You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"ராணி எலிசபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்": பக்கிங்காம் அரண்மனை
- எழுதியவர், சீன் கோக்லன்
- பதவி, அரண்மனை செய்தியாளர்
ராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டதையடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
"இன்று காலையில் கூடுதலான பரிசோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாட்சிமை வாய்ந்த ராணியின் உடல்நிலை குறித்து கவலை கொண்ட அவரது மருத்துவர்கள், தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ராணி, பால்மோரல் கோட்டையில் செளகர்யமாக இருக்கிறார்," என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
பக்கிங்காம் அரண்மனை இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிடுவது மிகவும் அசாதாரணமானது - பொதுவாக 96 வயதான ராணியின் மருத்துவ விஷயங்கள் அவரது தனிப்பட்ட விவகாரமாகக் கருதப்படுவதால் அது தொடர்பான கருத்துக்கள் தவிர்க்கப்படும்.
ராணி தற்போது வசித்து வரும் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையின் நுழைவாயில்கள் முன்பாக தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவியும் கோர்ன்வால் சீமாட்டியுமான கேமில்லா, ஏன் ஆகியோர் பால்மோரலில் உள்ளனர்.
யார்க் கோமகன் ஆண்ட்ரூ, வெஸ்ஸெக்ஸ் சீமாட்டியான சோஃபீ அபெர்தீனுக்கு மேற்கே உள்ள ஸ்காட்டிஷ் எஸ்டேட்டுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
ராணியின் மூத்த மகனும் அரியணை ஏறும் இரண்டாம் நிலையில் இருப்பவராகவும் உள்ள கேம்ப்ரிட்ஜ் கோமகனான இளவரசர் வில்லியம் பால்மோரலுக்கான வழியில் இருக்கிறார். அவரது மனைவியும் கேம்ப்ரிட்ஜ் சீமாட்டியுமான கேத் எனப்புடம் கேத்ரைன் தமது பிள்ளைகளின் முதலாவது முழு பள்ளி துவக்க தினம் என்பதால், வின்சர் கோட்டையில் இருக்கிறார்.
லண்டனில் உள்ள தொண்டு அமைப்பின் நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த சஸ்ஸெக்ஸ் கோமகன் ஹேரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பால்மோரல் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக அந்த தம்பதியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 'ராணி கீழே விழுந்திருக்கலாம்' போன்ற ஆதாரமற்ற ஊகங்களுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வந்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை பால்மோரலில் சொந்த கால்களுடனேயே ராணி நின்றிருந்தார். பிரிட்டனின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸுடன் புன்னகைத்தபடி அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.ஆனால், மூத்த அமைச்சர்கள் பங்கெடுத்த பிரைவி கவுன்சிலின் மெய்நிகர் சந்திப்பு மட்டுமே கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதை வைத்து, ராணியின் உடல்நிலை பலவீனமானமாகி விட்டதாக தவறுதலாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
"ஆழ்ந்த கவலை"
இந்த செய்தியால் "முழு நாடும்" "ஆழ்ந்த கவலையில் இருக்கும்" என்று பிரதமர் லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.
"எனது எண்ணங்கள் - மற்றும் எங்கள் ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதும் உள்ள மக்களின் எண்ணங்கள் - இந்த நேரத்தில் மாட்சிமை பொருந்திய ராணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ராணி தமது 70 வருட ஆளுகையில், புதிய பிரதமராக நியமிக்கப்படுபவரை பக்கிங்காம் அரண்மனையில் சந்திப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கடந்த ஜூலை மாதம் முதல் தமது ஸ்காட்லாந்து இல்லத்தில் அவர் கோடை விடுமுறையில் இருக்கிறார்.
கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, "எனது பிரார்த்தனைகளும், [இங்கிலாந்து தேவாலயம்] தேசம் முழுவதும் உள்ள மக்களின் பிரார்த்தனைகளும் இன்று மாட்சிமை பொருந்திய ராணிக்காக உள்ளன."கடவுளின் பிரசன்னம் ராணியையும் அவரது குடும்பத்தினர் மற்றும் பால்மோரலில் அவரை பராமரித்து வருபவர்களையும் பலப்படுத்தி ஆறுதல்படுத்தட்டும்," என்று அவர் கூறியுள்ளார்.