You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவில் 18 நாட்களுக்கு பின் பூட்டிய வீட்டில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி
மேற்கு ஆஸ்திரேலியாவில் தொலைதூரப் பகுதியிலிருந்து 18 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நான்கு வயது சிறுமி பூட்டிய வீட்டில் உயிருடனும் நலமுடனும் மீட்கப்பட்டார் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 16ம் தேதியன்று, கர்னர்வோன் பகுதிக்கு அருகே உள்ள சுற்றுலா முகாமில் அவரின் குடும்பம் அமைத்திருந்த கூடாரத்திலிருந்து க்ளியோ ஸ்மித் காணாமல் போனார்.
இது தொடர்பாக, 36 வயதான ஒரு நபரை பிடித்து காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தடயவியல் ஆதாரங்களைக் கொண்டு புதன்கிழமை அதிகாலை காவல்துறை கர்னர்வோன் என்ற பகுதியில் இருந்த அவரின் வீட்டில் அதிரடியாக புகுந்தனர். அங்கு இருந்த அறைகளில் ஒன்றில் க்ளியோவை கண்டுபிடித்தனர் என்று மேற்கு ஆஸ்திரேலியாவின் காவல் துணை ஆணையர் கர்னல் ப்ளாங்ச் தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரிகளின் ஒருவர், அந்த சிறுமியை கையில் தூக்கிக் கொண்டு, "உன்னுடைய பெயர் என்ன?", என்று கேட்டார். அதற்கு, அவர் " என் பெயர் க்ளியோ", என்று கூறியிருக்கிறார்.
க்ளியோவை மீட்பதற்காக பல கோரிக்கைகளை வைத்த அவரின் பெற்றோரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.
"என்னுடைய குடும்பம் மீண்டும் முழுமை பெற்றது", என்று சிறுமியின் தாய் எல்லி ஸ்மித் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னும் வெளியிடப்படாத சிறுமியை மீட்கும் காவல்துறையின் காணொளியில், சிறுமி புன்னகைத்துக்கொண்டு, அந்த சூழ்நிலையில் நாங்கள் எதிர்பார்த்த நிலையிலேயே இருந்தார் என்று கூறிய ஆணையர் க்ரிஸ் டவுசன், அவருக்கு மருத்துவ பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள நபருக்கு ஸ்மித் குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
கர்னர்வோனில் க்ளியோவின் குடும்பம் இருந்த இடத்திலிருந்து க்ளியோ கண்டுபிடிக்கப்பட்ட வீடு, ஆறு நிமிடங்களில் பயணிக்கக்கூடிய தூரத்தில் இருந்தது. அந்த பகுதியில் ஐந்தாயிரம் பேர் வசிக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன், "அருமை. நிம்மதியளிக்கும் செய்தி", என்று ட்வீட் செய்திருந்தார். ஆணையர் டவுசன், "ஆஸ்திரேலியா மகிழ்ச்சியாக உள்ளது என்று நினைக்கிறேன்", என்று கூறியுள்ளார்.
"18 நாட்கள் கழித்து, ஒரு சிறுமியை - அதுவும் பாதிக்கப்படக்கூடிய சிறுமியை கண்டுபிடிப்பது எனில், மக்கள் மோசமான ஒன்றை நினைப்பது இயல்பு. ஆனால், நம்பிக்கை வீண் போகவில்லை", என்று ஆணையர் கூறியுள்ளார்.
இதுவரை என்ன நடந்தது?
கடந்த அக்டோபர் 16ம் தேதியன்று, க்வோப்பா ப்ளோஹோல்ஸ் என்ற பகுதியில் உள்ள சுற்றுலா முகாமில் தங்கள் விடுமுறையின் முதல் நாள் இரவை கழித்தனர். அப்போது, நள்ளிரவு 1:30 முதல் காலை 6:00 மணியளவில் சிறுமி காணாமல் போயிருக்கிறார்.
பெர்த் நகரத்திலிருந்து வடக்கில் கிட்டதட்ட 900 கி.மீ தொலைவில் உள்ள மெக்லியோட் என்ற பகுதியில் உள்ள இடம் அது. சிறுமி மீட்கப்பட்ட இடம் காற்று வீசும் கடற்கரை காட்சிகள், கடல் குகைகள், கடற்காயல் கொண்ட பவளக் கடற்கரை அமைந்திருக்கும் உள்ளூர் சுற்றுலா தளம் ஆகும்.
தனது தங்கை உறங்கிக்கொண்டிருந்த கட்டிலுக்கு அருகே க்ளியோ உறங்கிக்கொண்டிருந்தார். கூடாரத்தின் இரண்டாவது அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரின் தாய், காலையில் எழுந்து பார்த்தபோது, கூடாரத்தின் கதவு திறந்த நிலையில், க்ளியோ காணாமல் போய் இருந்தார்.
அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கியது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். க்ளியோ தனியாக எங்கும் சென்று இருக்க மாட்டாள் என்று அவரின் தாய் உறுதியாக இருந்தார்.
பெர்த் நகரத்தில் வான்வழி, நிலவழி மற்றும் கடல் வழியாக தேடிப் பார்க்க கிட்டதட்ட 100 அதிகாரிகள் தேடிம் பணியில் இறங்கினர். மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் தேட உளவுத்துறை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
க்ளியோ இருக்கும் இடத்தைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வழங்குவதாக அதிகாரிகள் சன்மானம் அறிவித்திருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்