காற்று மாசுபாடு: இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம் 5 ஆண்டுகள் குறையும் - சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

(இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (15/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)

காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என, 'இந்து தமிழ் திசை' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் (ஏகியூஎல்ஐ) அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து அச்செய்தியில் குறிப்பிடப்பட்டதாவது:

"இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது.

அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது.

இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சீனாவிடமிருந்து மானியமாக அரிசி: சீன தூதரகம்

சீனாவிடமிருந்து மானியமாக இலங்கைக்கு அரிசி கிடைக்கப் பெறவுள்ளது. 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது என, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "முதற்கட்ட அரிசி தொகை எதிர்வரும் 25ஆம் தேதியும் இரண்டாம் கட்டம் 30ஆம் தேதியும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன.

குறித்த அரிசி தொகையில் 10,000 மெட்ரிக் டன் அரிசியை பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உபயோகிப்பதற்கு வழங்கவுள்ளதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது காணப்படும் உரப்பிரச்னையால் நெற் பயிர்ச்செய்கை குறைவடைந்துள்ளது. இதனால் பெறுமளவான அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமையே காணப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய கடந்த மாதம் தமிழ்நாட்டு அரசிடமிருது 40,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது சீனாவும் அரிசியை வழங்கி இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ரணில் விக்ரமசிங்க புதிய திட்டம்

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் சுற்றுலாப் பயணிகளின் ஊடாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையினருடன் பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், "குறித்த இலக்கை எட்டுவதற்காக உயர்ந்த செலவினத்தைக் கொண்ட 15 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்ட காலத் திட்டமொன்றை உருவாக்குமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: