You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவும் வரலாறும்: இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிறந்த கதை தெரியுமா?
உலக மக்களைக் கவர்ந்த இன்ஸ்டன்ட் உணவு வகைகளில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்க்கு தனி இடம் உண்டு. இரண்டே நிமிடங்கள் போதும் சமைக்கத் தெரியாதவர்களும் சமைத்து ருசிக்கலாம் என்கிற விளம்பரத்தின் மூலமாக, மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி, இன்றைக்கு தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. அவசரமாக அலுவலகம் செல்லும்போதும் சரி, நேரம் கடந்து வீடு திரும்பினாலும் சரி, பேச்சுலர்கள் பசியை பெரும்பாலான நேரங்களில் தீர்ப்பது இந்த உடனடி நூடுல்ஸ்தான்.
சிறு சிறு மளிகைக் கடைகள் முதல் பன்னாட்டு பல்பொருள் அங்காடிகள் வரை, பெரும்பாலான அலமாரிகளை அலங்கரித்து ஆக்கிரமித்திருப்பது இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகள்தான். அடிக்கடி சாப்பிட முடியாவிட்டாலும், அவசரத்திற்கு உதவுவதால், இல்லத்தரசிகளின் மாத மளிகை பட்டியலிலும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்.
'உலக இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் சங்கம்' (World Instant Noodles Association) எனும் அமைப்பின் கூற்றுப்படி, ஒரு மனிதன் ஒருமுறை உண்ணும் நூடுல்ஸின் அளவு 57 கிராம் என அளவிடப்படுகிறது. அதை ஒரு சர்விங் (serving) என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதன்படி கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு ஆண்டும், உலக மக்கள் உட்கொள்ளும் உடனடி நூடுல்ஸின் அளவு பத்தாயிரம் கோடி சர்விங் (serving) என்று, அதே 'உலக உடனடி நூடுல்ஸ் சங்கம்' கூறுகிறது. இன்னும் எளிமையாகக் கூறவேண்டும் என்றால், உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது 13 முறையாவது உடனடி நூடுல்ஸை உட்கொண்டிருக்க வேண்டும்.
அப்படியென்றால், நீங்களும் நிச்சயமாக சாப்பிட்டிருப்பீர்கள்… ஆனால், இந்த உடனடி நூடுல்ஸ் எங்கிருந்து வந்தது? எப்படி எல்லா இடங்களுக்கும் பரவியது? என்றெல்லாம் யோசித்திருக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
எங்கும் காணப்படும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்
வெற்றிகரமான தொழில்துறை உணவுகளில் ஒன்றுதான் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். விலையும் குறைவு, சமைப்பதும் எளிமை என்பதால், இதை எங்கு வேண்டுமானாலும் சமைக்கலாம், சாப்பிடலாம். அதனால்தான், எவரெஸ்ட் உச்சிக்கு செல்பவர்களும் கொண்டு செல்கிறார்கள். விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கும் கொண்டு செல்கிறார்கள்... இவ்வளவு ஏன், அமெரிக்க சிறைகளில் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிற உணவுப் பொருளாகவும் இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாறியிருக்கிறது.
எங்கிருந்து வந்தது?
இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானுக்கு மீண்டும் செல்ல வேண்டும். குண்டுவீச்சினால் பல பகுதிகள் அழிக்கப்பட்டு, பெரும்பாலான மக்கள் பட்டினி கிடந்த காலம் அது. Momofuku Ando என்கிற ஜப்பானிய தொழிலதிபர் தன்னுடைய தொழிலில் நஷ்டமடைந்து, கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார். அவர், தன்னை புதுப்பித்துக்கொண்டு, மீண்டுவர நினைத்தார். கடும் குளிரில், ஒரு கப் பாரம்பரிய ரேமென் நூடுல்ஸுக்காக (Ramen Noodles) பசியோடு நீண்ட வரிசையில் காத்திருந்த ஜப்பானியர்களைக் கண்டதும், Momofuku Ando-வுக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது.
அமெரிக்க அரசாங்கத்தால் ஜப்பானுக்கு வழங்கப்பட்ட கோதுமை உணவுகளை உண்பதற்கு, மக்களை ஊக்குவிக்க ஜப்பானிய அரசாங்கம் வழி தேடுவதும் அண்டோ-வுக்கு தெரியவந்தது.
உடனே தன்னுடைய வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருக்கும் மரக்குடிலுக்குச் சென்றவர், ஒரு ஆண்டு கழித்து, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தயாரிப்பு முறையோடு வெளியே வந்தார். அவர் நினைத்தது போலவே, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அதிவேகமாக பிரபலமடையத் தொடங்கியது. ஜப்பானின் நவீன பொருளாதாரத்திற்கு எழுச்சியை ஊட்டி, மாணவர்களுக்கும், பசியோடு இருந்த தொழிலாளர்களுக்குமான உணவாகவே மாறிவிட்டது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். மிக விரைவாக, உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பரவத்தொடங்கியது. ஏனென்றால், யாருடைய சுவைக்கும் பொருந்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கக்கூடிய உணவாக இந்த இன்ஸ்டன்ட்நூடுல்ஸ் பார்க்கப்பட்டது.
பல விதமான சுவையில்…
தாய்லாந்தில், காய்கறிகளின் கலவையுடன் கூடிய சுவையில் க்ரீன் கர்ரி நூடுல்ஸ் மிகவும் பிரபலமானது. மெக்ஸிகோவில், தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு கலந்த சால்சா ரெசிபி மிகவும் பிரபலம். ஜப்பானுக்குச் சென்றால், கோழி இறைச்சியும் உருளைக்கிழங்கு வறுவலும் கலந்த நூடுல்ஸை முயற்சி செய்யலாம். பாகிஸ்தானில், பீட்சா சுவையிலான நூடுல்ஸ் மிகப் பிரபலம்.
அமெரிக்காவில், சிறை உணவுக்கான செலவுகளைக் குறைக்கும் வகையில், கைதிகளின் உணவில் கூட விலை மலிவான இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அதிக பங்கு வகிக்கிறது. அவர்கள், நூடுல்ஸில் தண்ணீரை கலந்து மாவாக அரைத்து, பீட்சாவுக்கான தற்காலிக அடித்தளமாகப் பயன்படுத்துகிறார்கள். நொறுக்கப்பட்ட நூடுல்ஸை பயன்படுத்தி, சாண்ட்விச்கள் செய்கிறார்கள். 'கோக் ரேமென்' என்கிற பெயரில், கோலா குளிர்பானம் கலந்தும் நூடுல்ஸ் சாப்பிடுகிறார்கள்.
ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நூடுல்ஸ் பற்றி, அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தோனேசியா போன்ற நாடுகளில் காடழிப்புக்கு பங்களிக்கும் வகையில், பாமாயிலில் நூடுல்ஸ் தயாரிக்கப்படுவதும், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அவை அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதும், அதற்கு சில காரணங்களாகக் கூறப்படுகிறது.
அதே சமயம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரியான விரைவான உணவுகள், பூகம்பம் போன்ற அவசரகால சூழ்நிலைகளில், உயிர்காக்கும் விஷயமாக இருப்பதையும் மறுக்க முடியாது.
இன்ஸ்டன்ட் நூடுல்ஸை தயார் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள்தான் ஆகும்… அடுத்த முறை அதை செய்யும்போது, ஜப்பானில் ஒரு குடிசையில் தொடங்கி, உலகம் முழுவதும் உள்ள மளிகைக் கடைகள் வரை பரவியிருக்கும் அதன் வரலாற்றை அந்த இரண்டு நிமிடங்களுக்குள் நினைத்துப் பாருங்கள்…
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்