யுக்ரேனிய அதிபரின் வார்த்தை ஜால உத்தி மேற்கு நாடுகளை எந்த அளவுக்கு ஈர்க்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பால் ஆடம்ஸ்
- பதவி, தூதரகச் செய்தியாளர்
யுக்ரேனிய போர்க்களத்தில் அந்நாட்டு ராணுவம் விடாமுயற்சியுடன் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையெடுப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மேற்கு நாடுகளை நோக்கி 'ஒரு தகவல் போரை' நடத்தியிருக்கிறார்.
கடந்த இரண்டு வாரங்களில் 10 நாடுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டங்களில் அவர் சிறப்புரையாற்றி, பேசிய எல்லா இடங்களிலும் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டும் அளவுக்கு மரியாதையைப் பெற்றார்.
முற்றுகையிடப்பட்ட தலைநகர் கீயவில் இருந்து நேரலை காணொளி காட்சி வாயிலாக பச்சை நிற சட்டையில் தோன்றிய ஸெலென்ஸ்கி, தமது நிலையை தெளவுபடுத்திய பிறகு வணக்கம் செலுத்தி உரையை நிறைவு செய்தார். அதேவேளை அவரது உரையை கேட்ட உறுப்பினர்கள் கைதட்டல் ஒலிக்க, எதிரேயே ஸெலென்ஸ்கியின் உருவம் மறைகிறது. கீயவிலும் உலக அரங்கிலும் தனது இருப்பை உறுதிப்படுத்தும் விஷயங்களைக் கவனிக்க வேண்டிய அவசரத்தில் அவர் இருக்கிறார்.
ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஜோனாத்தன் இயல், "தேசத்தின் உணர்வை எவ்வாறு உருவகப்படுத்துவது என்பது ஸெலன்ஸ்கிக்குத் தெரியும். "பேச்சில் மட்டுமல்ல, அவர் தோன்றும் விதத்திலும், பின்னணி காட்சிகளை இடம்பெறச் செய்வதிலும் அவர் இதைப் பிரதிபலிக்கிறார்," என்கிறார்.
கையாளும் முறையில் வித்தியாசம்
மார்ச் 3ஆம் தேதி லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடந்த காணொளி உரை திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்தது. 'சர்வதேச ஆதரவைத் திரட்டுதல்' என்ற ஒரேயொரு அவசர நோக்கத்தை அது கொண்டிருந்தது.
பெர்லின் சுவரின் வீழ்ச்சியில் இருந்து நியூயார்க் மற்றும் வாஷிங்டன் மீதான 9/11 தாக்குதல்கள் வரை, அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அவர் உரையின்போது குறிப்பிட்டார்.
புதன்கிழமை இதேபோல பாரிஸில் நடந்த மற்றொரு கூட்டத்தில் பேசியபோது, "சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற தேசிய முழக்கத்துடன் உரையை தொடங்கினார். ஜப்பானில், அவர் அணுசக்தி பேரழிவின் அச்சுறுத்தலை தனது உரையில் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு நாட்டுக் கூட்டத்திலும் அவர் பேசிய விஷயங்கள் சாதாரணமானவை அல்ல. அவை மிகவும் உள்ளர்த்தம் கொண்டவை.
ஸெலென்ஸ்கி, வீண் பேச்சுக்களை பேசி நேரத்தை விரயம் செய்வதில்லை. நேராகவே விஷயத்திற்கு வருகிறார். லண்டனில் அவர் உரையாற்றிய ஓரிரு நிமிடங்களுக்குள், இரண்டாம் உலக போரில் அந்நாட்டின் சகாப்தத்தை வரையறுக்கும் போரான பிரிட்டன் போருடன் யுக்ரேனின் 13 நாள் போரை ஒப்பிட்டுப் பேசினார்.
ஷேக்ஸ்பியரின் "To be or not to be" என்ற வாசகத்தின் மூலம், தனது இருப்பை நிலை நாட்ட வேண்டிய நிலையில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி அவர் குறிப்பிடுகிறார். ஸெலன்ஸ்கி பிரிட்டனின் போர்க்கால தலைவரைப் பெயரிடாமல், 1940ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சர்ச்சிலின் உரையை யுக்ரேனின் புவியியலுக்கு ஏற்றவாறு நுட்பமாக மாற்றி அந்த மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
"நாங்கள் காடுகளில், வயல்களில், கடற்கரைகளில், நகரங்கள் மற்றும் கிராமங்களில், தெருக்களில், மலைகளில் போராடுவோம்," என்று அவர் பேசினார்.
ஆனால் ஸெலென்ஸ்கியின் நாடாளுமன்ற உரைகள் நாளுக்கு நாள், ஆழமான மற்றும் கடுமையான குறிப்புகளை கொண்டதாக இருந்தன. தங்களுக்குப் போதுமான ஆதரவை வழங்கத் தவறியதாக அவர் கருதும் மேற்கு நாடுகளைக் கடிந்து கொள்ள அஞ்சவில்லை.
அவமானத்தின் ஆற்றல்
ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் பொது மற்றும் சர்வதேச விவகாரங்களின் பேராசிரியரான நோமி கிளாரி லாசர், "ஒவ்வொரு உரையிலும், என்ன மனிதர் நீங்கள்? என்ன மாதிரியானது உங்களுடைய தேசம்? சூழலுக்கு ஏற்ப வாழத் தெரியாவிட்டால் உங்களுக்கு அவமானம்," போன்ற கடும் சொல்லாடல்களை அவர் பயன்படுத்தியதை கவனிக்க வேண்டும்," என்று குறிப்பிடுகிறார்.
அமெரிக்க காங்கிரஸில் (நாடாளுமன்றம்) ஆற்றிய உரையின்போது அதில் பெர்ல் ஹார்பர், மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மவுன்ட் ரஷ்மோர் பற்றிய குறிப்புகள் நிறைந்திருந்தன. அதில்அதிபர் ஸெலென்ஸ்கி தனது பார்வையாளர்களைத் தெளிவாக, வெளிப்படையாகவே கண்டித்தார்.
"நாங்கள் செய்யும் செயலுக்காக எதிர்வினையை எதிர்நோக்குகிறோம். அது தீவிரவாதத்துக்கு எதிர்வினை. இப்படி எதிர்ப்பது தவறா? என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இத்தாலிய பிரதிநிதிகள் சபையில் உரையாற்றிய அதிபர் ஸெலன்ஸ்கி, மீண்டும் தனது பார்வையாளர்களிடையே தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். புதினின் நெருக்கமானவர்கள் இத்தாலியில் விடுமுறையைக் கொண்டாடி வருவதை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.
"கொலைகாரர்களுக்குப் புகலிடம் வழங்காதே" என்று காட்டமாகக் கூறினார்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
தூண்டப்படாத படையெடுப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டின் அதிபராக ஸெலன்ஸ்கிக்கு அந்த உரிமை உள்ளது என்று பேராசிரியர் லாசர் கூறுகிறார்.
"தன்னை ஒரு தார்மிக நடுநிலைவாதியாக நிலை நிறுத்திக்கொண்ட ஒருவரால் மட்டுமே, வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் பேச முடியும். அதுவும் அவர்களை நோக்கி 'உங்களுக்கு அவமானம்' என்று வெளிப்படையாக வேரு எவராலும் கூற முடியாது" என்கிறார் பேராசிரியர் லாசர்.
ஸெலென்ஸ்கி தனது பார்வையாளர்கள் கொண்டிருக்கும் யுக்ரேன் மீதான அலட்சியப் போக்கின் சுவடை அசைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருப்பது அவரது உரையின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
"அவரும் அவரது குழுவும் விரக்தி அடைந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்," என்று சாத்தம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் ஒரிசியா லுட்செவிச் கூறுகிறார்.
எழுந்து நின்று மரியாதை
நெருங்கிய உதவியாளரான டிமிட்ரோ லிட்வின் உதவியுடன் எழுதப்பட்ட அவரது ஒவ்வொரு உரையையும், பார்வையாளர்கள் வாய் பிளந்து கேட்டனர்.
ஸெலென்ஸ்கியின் நியாயமான கோபத்தில் வெளிப்பட்ட கடும் கண்டனங்கள், அரசியல்வாதிகளையும் ஆட்டிப் பார்த்து விட்டதாக பலரும் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அவர் தனது சொந்த மக்களுக்காகவும் சர்வதேச அரங்குகளில் பேசுகிறார்.
எங்கு பேசும்போதும் யுக்ரேனிய மொழியிலேயே அவர் பேசுகிறார், அரசியல் தலைவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் பகட்டான உடைகளை அவர் தவிர்க்கிறார். யுத்தம் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னரே அங்கீகார சரிவை சந்திக்கும் ஒரு அரசியல்வாதிக்கு இது ஒரு அசாதாரண மாற்றம்.
போருக்கு முன்பு வரை, ஒரு நகைச்சுவை நடிகராக ஸெலென்ஸ்கியின் கடந்த காலம் இருந்தது. அது இப்போது எதிர்மறையாகிவிட்ட சூழலில் எதிர்த்துப் போரிடும் குணமே அவருக்கு சாதகமாகி இருக்கிறது.
"நகைச்சுவையாளர்கள் தங்கள் பார்வையாளர்களுடன் மிக நெருக்கமான தொடர்பின் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்," என்கிறார் பேராசிரியர் லாசர். "எந்த உணர்வு அசௌகரியமாக உணரச் செய்யும், எது உற்சாகப்படுத்தும், எது சிரிக்க வைக்கும் என்பதை ஸெலென்ஸ்கி அறிந்து வைத்திருக்கிறார்," என்கிறார்.
எளிமையான, அலங்காரமற்ற இவரது உரைகள், மேற்கு நாடுகளின் உள் நாட்டு வட்டாரங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
"அவர் கீழ்மட்டத்தில் இருந்து இந்த வகையான அழுத்தத்தை உருவாக்க முயற்சிக்கிறார்," என்கிறார் பேராசிரியர் லாசர். "அரசாங்கங்கள் மீதான உள்நாட்டு அழுத்தம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அவர் கோரு சுதந்திர உரிமை மிகவும் விலை மதிப்பற்றது."
திட்டமிட்ட காய் நகர்த்தல்
ஸெலென்ஸ்கி வெறும் அனுதாபத்தைப் பெறுவதற்காக உலக நாடுகளின் நாடாளுமன்ற கூட்டங்களிலும் சர்வதேச அரங்குகளிலும் மெய்நிகர் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவில்லை. யுக்ரேன் தன் இருப்புக்காகப் போராடுகிறது, நட்பு நாடுகளின் வலுவான, நீடித்த ராணுவ உதவியுடன் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதை அவர் அறிந்து வைத்திருக்கிறார்.
பல வாரங்களாக, அதிபர் ஸெலென்ஸ்கி, யுக்ரேன் வான் பகுதியில் தடை மண்டலத்தை அமைக்குமாறு நேட்டோவிடம் கேட்டுக் கொண்டு வந்துள்ளார். அந்த கோரிக்கை நிறைவேறாது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அடுத்த குறைந்தபட்சம் அதற்கு அடுத்த சிறந்த விஷயத்தையாவது பெறலாம் என்பதே அவரது எண்ணம்.
அவர்கள் "விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் மண்டலம்' பிரகடனத்தை அறிவிக்க முடியாது என்று கூறுவார்களேயானால் வேறு என்ன தருவீர்கள் என்று அவர்களிடம் ஸெலென்ஸ்கி கேட்கலாம். இது தான் உத்தி என்று நினைக்கிறேன்" என்கிறார் லுட்செவிச்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த செவ்வாய்க்கிழமை ஸெலென்ஸ்கியின் அலுவலக தலைவர் ஆண்ட்ரி எர்மாக், விமானங்கள் பறக்க தடை விதிக்கும் மண்டலம் என்ற முழக்கத்தில் சில மாற்றுகளை முன்வைத்தார்.
"தயவுசெய்து விமானங்கள் பறப்பதற்கான தடை மண்டலத்தை அமல்படுத்தவும் அல்லது எங்களுக்கு நம்பகமான வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கவும்" என்று அவர் கோரினார்.
யுக்ரேனின் வான் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் பழைய, ஆனால் பயனுள்ள சோவியத் தயாரிப்பு சாதனங்களை வழங்கவும் அமெர்க்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் ஸெலென்ஸ்கியின் இடைவிடாத அணுகுமுறை பலனளிப்பதாக ஜோனாத்தன் இயல் கூறுகிறார்.
வேறு என்ன சாதனங்களை யுக்ரேனுக்கு வழங்கலாம் என்பது பற்றித்தான் இப்போது மேற்கு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கிறார்கள். இதில் இருந்தே எல்லாம் புரிகிறது என்கிறார் ஜோனாத்தன் இயல்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












