You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா: எளிய பின்னணியிலிருந்து வந்தவருக்கு பதவி
சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கோவை மாநகராட்சியை அரிதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.
கோவையில் திமுகவின் வெற்றி உறுதியானதிலிருந்தே மேயர் பதவி யாருக்கு என்கிற போட்டியும் தொடங்கிவிட்டது. ஆனால் கோவை மேயருக்கான திமுக தலைமையின் தேர்வு கோவை திமுகவினருக்கே பெரிய ஆச்சரியமாக அமைந்தது.
மேயர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருந்ததாக கூறப்பட்ட மூன்று உறுப்பினர்களும் அல்லாமல் 19 வார்டு உறுப்பினர் கல்பனா ஆனந்த்குமாரை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது.
யார் இவர்?
கல்பனா கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர். திமுகவின் முதல் மேயர்.
40 வயதான கல்பனா முதல் முறை மாமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுகவில் முக்கியப் பொறுப்புகள் எதிலும் இல்லை.
கல்பனாவின் குடும்பம் மூன்று தலைமுறையாக திமுகவில் இருந்து வருகின்றனர்.
கோவை மணியகாரபாளையத்தை தனது பூர்விகமாக கொண்ட கல்பனா தற்போதுவரை வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
பள்ளி படிப்பை முடித்துள்ள கல்பனாவும் அவரது கணவரும் இணைந்து இ-சேவை மையம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
எளிமையான பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் என்கிற திமுக தலைமையின் விருப்பத்திற்கு ஏற்றவராக கல்பனா உள்ளார் என்பதும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதும் மேயர் போட்டியில் இவர் முந்துவதற்கு சாதகமாக அமைந்துள்ளன.
மேலும் கல்பனாவின் தேர்வு பற்றி விவரித்த மூத்த திமுக நிர்வாகி ஒருவர், "கோவை திமுகவில் பல காலமாக வெவ்வேறு அதிகார மையங்கள் இருந்து வந்துள்ளன. ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளருக்கு தனி செல்வாக்கு மற்றும் அவருக்கு ஆதரவானவர்கள் எனப் பல்வேறு குழுக்கள் உள்ளன.
அதை சமன் செய்ய தான் செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் உள்ளூர் அதிகார மையங்களைச் சார்ந்த ஒருவருக்கு பதவி வழங்கினால் அது தேவையில்லாத சலசலப்பு, அதிகாரப் போட்டி ஏற்படுத்தும் என்பதால் அதை சரி செய்வதற்கும் இந்த அதிகார மையங்களைச் சாராத ஒருவரை திமுக தலைமை தேர்வு செய்துள்ளது," என்றார்.
மேயராக அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா, "ஒரு அடிமட்ட தொண்டர் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது. அடிப்படை வசதிகளுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுத்து பணிகளை விரைந்து மேற்கொள்வோம்` என்றார்.
மேயராக பதவியேற்ற பிறகு கல்பனா பீளமேடு மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருவதற்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்