அண்டார்டிகா இருட்டில் உடல்நலம் குறித்து அறிவியல் ஆய்வு - விண்வெளி பயணத்துக்கு உதவுமா?

பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்பவர்கள் பல மாத காலம் தங்கி இருப்பதால், அவர்கள் தங்கியிருக்கும் காலத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கம்.

ஆனால், பூமியிலேயே ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டியவர்கள் அவ்வாறான முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பூமியில் இருக்கும் கண்டங்களிலேயே பனியும் குளிரும் அதீதமாக இருக்கும் அண்டார்டிகாவில் உள்ள ஆய்வாளர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு இந்த நிலைதான்.

நான்கு மாத காலம் நீடிக்கும் மிகவும் நீண்ட இரவு அண்டார்டிகாவில் தொடங்கியுள்ளதன் காரணமாக நான்கு மாத காலத்துக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் அந்த பனி கண்டத்தில் பணி செய்பவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தகவலின்படி பூமியின் தென் துருவத்தில் சூரியன் தினந்தோறும் உதித்து மறையாது. ஒரு முறை உதித்தால், அடுத்த சில மாதங்களுக்குப் பிறகுதான் மறையும்.

ஆகஸ்டு மாதம் உதிக்கத் தொடங்கினால் அக்டோபர் வரை சூரிய உதயம் நிகழும். பின்னர் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை சூரிய ஒளி இருக்கும். பின்னர் மார்ச் முதல் மே மாதம் வரை சூரிய அஸ்தமனம் நிகழும் என்கிறது நாசா.

மே மாதம் முதல் அண்டார்டிகாவின் தொடுவானத்துக்கு கீழே சூரியன் சென்றுவிடும். மே மாதம் தொடங்கும் இருட்டு, தொடர்ந்து நான்கு மாத காலத்துக்கு நீடிக்கும். மீண்டும் சூரியன் உதிக்க ஆகஸ்டு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

பூமியின் மீது சூரிய ஒளி விழும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அண்டார்டிகா அமைந்துள்ளதால் இவ்வாறு நடக்கிறது.

இதன்படி மே 4ஆம் தேதி சூரியன் மறைந்த பிறகு, அண்டார்டிகா கண்டத்தில் மிகவும் நீண்ட இரவு தொடங்கியுள்ளது என்று மே 12ஆம் தேதியன்று ஐரோப்பிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.

இந்த பனி காலத்தில் அந்த கண்டம் முழுவதும் இருள் சூழ்ந்திருக்கும். இந்த நான்கு மாதங்களுக்கு அங்கு விமானங்கள் பறக்க முடியாது என்பதால், அங்கு பொருட்களைக் கொண்டு செல்லவோ, மனிதர்களை அழைத்துச் செல்லவோ முடியாது என்கிறது ஐரோப்பிய விண்வெளி முகமை.

தங்கள் உடலில் தாங்களே சோதனை செய்யும் ஆய்வுக்குழு

அண்டார்டிகாவில் கடல் மட்டத்தில் இருந்து 3233 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இத்தாலி - பிரான்ஸ் கூட்டு ஆய்வு மையமான கான்கார்டியா. இவ்வளவு உயரத்தில் குளிர் -80 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்பதால் இந்தக் காலகட்டத்தில் பனி உறைந்து, இருள் சூழ்ந்திருக்கும் என்று கூறும் அந்த முகமை, இதனால் அங்கு தங்கி இருப்பவர்களுக்கு மூளையில் ஆக்சிஜன் குறையும் (chronic hypobaric hypoxia) என்று கூறுகிறது.

உறைய வைக்கும் குளிரும், இருளும் நிறைந்த இத்தகைய புறச்சூழலில் இருப்பது கிட்டத்தட்ட வேற்றுகிரகம் ஒன்றில் வாழ்வதைப் போன்றது.

இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி முகமையின் உதவியுடன் கான்கார்டியா மையத்தில் ஹான்னஸ் ஹேக்சன் எனும் மருத்துவரும் அவரது குழுவினரும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான அதீத தனிமைப்படுத்தலில் மனிதர்கள் எவ்வாறு தாக்குப்பிடிக்கிறார்கள், அப்படி இருப்பவர்களின் தூங்கும் வழக்கங்கள், குடல்நாளம் எவ்வாறு இயங்குகிறது, மனநிலை உள்ளிட்டவை குறித்து, உயிரி-மருத்துவ உபகரணங்களைக் கொண்டு, தங்கள் உடல்களிலேயே ஹேக்சன் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு விண்வெளிக்குப் பயணம் செய்பவர்கள், வரும் காலங்களில் அண்டார்டிகா சென்று ஆய்வு செய்பவர்கள் ஆகியோருக்கு உதவியாக இருக்கும்.

அண்டார்டிகா செல்பவர்களைப் போலவே விண்ணுக்குப் பயணம் மேற்கொள்வோருக்கும் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் விட்டமின் - டி போன்ற ஊட்டச்சத்துகள் கிடைக்காது என்கிறது நாசா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :