ராஜஸ்தான்: பள்ளியில் குடிநீர் பானையை தொட்ட மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்

பட மூலாதாரம், Getty Images
இன்று (14.08.2022) தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்கள், இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.
குடிநீர் பானையை தொட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார் என்று தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன், பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்.
சிறுவன், கடந்த மாதம் 20-ம் தேதி வகுப்பறையில் இருந்த குடிநீர் பானையை தொட்டு அதில் இருந்து தண்ணீரை குடிக்க எடுத்துள்ளார். இதை பார்த்த வகுப்பு ஆசிரியர் ஷாயில் சிங் (வயது 40) மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் குடிநீர் பானையை தொட்ட மாணவன் மீது ஆசிரியர் சரமாரியாக தாக்கியுள்ளார்.
ஆசிரியரின் தாக்குதலில் முகம், காது, கண் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவன் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாவட்ட மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக உதய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவன் சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ஷாயில் சிங் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு; பாஜகவிலிருந்து விலகும் மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் டாக்டா் பா.சரவணன்

பட மூலாதாரம், ANI
தமிழ்நாடு நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை சனிக்கிழமை நள்ளிரவில் சந்தித்துப் பேசிய, மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன், தான் பாஜகவிலிருந்து விலகுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தாா் என்று தினமணி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மதுரை விமான நிலையத்துக்கு வந்தபோது திமுக மற்றும் பாஜகவினரிடையே தகராறு ஏற்பட்டது . அங்கிருந்து திரும்பிச் சென்றபோது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினா் காலணியை வீசினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை, பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் சந்தித்துப் பேசினார்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மதுரை விமான நிலையத்தில் தமிழக அமைச்சா் வாகனத்தின் மீது காலணி வீசிய சம்பவம் வருத்தத்திற்குரியது. பாஜகவினா் காலணி வீசியது ஏற்கத்தக்கதல்ல, அது பண்பாடற்ற அரசியல்.
அமைச்சா் தமிழில் கூறிய வாா்த்தைகளை பாஜகவினா் தவறாகப் புரிந்து கொண்டனா். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அமைச்சரை சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். அதோடு கடந்த ஓராண்டாகவே பாஜகவின் செயல்பாடுகளில் எனக்கு அதிருப்தி இருந்தது. பாஜகவின் மத அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. இனியும் பாஜகவில் தொடா்ந்து பயணிக்க இயலாது என்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்க உள்ளேன் என்றாா்.
மேலும், தொண்டர்கள் சார்பாக மன்னிப்பு கேட்க வந்தேன் எனவும் தெரிவித்திருந்தார் என்று அச்செய்தி தெரிவிக்கிறது.
உத்தரபிரதேசம்: நூபுர் ஷர்மாவை கொல்ல திட்டம்? - இளைஞர் கைது

பட மூலாதாரம், NUPUR SHARMA/TWITTER
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கொல்லத் திட்டம் தீட்டியதாக தீவிரவாதி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளரான நூபுர் ஷர்மா 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு பல முஸ்லிம் நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து நூபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வழக்கு தொடரப்பட்டன.
இதையடுத்து தனக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரி நூபுர் ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதற்கு நூபுர் ஷர்மாவைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், அண்மையில் அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், நூபுர் ஷர்மாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியதாக உத்தரபிரதேசத்தில் தீவிரவாதி ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷஹாரன்பூர் அருகே உள்ள குண்டகாலா கிராமத்தில் வசித்து வரும் 25 வயதான முகம்மது நதீமுக்கு ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு மற்றும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தலிபான் அமைப்புடன் நேரடி தொடர்பு இருப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் முகம்மது நதீமின் தொலைபேசி உரையாடலை போலீஸார் கண்காணித்து வந்தனர். அப்போது, முகம்மது நதீமுக்கு, ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்துடன் தொடர்பு இருந்ததும், பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மாவை கொல்ல வேண்டும் என்ற இலக்கு அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ஆயுதப்பயிற்சி எடுக்க பாகிஸ்தானுக்கு செல்ல அவர் ஆயத்தமாகி இருந்ததாகவும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து முகம்மது நதீமின் செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். மெய்நிகர் என்று அழைக்கப்படும் விர்ச்சுவல் போன் நம்பர்களை உருவாக்குவது எப்படி என்று தீவிரவாதிகளிடம் முகம்மது நதீம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாகிஸ்தானை சேர்ந்த சைபுல்லா என்ற நபர், அரசு கட்டிடங்கள் மற்றும் போலீஸார் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இவருக்கு பயிற்சி அளித்ததாகவும், சிறப்பு பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு அவர் வர வேண்டும் என்று அங்குள்ள தீவிரவாத இயக்கங்கள் முகம்மது நதீமுக்கு உத்தரவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அச்செய்தி தெரிவிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













