முன்னாள் சோவியத் யூனியனின் நினைவுகளை ஞாபகப்படுத்தும் 10 வரலாற்று புகைப்படங்கள்

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 32வது கட்டுரை இது.) சோவியத் யூனியன் (USSR), ஒரு காலத்தில் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடாக உலகம் முழுவதும் தன் செல்வாக்கை நிலைநாட்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு , 1991 டிசம்பர் 25 ஆம் தேதி அது பிளவுபட்டது.

சோவியத் யூனியனின் ஆதிக்கம் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை நீடித்தது. அமெரிக்காவிற்கு கடும் சவாலை அது அளித்தது.

சோவியத் சகாப்தத்தின் செல்வாக்கை சித்தரிக்கும் 10 மறக்கமுடியாத படங்களை பிபிசி உங்களுக்காக வழங்குகிறது:

1. அறிவியல் சோஷியலிசத்தின் தந்தை:ஜெர்மன் தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் 1848 ஆம் ஆண்டு "கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ" வெளியிட்டனர். இது சோவியத் யூனியனுக்கு மிக முக்கியமான ஆவணமாக நிரூபணமானது. 1917 இல் ரஷ்யாவில் நடந்த போல்ஷிவிக் புரட்சிக்கும், அதைத் தொடர்ந்து உருவான சக்திவாய்ந்த சோவியத் யூனியனுக்கும் இந்தபுத்தகம், உத்வேகமாக இருந்தது.

2. லெனினின் மறக்கமுடியாத மற்றும் வரலாற்று படம்

போல்ஷிவிக் புரட்சிக்கு தலைமை வகித்த விளாதிமிர் இ லெனின் பின்னர் சோவியத் யூனினின் முதல் அதிபரானார். 1919 இல் செம்படை உறுப்பினர்களிடம் அவர் உரையாற்றும் போது எடுக்கப்பட்ட படம் இது.

3. ரெட் ஸ்கொயரின் புகழ்பெற்ற அணிவகுப்பு

மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் (அதிபர் மாளிகை) முன் உள்ள பெரிய திறந்தவெளியில், 1919 முதல் இன்று வரை சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய ராணுவத்தின் வலு காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த புகைப்படம் 1965 மே 9 ஆம் தேதி எடுக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட ஏவுகணை காட்சிக்கு வந்தபோது எடுக்கப்பட்ட படம் இது.

4. புதிய உலக ஒழுங்கு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, யால்டாவில் நடந்த புகழ்பெற்ற மாநாட்டின் போது, ​​உலகின் மிகவும் சக்திவாய்ந்த மூன்று தலைவர்கள் சந்தித்தனர். இந்த படத்தில், பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இடதுபுறம் அமர்ந்துள்ளார். நடுவில் அமெரிக்க அதிபர் ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டும், வலதுபுறம் சோவியத் யூனியனின் அதிபர் ஜோசப் ஸ்டாலினும் உள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் இணைந்து வெற்றி பெற்ற நாடுகளை இந்த மூன்று தலைவர்களும் வழிநடத்தி வந்தனர். அடுத்த நான்கு தசாப்தங்களுக்கு நீடித்த பனிப்போர் தொடங்கிய தருணமும் இதுதான் என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

5. சோவியத் யூனியனின் வல்லமையின் சின்னம் மற்றும் 'விண்வெளி வெற்றி'யின் நாயகன்

இந்தப் படத்தில், உலகின் முதல் விண்வெளி பயணம் மேற்கொண்ட யூரி ககாரின் இருக்கிறார். இந்தப் படத்தில் யூரி ககாரினின் கையெழுத்தும் உள்ளது. 1961 இல் அவர் விண்வெளிக்குச் சென்றபோது, இந்த சாதனையை படைத்த உலகின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். இதனுடன், அவர் முழு உலகத்தின் நாயகனாக வரலாற்றில் அழியாத இடம்பிடித்தார்.

6. பனிப்போரின் கூட்டாளி

இந்த படத்தில், கியூபா தலைவரும், தீவிர அமெரிக்க எதிர்ப்பாளருமான ஃபிடல் காஸ்ட்ரோ தனது சோவியத் கூட்டாளியான நிகிதா சோவியத் யூனியன்க்ருஷ்சேவுடன் உள்ளார். இந்த புகைப்படம் 1963 இல் காஸ்ட்ரோ , சோவியத் யூனியனுக்கு ஒரு மாத அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டது.

7. 'எதிரியின் எதிரி நண்பன்'

1963ல் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி பிளவுபட்ட பெர்லினின் மேற்குப் பகுதிக்கு சென்றார். இந்தப் பகுதி மேற்கத்திய சக்திகளின் செல்வாக்கின் கீழ் இருந்தது. அங்கு சென்ற அவர் சோவியத் யூனியனுடனான மோதலுக்கு எதிராக ஒரு பிரபலமான உரையை நிகழ்த்தினார். அந்த நேரத்தில் அவர் ஜெர்மன் மொழியில், "நான் பெர்லினில் இருந்து வருகிறேன்" என்று கூறினார். கிழக்கு ஜெர்மனி பெர்லின் சுவரை கட்டியதைத்தொடர்ந்து அவர் மேற்கு ஜெர்மன் அரசுக்கு தனது ஆதரவை அளித்தார்.

8. இரு தலைவர்களின் பரஸ்பர பாசம்

இந்த படம் 1979 இல் எடுக்கப்பட்டது. சோவியத் ஆதரவு பெற்ற கிழக்கு ஜெர்மனியின் தலைவரான எரிக் ஹோங்கருக்கும் சோவியத் யூனியனின் தலைவர் லியோனிட் ப்ரெஷ்நேவுக்கும் இடையிலான நெருங்கிய உறவை இது காட்டுகிறது. "சோஷியலிச சகோதர முத்தம்" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில், இரண்டு பேர் ஒருவரையொருவர் மூன்று முறை கட்டிப்பிடித்து முத்தவிடுவார்கள். ஆனால் வாய்க்கு வாய் முத்தமிடுவது அவ்வளவு சாதாரணம் அல்ல. இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருக்கும்போதுதான் இது நடக்கும்.

9. 'இரும்புத்திரை'க்கு ஏற்பட்ட காயம்

கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெர்லின் சுவரை உடைக்க முயல்கிறார். இந்த சுவர் கிழக்கு-மேற்கு ஜெர்மனிக்கு இடையிலான மோதல் மற்றும் பனிப்போரின் அடையாளமாக இருந்தது. இந்த சுவர் 1989 இல் இடிக்கப்பட்டது.

10. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு சில காலம் முன்பு

இந்த புகைப்படம் , சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு 1991 ஆகஸ்டில் எடுக்கப்பட்டது. இதில், சோவியத் யூனியனின் அப்போதைய இரண்டு பெரிய தலைவர்கள் மிகைல் கோர்பசேவ் மற்றும் அதிபர் போரிஸ் யெல்ட்சின் கைகுலுக்குகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர அடிப்படைவாதிகள் செய்த ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சியை கோர்பச்சேவ் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஜனநாயகமயமாக்கல் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கலுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை அவரது எதிரிகள் எதிர்த்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: