You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கைக்கு வரும் பாகிஸ்தான் போர்க்கப்பல் - காரணம் என்ன?
இன்று (09.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என, 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் கட்டமைக்கப்பட்ட பி.என்.எஸ். தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பல் கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சிகளை நடத்திய நிலையிலேயே கராச்சி திரும்புகிறது. ஷாங்காயில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல், கராச்சிக்கு தமது முதல் பயணத்தை மேற்கொள்கிறது என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் பாகிஸ்தான் கடற்படையில் இணைவதற்குச் செல்லும் வழியில் கொழும்பு துறைமுக அழைப்பை ஏற்று, பாகிஸ்தானின் இந்த ஏவுகணைப் போர்க்கப்பல், இலங்கை வருகிறது.
இந்த கப்பல் எதிர்வரும் 12-15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.
சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) எனும் கப்பல் - இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் - சுவேந்து அதிகாரி
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் என, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளதாக, 'இந்து தமிழ் திசை நாளிதழ்' செய்தி வெளியிட்டுள்ளது.
மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பகவத் கீதை புத்தக பிரதி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளிகளில் பகவத் கீதையை பள்ளிகளில் போதிக்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றையும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
"கீதை ஒரு மதம் சார்ந்த நூல் மட்டுமல்ல. குஜராத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் கீதை சேர்க்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் மக்களின் ஆசியுடன் தேசியவாத அரசு ஆட்சிக்கு வந்தால், பள்ளிகளில் கீதையை போதிப்போம்" என சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நபராக இயங்கி வந்தவர் சுவேந்து அதிகாரி. கடந்த 2020 டிசம்பர் வாக்கில் பாஜகவில் இணைந்தார். 2021 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தவர் சுவேந்து அதிகாரி.
கவிஞர் சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி புகார்
தான் பண மோசடியில் ஈடுபடவில்லை என்றும் கவிஞர் சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பதில் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கிறது 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி.
திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் சினேகன், 'சினேகம்' என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். தனது அறக்கட்டளை பெயரை சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சினேகன் புகார் அளித்திருந்தார். தன் மீதான குற்றச்சாட்டை ஜெயலட்சுமி மறுத்துள்ளார்.
இந்த நிலையில் அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
"நான் தமிழ்நாடு பாஜக மாநில மகளிர் அணி துணை தலைவியாக உள்ளேன். 2018-ம் ஆண்டு 'சினேகம்' என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி, நற்பணிகள் செய்து வருகிறேன். இந்நிலையில் சினிமா பாடலாசிரியர் சினேகன் என் மீது பொய் புகார் அளித்துள்ளார். நான் அறக்கட்டளைக்கு சேர வேண்டிய தொகையை பண மோசடி செய்து வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து எனக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், நான் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று தனியாக அழைத்ததாகவும் கூறியுள்ளார். நான் முறைப்படி, 'சினேகம்' அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறேன். ஆனால், என்னை ஒரு பெண் என்றும் பாராமல் குற்ற வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில் என் மீது அவதூறு பரப்பி உள்ளார். என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்.
ஆதாரங்கள் இல்லாமல் என் மீது பொய் புகார் அளித்துள்ள சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜெயலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், "விளம்பர புகழுக்காக சினேகன் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். அவர், திமுகவுக்கு விலைக்கு போய் விட்டாரா? என்று தெரியவில்லை" எனவும் கூறியதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.
இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டும் சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனம்
சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இலங்கையின் சந்தையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காண்பித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக, 'வீரகேசரி' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவின் முன்னணி எரிபொருள் கூட்டுத்தாபனமான சினோபெக் நிறுவனம் இதுவரை சுமார் 10,000 சர்வதேசக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கியிருப்பதுடன் தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை வந்தடைந்திருப்பதாக கடல்சார் விவகாரம் மற்றும் 'ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்ட' அபிவிருத்தி தொடர்பான சுயாதீன ஆய்வாளரான யசிறு ரணராஜா 'ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டம்' என்ற உத்தியோகபூர்வ இணையதளத்தில் எழுதியிருக்கும் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
அதன்படி, இலங்கையின் சந்தைக்குள் நுழைவதற்கும் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் எரிபொருள்சார் உற்பத்திப்பொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு சினோபெக் நிறுவனம் ஆர்வம் காண்பிப்பதாகத் தெரிவிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு வெளிநாட்டு கையிருப்புப் பற்றாக்குறை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்து, அவற்றை மீள்விற்பனை செய்யும் நடவடிக்கையை இலங்கையில் முன்னெடுப்பதற்கு ஆர்வம் காண்பிக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குமாறு சக்திவலு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்குக் கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்த பின்னணியிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது என, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்