கருக்கலைப்பு உரிமை: அமெரிக்காவை அதிர வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு - முழு விவரம்

Abortion rights activists and anti-abortion activists rally at the Supreme Court, Washington, Usa - 23 Jun 2022

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.

அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், 'கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதேபோல, 1992ஆம் ஆண்டில் பெனிசில்வேனியா மற்றும் கேசே இடையிலான வழக்கில், '22 முதல் 24 வார கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகள் மாற்றப்படும். கருக்கலைப்பு நடைமுறைக்கு தடை விதிக்க இனி மாகாணங்கள் ஒவ்வொன்றாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

அநேகமாக அமெரிக்கா மாகாணங்களில் பாதியாவது கருக்கலைப்புக்கு தடை விதிக்க ஏதுவாக புதிய சட்டம் அல்லது கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. மற்றவை சில புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

மொத்தத்தில், கருத்தரிக்கும் வயதுடைய சுமார் 36 மில்லியன் பெண்கள் கருக்கலைப்புக்காக செல்ல முடியாத நிலையை இது ஏற்படுத்தும் என்று பிளாண்ட் பேரன்ட்ஹுட் என்ற கருக்கலைப்பு சேவை வழங்கும் சுகாதார அமைப்பு கூறுகிறது.

1px transparent line
1px transparent line

என்ன வழக்கு?

15 வாரங்களுக்குப் பிந்தைய சிசுவை கருக்கலைப்பு செய்வதற்கு மிஸ்ஸிசிப்பி மாகாணம் விதித்த தடையை எதிர்த்து நடைபெற்ற டாப்ஸ் மற்றும் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு இடையிலான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நீதிமன்ற அமர்வில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்பு உரிமைக்கு முடிவு காணும் வகையில், சித்தாந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

"எனவே கருக்கலைப்புக்கான உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை என்று நாங்கள் கருதுகிறோம் ... மேலும் கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்ப வழங்கப்பட வேண்டும்" என்று தீர்ப்பின் ஒரு பகுதியில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த தமது சொந்த தீர்ப்புக்கு தலைகீழாக உள்ளது. இப்படி நடப்பது மிகவும் அரிதான செயல். மேலும் தேசத்தை பிளவுபடுத்தும் அரசியல் வாதங்கள் இதன் மூலம் தூண்டப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கருக்கலைப்பு பற்றிய கருத்துக்கள் தொடர்பாக முரண்பட்ட நிலைபாடு நிலவும் மாகாணங்களில் (பென்சில்வேனியா, மிஷிகன், விஸ்கான்சின் போன்றவை) - தேர்தல் அடிப்படையில் ஒவ்வோர் முறையும் தடை விதிக்கும் சட்ட நடைமுறையை தீர்மானிக்க முடியும்.

மற்றவற்றில், தனி நபர்கள் கருக்கலைப்புக்காக வெளி மாகாணங்களுக்குச் செல்லலாமா அல்லது அஞ்சல் சேவைகள் மூலம் கருக்கலைப்பு மருந்துகளை ஆர்டர் செய்யலாமா என்பது உள்ளிட்ட புதிய சட்டப் போராட்டங்களுக்கு இந்தத் தீர்ப்பு வழிவகுக்கலாம்.

A map shows which states have legislation prepared to affect abortion in the event of Roe v Wade being overturned

கலிபோர்னியா, நியூ மெக்சிகோ, மிஷிகன் உள்ளிட்ட பல மாகாணங்களில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆளுநர்கள் 'ரோ Vs வேட்' வழக்கில் முந்தைய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால், கருக்கலைப்பு உரிமையை தங்கள் அரசியலமைப்பிற்குள் உள்ளடக்கும் திட்டங்களை ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கருக்கலைப்பு உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஏழு மாகாணங்களின் ஜனநாயக கட்சியின் அட்டர்னி ஜெனரல்களுடன் கடந்த வியாழக்கிழமை விவாதித்தார் என்று ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னணி

1973ஆம் ஆண்டு நடந்த மைல்கல் ரோ Vs வேட் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏழுக்கு இரண்டு வாக்குகள் மூலம் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை கலைக்கும் உரிமை அமெரிக்க அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பு அமெரிக்கப் பெண்களுக்கு அவர்கள் கருத்தரித்த முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழுமையான உரிமையை வழங்கியது, ஆனால் இரண்டாவது மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்து கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுவே 6-9 மாதங்களில் கருக்கலைப்பு செய்வது அறவே தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கடந்த பல தசாப்தங்களில், கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பை சுமார் ஒரு டஜன் மாகாணங்கள் திரும்பப் பெற்றுள்ளன.

1px transparent line

ரோ Vs வேட் வழக்கு: எளிதில் புரிந்து கொள்ள உதவும் சில பின் குறிப்புகள்

  • 1971இல் கருக்கலைப்பு செய்யத் தவறிய பெண் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது ரோ வெர்சஸ் வேட் வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
  • கருக்கலைப்பு வசதிகளை எளிதாக அணுக வேண்டும் என்றும் கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு தொடர்பான முடிவு பெண்ணின் கையில் இருக்க வேண்டும் என்றும் அது அரசு அல்ல என்றும் மனுதாரர் கூறினார்.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1973இல் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. அதில் கருக்கலைப்பு சட்டபூர்வமானது மற்றும் கருக்கலைப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசியலமைப்பு உரிமை அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.
  • இதன் பிறகு, மருத்துவமனைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு வசதிகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
  • ஆனால் அதன் பிறகு விஷயம் தீவிரம் அடைந்தது. மதக் குழுக்களுக்கு இது மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது, ஏனென்றால் கருவுக்கு வாழ உரிமை உண்டு என்று அவர்கள் நம்பினர்.
  • இந்த விவகாரத்தில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே கருத்துகள் வேறுபட்டன. 1980வாக்கில், இந்த பிரச்னை மத ரீதியிலானதாக மாறியது.
1px transparent line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: