உணவும் உடல்நலமும்: புரோட்டீன் பவுடர் சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக புரோட்டீன் பவுடர் எனப்படும் புரத மாவுகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது.

உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்பவர்கள், வெவ்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மத்தியில் இது அதிகமாக உள்ளது. இப்படி புரதத்தை தனியாக எடுத்துக் கொள்வது நல்லதா, உண்மையில் புரதத்தின் தேவை என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன் அளித்திருக்கும் பதில்கள் இங்கே.

நமது உடலுக்கு புரதம் ஏன் தேவை?

நமது உடல் கட்டுமானத்தின் ஓர் அங்கமாக புரதம் இருக்கிறது. திசுக்களின் வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் புரதச் சத்து தேவைப்படுகிறது. ரத்தச் சிவப்பணுக்களில் ஒருவிதமான புரதக் கலவை இருக்கிறது. இது உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுகிறது.

நாம் உண்ணும் புரதத்தில் பாதியளவு நொதி உற்பத்திக்கு பயன்படுகிறது. உணவைச் செரிப்பதற்கு நொதிகள் தேவைப்படுகின்றன. உடலில் புதிய செல்கள் உருவாக வேண்டுமென்றாலும், வேதிப் பொருள்கள் உற்பத்தி செய்ய வேண்டுமென்றாலும் புரதச் சத்து தேவைப்படும்.

ஹார்மோன்கள் சீராக வேலை செய்யவும், பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைப் பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காயங்கள் விரைவாகக் குணமடையவும் புரதச் சத்து உதவுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் விளையாட்டு தொடர்பான காயங்களை ஆற்றவும், தசை இழப்பை மீட்பதற்கும் புரதம் தேவைப்படுகிறது.

எந்தெந்த உணவுகளில் இருந்து புரதம் கிடைக்கிறது?

சைவ உணவுகளை எடுத்துக் கொண்டால் கொண்டைக் கடலை, சிவப்பு காராமணி, சோயா பீன்ஸ், பச்சைப் பட்டாணி, பாதாம் பருப்பு, கோதுமை மாவு, எள், பூசணி விதை, ஆளி விதை போன்றவற்றில் புரதச் சத்து இருக்கிறது. இவை தவிர பால் சார்ந்த பொருள்களில் புரதம் உள்ளது.

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. இவற்றை உண்பதன் மூலம் நமது உடலுக்கு புரதம் கிடைக்கும்.

நமது உடலுக்கு எந்த அளவு புரதம் தேவை?

எல்லோருக்கும் புரதச் சத்து தேவை என்றாலும், ஒரே அளவு தேவைப்படுவதில்லை. வயது மற்றும் உடல் எடைக்கு ஏற்றபடி புரதச் சத்து தேவைப்படும் அளவை இந்திய மருத்துவக் கவுன்சில் 2020-ஆம் வெளியிட்டிருக்கிறது.

உதாரணத்துக்கு 65 கிலோ உடல் எடை கொண்ட ஓர் ஆணுக்கு ஒரு நாளைக்குச் சராசரியாக 54 கிராம் புரதம் தேவை. 55 கிலோ எடை கொண்ட பெண்ணுக்கு 46 கிராம் புரதம் தேவை என பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்பிணிகளுக்கு இரண்டாவது மூன்று மாதங்களில் வழக்கமாகப் பரிந்துரைக்கப்படும் 46 கிராம் புரதத்துடன் கூடுதலாக 9 கிராம் புரதம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கடைசி மூன்று மாதங்களில் கூடுதலாக 22 கிராம் புரதம் தேவைப்படும்.

ஆறுமாதம் வரையிலான பச்சிளம் குழந்தைகளுக்கு 8 முதல் 8.5 கிராம் வரையிலான புரதம் தேவைப்படும். ஆறு முதல் 12 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு 10 கிராம் அளவுக்கு புரதச் சத்து தேவைப்படும்.

யாருக்கு அதிக அளவு புரதம் தேவை?

கடுமையான உடற்பயிற்சி செய்யக் கூடியவர்களுக்கு கூடுதலாக புரதச் சத்து தேவை. சைவ உணவுக்காரர்கள் பால் சார்ந்த பொருள்கள் கூட சாப்பிடவில்லை என்றால் அவர்களுக்கும் கூடுதலாக புரதச் சத்து தேவைப்படும்.

புற்றுநோயாளிகள், தீப்புண் ஏற்பட்டவர்கள், ஊட்டச் சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிக புரதம் எடுத்துக் கொள்ளலாம்.

ஹைப்போ தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் உடல் எடையைப் பராமரிப்பதற்கு அதிக புரதம் எடுத்துக் கொள்ளலாம்.

யார் அதிகப் புரதம் எடுத்துக் கொள்ளக்கூடாது?

சிறுநீரகக் குறைபாடு இருப்பவர்களுக்கு அதிக புரதம் ஆபத்தானது. சிறுநீரகத்தால் புரதத்தை வெளியே தள்ள முடியாத நிலை ஏற்படும் என்பதால், ஏற்கெனவே இருக்கும் பிரச்னையை இன்னும் மோசமாக்கும்.

இதேபோல் ஃபீனைல்கீட்டோனுரியா (phenylketonuria) எனப்படும் வளர்சிதை மாற்றக் கோளாறு உள்ள குழந்தைகளும் அதிகமாக புரதச் சத்து இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

புரத மாவுகள் (Protein Supplements) எடுத்துக் கொள்வது நல்லதா?

இயற்கையான உணவுகள் வழியாக இல்லாமல், Whey Protein போன்ற புரத மாவுகள் மூலமாக அதிக அளவிலான புரதத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரலை பாதிக்கும் அபாயம் உண்டு. அதிலும் உடற்பயிற்சியே செய்யாதவர்கள் இதை எடுத்துக் கொள்வது ஆபத்தானது.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகலாம், சிறுநீரகம் வழியாக சுண்ணாம்புச் சத்து அதிகமாக வெளியேறலாம், ரத்தம் அமிலத் தன்மை கொண்டதாக மாறவும் வாய்ப்புள்ளது.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதுபோன்ற புரத மாவுகளை எடுத்துக் கொள்வதும், தொடர்ச்சியாக புரத மாவுகளை உட்கொள்வதும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: