புதிய அரசர் மூன்றாம் சார்ல்ஸ்

ராணி இறந்த தருணத்தில், வேல்ஸின் முன்னாள் இளவரசர் சார்ல்ஸுக்கு, அரசருக்குரிய அரியணை உடனடியாக மற்றும் சம்பிரதாயமின்றி சென்றது.

ஆனால் அரசராக முடிசூட்டப்படுவதற்கு அவர் கடந்து செல்ல வேண்டிய நடைமுறை மற்றும் பாரம்பரியமான நிலைகள் பல உள்ளன.

இனி அவர் எவ்வாறு அழைக்கப்படுவார்?

அவர் மூன்றாம் சார்ல்ஸ் மன்னர் என்று அழைக்கப்படுவார்.

புதிய மன்னரின் ஆட்சியில் முதல் நடவடிக்கை, பெயர் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுதான். சார்ல்ஸ், ஃபிலிப், ஆர்தர், ஜார்ஜ் என்ற தன்னுடைய நான்கு பெயர்களில் ஏதேனும் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்தது.

பெயர் மாற்றத்தை எதிர்கொள்பவர் இவர் மட்டுமே அல்ல.

அரியணைக்கு வாரிசாக இருந்தாலும்கூட இளவரசர் வில்லியம் தானாகவே வேல்ஸ் இளவரசராக மாற மாட்டார். அந்தப் பட்டத்தை அவருக்கு அவரது தந்தை வழங்கவேண்டும்.

இருப்பினும், அவர் உடனடியாக தனது தந்தையின் மற்றொரு பட்டமான டியூக் ஆஃப் கார்ன்வாலை (கார்ன்வால் கோமகன்) பெற்றார். அவரது மனைவி கேத்தரின் கார்ன்வால் டச்சஸ் (கார்ன்வால் சீமாட்டி) என்று அழைக்கப்படுவார்.

சார்ல்ஸ் மனைவியின் பட்டம் ஆங்கிலத்தில் 'க்வீன் கன்சார்ட்' என்பது ஆகும். மன்னரின் மனைவியை குறிக்கும் சொல் இது.

முறையான சம்பிரதாயங்கள்

முதல் 24 மணி நேரத்தில் அல்லது தாயார் இறந்த உடனேயே, சார்ல்ஸ் அதிகாரபூர்வமாக அரசர் ஆக அறிவிக்கப்படுவார். இது லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், அசெஷன் கவுன்சில் எனப்படும் ஆளுகை தலைமைக்குரியவரை அறிவிக்கும் சம்பிரதாய அமைப்புக்கு முன்னால் நடக்கிறது.

இந்த அமைப்பு பிரைவி கவுன்சிலின் உறுப்பினர்களை அங்கமாகக் கொண்டது. மூத்த எம்.பி.க்கள், ஓய்வு பெற்ற மற்றும் அரசில் உயர் பொறுப்பில் உள்ள சகாக்கள் - அத்துடன் சில மூத்த சிவில் ஊழியர்கள், காமன்வெல்த் உயர் ஆணையர்கள் மற்றும் லண்டன் லார்ட் மேயர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பர்.

கோட்பாட்டளவில் 700க்கும் மேற்பட்டோர் இந்த கவுன்சிலில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். ஆனால் குறுகிய கால அறிவிப்பைக் கொடுத்தால், அதில் பங்கேற்பவர்களின் உண்மையான எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும்.

கடைசியாக 1952ல் நடந்த அசெஷன் கவுன்சிலில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். அரசர், பாரம்பரியமாக இதில் கலந்து கொள்வதில்லை.

இந்த கூட்டத்தில், ராணி எலிசபெத்தின் மரண அறிவிப்பு பிரைவி கவுன்சிலின் லார்ட் பிரசிடென்ட் (தற்போது பென்னி மோர்டான்ட் எம்.பி) மூலம் அறிவிக்கப்படும். மேலும் அது ஒரு பிரகடனம் ஆக 'உரத்த குரலில்' வாசிக்கப்படும்.

அந்த பிரகடனத்தின் வார்த்தைகள் மாறலாம், ஆனால் இது பாரம்பரியமாக முந்தைய முடியாட்சியை நடத்தியவரைப் பாராட்டியும், புதிய அரசருக்கு ஆதரவாக உறுதியளிக்கும் பிரார்த்தனைகள் மற்றும் உறுதிமொழிகள் என வரிசையாக நடக்கும்.

இந்த பிரகடனத்தில் பிரதமர், கேன்டர்பரி தேவாலய பேராயர், லார்ட் சான்சிலர் உட்பட பல மூத்த பிரமுகர்கள் கையெழுத்திடுவர்.

இந்த நிகழ்வு அனைத்து விழாக்களைப் போலவே, ஒரு புதிய சகாப்தத்தின் அடையாளமாக மாற்றப்பட்ட, சேர்க்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட விஷயங்கள் மீது கவனம் செலுத்துவதாக அமையும்.

அரசரின் முதல் பிரகடனம்

இதன் பிறகு, அடுத்த தலைமைக்குரியவரை தேர்வு செய்யும் அசெஷன் கவுன்சில் மீண்டும் கூடும். இது வழக்கமாக ஒரு நாள் கழித்து நடக்கலாம். இந்த முறை, பிரைவி கவுன்சில் கூட்டத்தில் அரசர் கலந்து கொள்வார்.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு போன்ற வேறு சில நாட்டு தலைவர்களின் பதவியேற்பு பாணியில், பிரிட்டிஷ் அரசர் தமது ஆட்சியின் தொடக்கத்தில் "சத்தியப்பிரமாணம்" எதுவும் எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால் புதிய அரசர் ஒரு பிரகடனத்தை வெளியிடுவார். அது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியமாகும். அதற்கு இணங்க அவர் ஸ்காட்லாந்து தேவாலயத்தைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுப்பார்.

பிறகு 'எக்காளம்' ஊதுபவர்களின் ஆரவார முழக்கத்துக்குப் பிறகு, சார்ல்ஸை புதிய அரசராக அறிவிக்கும் பொதுப் பிரகடனம் வெளியிடப்படும். இது செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள ஃப்ரைரி மாடத்துக்கு மேலே உள்ள பால்கனியில் இருந்து 'கார்ட்டர் கிங் ஆஃப் ஆர்ம்ஸ்' என்று அழைக்கப்படும் அதிகாரியால் செய்யப்படும்.

அவர் தமது அழைப்பில், "கடவுளே, அரசரைக் காப்பாற்று", என்று முழங்குவார். 1952க்குப் பிறகு முதல் முறையாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது, அதற்கு முன்பாக, இந்த அதிகாரி பிரார்த்தித்த கடவுளே அரசைக் காப்பாற்று என்ற வரிகள் தேசிய கீதத்தில் முதல் வரியாக இடம்பெறும்.

அப்போது ஹைட் பூங்கா, லண்டன் கோபுரம், கடற்படை கப்பல்கள் ஆகியவற்றில் இருந்தபடி துப்பாக்கி குண்டுகள் விண்ணை நோக்கி முழங்கப்படும். அதற்கு மத்தியில் சார்ல்ஸை அரசர் ஆக அறிவிக்கும் பிரகடனம் வாசிக்கப்படும்.

முடிசூட்டு விழா

சார்ல்ஸ் முறைப்படி முடிசூட்டப்படும் போதுதான், அவர் அடுத்த தலைமைக்கான நிலையை எட்டும் உயரிய கட்டத்தை அடைகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால், சார்ல்ஸ் பதவியேற்ற உடனேயே முடிசூட்டு விழா நடக்க வாய்ப்பில்லை - ராணி எலிசபெத் 1952ஆம் ஆண்டு பிப்ரவரியில் அரியணை ஏறினார், ஆனால் 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை அவர் முடிசூட்டப்படவில்லை.

கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் தான் முடிசூட்டு விழா நடைபெற்றது. வில்லியம் தான் அங்கு முடிசூட்டப்பட்ட முதல் மன்னர் ஆக விளங்கினார். அந்த வரிசையில் 40வது ஆக முடிசூட்டிக் கொள்பவர் சார்ல்ஸ்.

இது ஒரு ஆங்கிலிகன் மத சேவை வழங்கும் தலம். இது கேன்டர்பரி பேராயரால் மேற்கொள்ளப்படுகிறது. விழாவின் உச்சமாக, அவர் சார்ல்ஸின் தலையில் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை வைப்பார் - திடமான இந்த தங்க கிரீடம், 1661ஆம் ஆண்டு காலத்துக்குரியது.

லண்டன் கோபுரத்தில் உள்ள மகுட நகைகளில் முக்கியமானதாகும். மேலும் முடிசூட்டும் தருணத்தில் அரசரால் மட்டுமே இது அணியப்படுகிறது (குறைந்தபட்சம் இது 2.23 கிலோ எடை கொண்டது).

அரச குடும்ப திருமணங்களைப் போல அல்லாமல், முடிசூட்டு விழா ஒரு அரசு விழாவாக நடக்கும். அதற்கு அரசாங்கம் பணம் செலுத்துகிறது. இறுதியில் விருந்தினர் பட்டியல் இறுதிப்படுத்தப்படுகிறது.

ஆரஞ்சு, ரோஜா, லவங்கப்பட்டை, கஸ்தூரி மற்றும் அம்பர்கிரிஸ் எண்ணெய்களைப் பயன்படுத்தி புதிய மன்னருக்கு அபிஷேகம் செய்யும் சடங்குகள் இருக்கும். அத்துடன் இசையும் பிரார்த்தனைகளும் இடம்பெறும்.

தமது முடிசூட்டலை உலகம் பார்வையிட அதன் முன்னே புதிய அரசர் முடிசூட்டிக் கொண்டு உறுதிமொழி எடுப்பார். இந்த விரிவான விழாவில் அவர் தனது புதிய பாத்திரத்தின் அடையாளமாக உருண்டை மற்றும் செங்கோலை பெறுவார். அப்போது கேன்டர்பரி பேராயர் திடமான தங்க கிரீடத்தை அவரது தலையில் வைப்பார்.

காமன்வெல்த் தலைவர் பொறுப்பு

56 சுதந்திர நாடுகள் மற்றும் 2.4 பில்லியன் மக்களை கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக சார்ல்ஸ் ஆகிறார். இவற்றில் பிரிட்டன் உள்பட 14 நாடுகளுக்கு, அரசரே அரச தலைவராக இருக்கிறார்.

காமன்வெல்த் நாடுகள் நலன்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, பஹாமாஸ், பெலிஸ், கனடா, கிரெனடா, ஜமைக்கா, பப்புவா நியூ கினி, செயின்ட் கிறிஸ்டோபர் மற்றும் நெவிஸ், செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், நியூசிலாந்து, சாலமன் தீவுகள், துவாலு ஆகியவை உள்ளன.

©அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை