You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் வெள்ளம்: தீவுகளாக மாறிய ஊர்கள்; உதவி கோரி ஆற்றில் சீட்டை வீசும் அவலம்
- எழுதியவர், ஃபர்ஹத் ஜாவித்
- பதவி, பிபிசி உருது, மனூர் பள்ளத்தாக்கு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மனூர் பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றின் குறுக்கே சிக்கித் தவிக்கின்றனர். குறைந்தது பத்து பாலங்கள் மற்றும் கட்டடங்கள் நாசமடைந்துள்ளன.
"எங்களுக்குப் பொருட்கள் தேவை, எங்களுக்கு மருந்து தேவை, தயவுசெய்து பாலத்தை மீண்டும் கட்டுங்கள், இப்போது எங்களிடம் எதுவும் இல்லை." கள நிலவரத்தை அறிய, அங்கு சென்ற எங்கள் குழுவினரை நோக்கி கிராம மக்கள் கையால் எழுதப்பட்ட குறிப்பில் இவை காணப்பட்டன.
மனூர் பள்ளத்தாக்கு பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ககன் மலையில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கைத் தாக்கிய வெள்ளத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்கை முக்கிய நகரத்துடன் இணைக்கும் ஒரே கான்கிரீட் பாலத்தை திடீரென வெள்ளம் அடித்துச் சென்றது. அதனால், ஆற்றின் மறுகரையில் உள்ள அனைத்து கிராமங்களும் துண்டிக்கப்பட்டு, குடியிருப்பாளர்கள் உதவிக்காக காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் சாலை சேதமடைந்துள்ள நிலையில், ஆபத்தான ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு பிபிசியின் குழு பள்ளத்தாக்கை அடைகிறது.
மனூரில் இரண்டு பாலங்கள் முற்றிலும் இடிந்து விழுந்து தற்காலிக மரப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே, ஒரு பெண் தன் உடைமைகளுடன் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். அவர் தனது வீட்டைத்தூரத்திலிருந்து பார்க்க முடிந்தாலும், அதை அடைய முடியவில்லை என்று பிபிசியிடம் கூறுகிறார்.
"என் வீடும் குழந்தைகளும் ஆற்றின் மறுகரையில் உள்ளனர். அரசாங்கம் வந்து பாலத்தைச் சரிசெய்துவிடும் என்று நினைத்து நான் இரண்டு நாட்களாக இங்கே காத்திருக்கிறேன். ஆனால் அதிகாரிகள் எங்களை மலையைச் சுற்றி மறுகரை அடையச் சொல்கிறார்கள்.
ஆனால் அதற்கு எட்டு முதல் பத்து மணி நேரம் வரை ஆகும். நான் ஒரு வயதான பெண். நான் எப்படி இவ்வளவு தூரம் நடக்க முடியும்?"
அவர் இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்கிறார். மழை மீண்டும் தொடங்கி, தற்காலிக மரப்பாலத்தின் அடியில் தண்ணீர் பாய்கிறது. அவர் வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறுகிறார்.
ஆற்றின் மறுகரையில் உள்ள மண் வீடுகளுக்கு வெளியே ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். அரசு அதிகாரிகள் என்று நினைத்து எங்களை நோக்கி அவசரமாக வருகிறார்கள்.
அப்போதுதான் அவர்களில் சிலர் ஒரு காகிதத்தை ஆற்றின் குறுக்கே எறிந்து, நாங்கள் படமெடுக்கும் ஆற்றின் ஓரத்தில் வீசுவதற்காக அதை கற்கள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையில் அடைத்தனர். இந்தச் சமயடத்தில் கிராமத்தின் மற்ற பகுதியினருடன் அவர்கள் தொடர்பு கொள்ள ஒரே வழி இதுதான். மொபைல் நெட்வொர்க்குகள் இங்கு இயங்கவில்லை.
கையால் எழுதப்பட்ட அந்தக் குறிப்பில், தாங்கள் எதிர்கொள்ளும் இழப்புகள் பற்றிய தகவல்களையும், சிக்கித் தவிக்கும் கிராம மக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கான கோரிக்கையும் அடங்கியிருந்தன.
"பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், கிராமத்தை விட்டுக் கால்நடையாக வெளியேற முடியாது. தயவுசெய்து பாலத்தைக் கட்டுங்கள், இது நகரத்துடனான முக்கிய இணைப்பு" என்று கடிதம் கூறுகிறது.
"எங்களுக்குப் பொருட்கள் தேவை. எங்களுக்கு ஒரு சாலை வேண்டும்," என்கிறார் அப்துல் ரஷீத் என்னும் 60 வயது முதியவர். அவர் தனது வாகனத்தை வெள்ளத்தில் பறிகொடுத்துள்ளார். அது, அவரது குடும்பத்துக்கான ஒரே வாழ்வாதாரமாக இருந்தது என்பது வேதனை.
"பலர் தங்கள் சொத்து மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர்." என்று அவர் கூறுகிறார். "அவர்களுக்கு உதவி தேவை, அவர்களுக்கு உணவு தேவை. இங்கு ஒரு சிறிய சந்தை இருந்தது, அது அடித்துச் செல்லப்பட்டது. அந்தக்கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் அனைத்தும் இருந்தன.
"எனது வீடு மறுகரையில் உள்ளது, இப்போது என் வீட்டை அடைய எட்டு மணி நேரம் நடக்க வேண்டும், இவ்வளவு வயதான காலத்தில் நான் எப்படி நடப்பேன்?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
இங்கு ஏராளமான கடைகள், ஓட்டல்கள் சேதமடைந்துள்ளன. சோஹைலும் அவரது சகோதரரும் தங்கள் மொபைல் போன் பழுதுபார்க்கும் கடையை வெள்ளத்தில் இழந்துள்ளனர்.
தங்களை நம்பி மூன்று குடும்பங்கள் இருப்பதாகவும், இப்போது தனது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் பிபிசியிடம் கூறுகிறார். "என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்குத் தகுந்தபடி யாரும் உதவவில்லை. இங்குள்ள ஒவ்வொரு கடைக்காரரும் கவலைப்படுகிறார். அவர்கள் அனைவரும் பெரிய குடும்பங்களைக் கொண்ட ஏழைகள்," என்று அவர் கூறுகிறார்.
"இந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போட்டோ செஷன்களுக்காகவும், வேடிக்கைக்காகவும் இங்கு வருகிறார்கள். வந்து, போட்டோ எடுத்துவிட்டுச் செல்கிறார்கள். யாரும் எங்களுக்கு உதவுவதில்லை."
ஆனால் மாவட்டத்தின் துணை ஆணையர் பிபிசியிடம் விரிவான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் உடனடியாக அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும், அனைத்து ஹோட்டல்களும் காலி செய்யப்பட்டதாகவும் கூறுகிறார். சொத்து சேதங்கள் குறித்து ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
" மதிப்பீடு நடவடிக்கை முடிவடந்துவிட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்," என்று அவர் கூறுகிறார். பாலத்தின் புனரமைப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன, ஆனால் அதற்கு சிறிது காலம் எடுக்கும்.
வெள்ளத்திற்குக் காலநிலை மாற்றத்தை அரசாங்கம் காரணமாகக் கூறினாலும், ஆற்றின் கரையில் ஹோட்டல்களை கட்டுவதற்கு கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதியளிப்பது நிர்வாகத்தின் தவறு என்ற விமர்சனம் எழுகிறது.
"இந்த ஹோட்டல்கள் மற்றும் சந்தைகள் இயற்கையான நீர்வழிகளைத் தடுத்துவிட்டன, எனவே வெள்ளத்தால் மிக பெரிய இழப்புகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். இது எளிதில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்," என்கிறார் ககனின் பிரதான சந்தையில் மற்றொரு குடியிருப்பாளர்.
ககனில் உள்ள குன்ஹார் ஆற்றின் கரையிலும் அதை ஒட்டிய பள்ளத்தாக்குகளிலும் பல ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன. வெள்ளத்தால் காவல் நிலையம் ஒன்றும் ஒரு மதப் பள்ளியும் உட்பட பல கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
காவல் நிலையத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில், ஆற்றின் கரையில் ஒரு தற்காலிக கூடாரத்தில் ஒரு குடும்பம் அமர்ந்திருக்கிறது. அதே வெள்ளத்தில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் அடித்துச் செல்லப்பட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
பாகிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். குறைந்தது 700,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உணவு, குடிநீர் மற்றும் தங்குமிடத்திற்காக லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், இந்த துண்டிக்கப்பட்ட சமூகங்களை அடைய மீட்புக் குழுக்கள் போராடி வருகின்றன. சிந்து மற்றும் பலுசிஸ்தான் போன்ற மாகாணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் கைபர் பக்துன்காவில் உள்ள மலைப்பகுதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
சாலை இணைப்புகள் சேதமடைந்துள்ளதால், ஹெலிகாப்டர்கள் மட்டுமே பெரும்பாலான சமூகங்களைச் சென்றடைய ஒரே வழியாக உள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் செல்வதற்கு உதவி நிறுவனங்களுக்கு உதவ பாகிஸ்தான் ராணுவமும் அழைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம், இந்தப் பேரழிவைச் சமாளிக்க, நட்பு நாடுகள், நன்கொடையாளர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியை நாடி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்