வந்த கமில்லா, இன்று அரச குடும்பத்தின் மூத்த பெண் உறுப்பினர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

அவர்களுடைய 20களின் தொடக்கத்தில் சந்தித்தபோதே சார்ல்ஸ் கமில்லாவுடன் காதலில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

அவர்களின் காதலுக்கு, இரண்டாம் எலிசபெத் ராணியிடமிருந்து முழு சம்மதம் கிடைக்க நேரம் எடுத்தது. ஆனால் அவரது இறுதிக்காலத்தில் கமில்லாவுக்கு முற்றிலும் ஆதரவாக இருந்தார். புதிய ராணி ஒருபோதும் பொதுமக்களின் ஆதரவைப் பெறமுடியாமல் போகலாம். ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வோக் இதழுக்கு அளித்த பேட்டியில், "நான் அவற்றைக் கடந்து வருகிறேன். எப்படியிருந்தாலும், நாம் வாழ்க்கையைத் தொடர்ந்துதானே ஆகவேண்டும்" என்று குறிப்பிட்டார்.

1947 ஜூலை 17 அன்று பிறந்த கமில்லா ரோஸ்மேரி ஷாண்ட், அரியணையின் வாரிசை மணப்போம் என்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். அவர் குடும்பம் உயர்தர, பணக்காரக் குடும்பமாக இருந்தாலும் அரச குடும்பம் இல்லை. அவருடைய தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, தாய் இல்லத்தரசி.

சார்ல்ஸின் இளமைப்பருவத்திலிருந்து கமில்லாவின் இளமைக்காலம் முற்றிலும் மாறுபட்டது.

அவர் ஒரு நெருக்கமான, அன்பான சூழலில் வளர்ந்தார். சஸ்ஸெக்ஸில் உள்ள ஓர் அழகிய குடும்ப தோட்டத்தில் தனது சகோதரர், சகோதரியுடன் விளையாடினார். தான் தூங்கப் போகும்போது ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான தனது தந்தை ப்ரூஸ் ஷாண்ட் கதை சொல்வது கமிலாவுக்கு மிகவும் பிடிக்கும்.

அவரது தாயார் ரோசாலிண்ட், குழந்தைகளை பள்ளி மற்றும் இதர செயல்பாடுகளுக்கு அழைத்துச் சென்றார். தனது பெற்றோர் உடன் இல்லாமல் உலகம் முழுவதும் பயணம் செய்த சார்ல்ஸுக்கு இது மிகவும் வித்தியாசமான குழந்தைப்பருவமாகத் தெரிந்தது.

சுவிட்சர்லாந்தில் பள்ளிப்படிப்பை முடித்த கமில்லா, 60களின் மத்தியில் குதிரைப்படை அதிகாரி ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸுடன் உறவில் இருந்ததற்காக அறியப்பட்டார்.

70களின் தொடக்கத்தில் அவர் சார்ல்ஸுக்கு அறிமுகமாகிறார். கமிலாவை பார்த்தவுடன் அவர் காதலில் விழுந்துவிட்டதாக இளவரசர் சார்ல்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜொனாதன் டிம்பிள்பி தெரிவிக்கிறார். அதில் அவர், "பாசமுடையவராக, யூகிக்க முடியாதவராக இருந்த கமில்லாவிடம், அவர் முதல் காதலின் தீவிரத்துடன் தன் இதயத்தை முற்றிலுமாக இழந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சார்ல்ஸ் 20 வயதின் தொடக்கத்தில் இருந்ததாலும் கடற்படையில் தன்னுடைய தொழில்வாழ்க்கையைத் தொடங்கியிருந்ததாலும் அவர்களின் காதலுக்கு அது உகந்த நேரமாக இருக்கவில்லை. 1972ன் பிற்பகுதியில் சார்ல்ஸ் வெளிநாட்டில் இருந்தபோது கமில்லாவிடம் ஆண்ட்ரூ தன்னுடைய காதலைத் தெரிவித்தார். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

சார்ல்ஸுக்காக கமில்லா ஏன் காத்திருக்கவில்லை என்பதற்கு கமில்லா தன்னை இளவரசியாக என்றைக்கும் பாவித்துக் கொண்டதில்லை என்பதை பதிலாக சொல்கிறார்கள் அவரது நண்பர்கள். தான் நிராகரிப்பட்டிருந்தாலும், கமில்லாவுடன் சார்ல்ஸ் தொடர்ந்து நட்பு பாராட்டினார். இருவரும் பரஸ்பரம் தங்கள் வாழ்வில் ஒரு பகுதியாகத் தொடர்ந்து இருந்து வந்தனர். பின்னர், கமிலா - ஆண்ட்ரூ தம்பதி தங்களது முதல் குழந்தையான டாமிற்கு காட்ஃபாதராக இருக்கும்படி சார்ல்ஸை கேட்டுக்கொண்டனர். போலோ விளையாட்டின் சந்திப்புகளில் சார்ல்ஸ், கமில்லாவின் புகைப்படங்கள் அவர்களுடைய நெருக்கத்தைக் காட்டுகின்றன.

டயானா ஸ்பென்சரிடம் 1981இல் சார்ல்ஸ் தன் காதலைத் தெரிவித்தார். அந்த நேரத்திலும், கமில்லாவுடன் அவருக்கு நட்பு இருந்தது. கமில்லாவுக்காக இருவரது செல்லப்பெயர்களின் முதல் எழுத்து பொறிக்கப்பட்ட காப்பு ஒன்றை சார்ல்ஸ் உருவாக்கி வைத்திருந்ததாகவும் அது தெரியவந்ததும் சார்ல்ஸ் உடனான திருமணத்தை கிட்டத்தட்ட முறித்துக்கொள்ளும் முடிவுக்கு டயானா வந்ததாகவும் 'In Diana: Her True Story' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் ஆண்ட்ரூ மார்ட்டன் விவரிக்கிறார்.

கமிலாவுடனான சார்ல்ஸின் காதலால் டயானா திருமண வாழ்வில் மிகவும் சிரமப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை. டயானாவுடனான தனது திருமணம், "மீட்கமுடியாத அளவுக்கு முறிந்தபோதுதான்" சார்ல்ஸ், கமில்லாவிடம் தங்கள் காதலை மீண்டும் புதுப்பிக்க வலியுறுத்தினார். ஆனால், இப்போது மதிப்பிழந்த 1995ஆம் ஆண்டு பனோரமா நேர்காணலில் டயானா மிகவும் மறக்கமுடியாத வகையில், "இந்தத் திருமணத்தில் நாங்கள் மூன்று பேர் இருந்தோம்," என்று குறிப்பிட்டார்.

சார்ல்ஸ், கமில்லா இருவரின் திருமணங்களும் மோசமான நிலையை அடைந்தன. 1989ஆம் ஆண்டு ரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பகிரங்கப்படுத்தப்பட்ட அவர்களுடைய இரவு நேர தொலைபேசி அழைப்பின் விவரங்களைப் போன்று அப்போது வெளியான சில செய்திகள் அவர்களுக்கு மிகுந்த வேதனையளிக்கும் விதத்தில் இருந்தன.

தனது சொந்த குடும்பத்திற்கு, குறிப்பாக அவரது இரண்டு குழந்தைகளான டாம் மற்றும் லாராவுக்கு ஏற்படுத்திய வருத்தம் மற்றும் இடையூறுகள் இருந்தபோதிலும், சார்ல்ஸுடன் வாழத் தேர்ந்தெடுத்தது, கமில்லாவுக்கு சார்ல்ஸிடம் இருந்த உணர்வின் வலிமைக்கான அடையாளமாக உள்ளது.

பாப்பராஸ்ஸிகள், வில்ட்ஷையரில் உள்ள குடும்ப வீட்டிற்கு வெளியே புதர்களில் மறைந்திருந்த நாட்களைப் பற்றி டாம் பார்க்கர் பவுல்ஸ் பேசியுள்ளார். "எங்களை மேலும் காயப்படுத்தும் அளவுக்கு எங்கள் குடும்பத்தைப் பற்றி யாராலும் எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்தும் பேசப்பட்டிருந்தன. ஆனால், அம்மா புல்லட் ப்ரூஃப் போல உறுதியாக இருந்தார்," என்று அவர் 2017ஆம் ஆண்டு டைம்ஸ் நாளிதழில் எழுதினார்.

அந்த நாட்களில், "எல்லா நேரத்திலும் தான் கவனிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. ஆனால், அதோடு வாழ்வதற்கு நாம் ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்," என்று கமில்லா கூறியுள்ளார்.

டயானா 1997இல் உயிரிழந்த பிறகு விமர்சனங்களைச் சமாளிப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பது இன்னும் கடினமாகிவிட்டது. பகிரங்கமாக, சார்ல்ஸ் தனது மகன்களான வில்லியம் மற்றும் ஹேரி மீது கவனம் செலுத்தினார். கமில்லா பொதுவெளியின் பார்வையிலிருந்து பின்வாங்கினார். ஆனால், அவர்களின் உறவு தொடர்ந்தது.

தனது வாழ்வில் கமில்லா தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் என்ற நிலைப்பாட்டில் சார்ல்ஸ் இருந்தார். எனவே பொதுமக்களின் பார்வையில் அவருக்கு ஒரு நற்பெயரை உருவாக்க கவனமாகத் திட்டமிடப்பட்ட முயற்சிகளைத் தொடங்கினார். இது 1999ஆம் ஆண்டில் கமில்லாவின் சகோதரியின் 50வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ரிட்ஸ் ஹோட்டலில் நடந்த இரவுநேர நிகழ்ச்சியிலிருந்து இது தொடங்கியது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் விண்ட்சர் கில்ட் ஹாலில் ஒரு சிறிய, சிவில் விழாவில் திருமணம் செய்துகொண்டனர்.

புதுமணத் தம்பதிக்கு எதிராக மக்கள் நடந்துகொள்ளக்கூடும் என்று அவர்கள் கவலைப்பட்டனர். ஆனால், அவர்களுடைய நலம் விரும்பிகளின் ஆதரவும் மகிழ்ச்சிப் பரிமாற்றங்களும் அவர்களுக்குக் கிடைத்தன.

ஆனால், பல ஆண்டுகளாக அவர் ராணி என்று அழைக்கப்படுவாரா என்ற விவாதம் தொடர்ந்தது. சட்டப்பூர்வமாக அந்தப் பட்டத்தைப் பயன்படுத்த உரிமை உண்டு என்றாலும், டயானாவுடனான சார்ல்ஸின் திருமணம் முறிந்ததற்கு அவர்மீது குற்றம் சாட்டியவர்களைச் சமாதானப்படுத்தும் விதமாக, அதற்கான நேரம் வரும்போது அவர் இளவரசி என்று மட்டும் அழைக்கப்படுவார் என்றே அதிகாரபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இறுதியில், இந்த விவகாரத்தை ராணி தீர்த்து வைத்தார். அவர் 2022ஆம் ஆண்டில், "அதற்கான நேரம் வரும்போது, கமில்லா அரசரின் மனைவியாக ராணி என்று அறியப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம்" என்று கூறினார். சார்ல்ஸின் பக்கத்தில் கமில்லா தனது இடத்தைப் பெற்றுள்ளார் என்பது இங்கே உறுதி செய்யப்பட்டது. அதுவரை இருந்த பொது விவாதங்கள் முடிவுக்கு வந்தன.

ஒருவேளை ராணி ஆரம்பத்தில் கமில்லா விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்ததாக இருந்தால், அது இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹேரிக்காக இருந்திருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். இருவரும் தங்கள் பெற்றோரின் பகிரங்க திருமண முறிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதோடு, அவர்களின் தாயார் உயிரிழக்கும்போது வில்லியமுக்கு 15 வயது, ஹேரிக்கு 12 வயது.

2005ஆம் ஆண்டில், அவர்களுடைய திருமணம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 21 வயதாகியிருந்த ஹேரி, தங்கள் தந்தைக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஓர் "அற்புதமான பெண்" என்று கமில்லாவை பற்றிக் கூறினார்.

"வில்லியமும் நானும் அவரை மிகவும் விரும்பினோம், அவரோடு நாங்கள் நன்றாகவோ ஒத்துப்போனோம்," என்றார்.

அடுத்து வந்த பல ஆண்டுகளில் கமில்லா மீதான தங்கள் உணர்வுகளைப் பற்றி இரு சகோதரர்களும் அதிகம் பேசவில்லை. இருப்பினும், பொது நிகழ்வுகளில் வில்லியம், அவரது மனைவி கேத்ரீன் மற்றும் கமில்லா ஆகியோருக்கு இடையிலான தொடர்புகளையும் உடல் மொழியையும் பார்க்கையில், அரவணைப்பு மற்றும் பரிச்சயம் இருப்பதும் அதன்மூலம் கேம்பிரிட்ஜ்களுடனான நல்ல உறவு அவருக்கு இருப்பதும் தெரிந்தது.

இப்போது தன் 70களில் இருக்கும் கமில்லாவின் வாழ்க்கை தம் கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றியே சுழல்கிறது. அவரது விண்ட்சர் உறவுகள் தலைப்புச் செய்திகளை உருவாக்கலாம். ஆனால் ஊடக வெளிச்சத்திற்குள் வராமல் இருக்கும் கமில்லா, ஐந்து பேரக்குழந்தைகளுக்கு ஓர் உற்சாகமிக்க பாட்டியாக இருக்கிறார். அவர் தனது வில்ட்ஷையர் இல்லமான ரே மில் ஹவுஸை இன்னமும் வைத்துள்ளார். தனது ஓய்வு நேரங்களை அங்கு செலவிடுகிறார்.

"அவருக்கு மிகவும் நெருக்கமான, ஆதரவான குடும்பமும் நெருக்கமான பழைய நட்பு வட்டாரங்களும் உள்ளன. அவர் தனது கணவர், குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மீது மிகுந்த நேசம் கொண்டுள்ளார்," என்று அவருடைய சகோதரியின் மகன் பென் எலியட், வேனிட்டி ஃபேர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

கமில்லாவுக்கு மிகவும் விருப்பமான விஷயங்களிலும் தனது சுய முத்திரையைப் பதித்துள்ளார்.

  • அவரது தாய் மற்றும் பாட்டியைப் பாதித்த ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு வலுவிழத்தல்) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்
  • குடும்ப வன்முறை, பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறை போன்ற கடினமான பிரச்னைகளில் கவனம் செலுத்துகிறார்
  • இன்ஸ்டாகிராமில் புத்தக கிளப் மூலமாக தன் தந்தையிடமிருந்து பெற்ற புத்தங்களின் மீதான காதலைக் கடத்த முயல்கிறார்

ஒருவேளை அவர் வாழ்வில் தாமதமாக அரச குடும்பத்திற்கு வந்ததால், அவரைச் சுற்றியுள்ள வம்புகளால் வெட்கப்படுவதாகத் தெரிகிறது.

கிளாரன்ஸ் ஹவுஸில் ஓர் அறக்கட்டளை நிகழ்வை செய்தியாக்கியபோது, சீமாட்டி படிக்கட்டுகளின் உச்சியில் நின்று அனைவரும் தயாராகிவிட்டார்களா என்று உறுதி செய்து கொண்டிருப்பதைக் கண்டேன். நாங்கள் தயாராக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தவர், கீழே வந்து தன்னார்வ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை உற்சாகமாக அணைத்து முத்தம் கொடுத்தார்.

ஊரடங்கின்போது, சீமாட்டி தனது பேரக்குழந்தைகளுக்கு "ஆழமானதோர் அரவணைப்பை" கொடுக்க முடியாதது குறித்து வருத்தத்துடன் பேசினார். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அவர் தனது அரவணைப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பைத் திரும்பப் பெற்றதை நன்கு அனுபவித்தார்.

ஓர் அறையை அவர் கையாள்வதைப் பார்க்கும்போது, மக்களை அவரால் அமைதியாகவும் ஆசுவாசத்துடனும் வைத்திருக்க முடியும் என்பது தெளிவாகிறது. நரம்பு புடைக்கும் அளவுக்குப் பேசுவதில் உள்ள தனது சிரமத்தை அவர் ரகசியமாக வைத்திருக்கவில்லை. ஆனால், அதேவேளையில் அவர் கடந்து வந்த ஆண்டுகளில் தனது தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.

சார்ல்ஸ், கமில்லாவுக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. பொதுவில், அவர்களுக்கு இடையிலான உறவு வெளிப்படையானது. பார்வை பரிமாற்றம், சிரிப்பு என்று தங்களுக்குள் அவர்கள் தனிப்பட்ட நகைச்சுவைகளைப் பகிர்ந்துகொள்ளாத நிகழ்வைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும்.

"அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள், ஒன்றுபோலச் சிரிக்கிறார்கள்," என்று எலியட், வேனிட்டி ஃபேரிடம் கூறினார்.

அவர்கள் ஆடம்பர வாழ்வை, ஆனால் மிகத் தீவிரமான பகுப்பாய்வுகளுக்கு நடுவே வாழ்கிறார்கள். இந்த அழுத்தம் இடைவிடாமல் இருக்கலாம்.

இளவரசர் சார்ல்ஸ் அவர்களுடைய 10வது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு சிஎன்என் ஒளிபரப்பாளரிடம் பேசியபோது, "உங்கள் பக்கத்தில் பக்கபலமாக யாராவது இருப்பது எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும். கமில்லா மகத்தான ஆதரவை வழங்குவதோடு, வாழ்வின் வேடிக்கையான பக்கத்தையும் பார்க்கிறார். அதற்கு கடவுளுக்கு நன்றி," என்று கூறினார்.

"சில நேரங்களில் இரவில் கப்பல் பயணம் செய்வதைப் போல் இருக்கும். ஆனால், நாங்கள் எப்போதும் ஒன்றாக அமர்ந்து ஒரு கப் தேநீர் அருந்துகிறோம். எங்களுக்கான தருணத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்," என்று தங்கள் வாழ்வு குறித்து கமில்லா குறிப்பிட்டார்.

அரசர் பதவி தனிமையானது. ஒருவேளை சார்ல்ஸ் கமில்லாவை விட்டுக்கொடுக்க விரும்பாததன் காரணம், அவர் ஏற்கும் பதவியில் அவருக்குத் தேவையான தோழமையை வழங்கக்கூடிய ஒரே நபர் அவராகத்தான் இருக்கும் என்று அவர் அறிந்திருந்ததாக இருக்கலாம்.