You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாயன் நாகரிக வரலாறு: 1,050 ஆண்டுகள் பழமையான மாயன் காலத்து சிறு படகு கண்டுபிடிப்பு
தெற்கு மெக்சிகோவில் அகழ்வாய்வாளர்கள் ஒரு பழங்கால மரத்தினாலான சிறு படகை கண்டுபிடித்துள்ளனர். அப்படகு 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஐந்து அடிக்கும் அதிக நீளமுள்ள அச்சிறு படகு, கிட்டத்தட்ட எந்தவிதத்திலும் பழுதுபடாமல் அப்படியே கண்டுபிடிக்கப்பட்டது. அப்படகு சிச்சன் இட்ஸா என்கிற அழிந்து போன மாயன் நாகரிக நகரத்துக்கு அருகில், ஒரு நன்னீர் குளத்தில் மூழ்கிக் கிடந்தது.
அந்த சிறிய படகு, தண்ணீரை வெளியில் எடுப்பதற்கோ, சடங்கு தொடர்பான பொருட்களை பத்திரப்படுத்தி வைப்பதற்கோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என மெக்சிகோவின் பழங்கால பொருட்கள் நிறுவனம் (இனாஹ்) கூறுகிறது.
மாயா ரயில் என்கிற புதிய சுற்றுலா ரயில்தடம் தொடர்பான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிய போது இந்த அரிய கண்டுபிடிப்பு வெளிப்பட்டது.
செராமிக்குகள், ஒரு சடங்குக் கத்தி, இயற்கையாக உருவான செனோட் எனப்படும் பாறை குளத்தின் சுவரில் வரையப்பட்டுள்ள முரால் ஓவியங்கள் ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளதாக இனாஹ் நிறுவனம் ஒரு செய்தி அறிக்கையில் கூறியுள்ளது.
அந்த சிறு படகு எத்தனை பழமையானது, எந்த வகையைச் சேர்ந்தது போன்ற விவரங்களை குறிப்பிட பாரிஸில் உள்ள சோர்பான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் உதவி வருகிறார்கள்.
அச்சிறு படகு போன்ற முப்பரிமாண மாதிரி ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இந்த மாதிரி, அதே போல உள்ள மாதிரிகளைச் செய்ய அனுமதிக்கும். அது மேற்படி ஆய்வுக்கும் உதவும் என இனாஹ் கூறியுள்ளது.
அப்பகுதியை ஸ்பெயின் வெற்றி கொள்வதற்கு முன், மாயர்களின் நாகரிகம் தழைத்து வளர்ந்தது. இன்று தெற்கு மெக்சிகோ, குவாட்டமாலா, பெலிஸ், ஹோண்டுராஸ் என்று அழைக்கப்படும் பல பகுதிகளை, மாயன் நாகரிக மக்கள் தங்கள் காலத்தில் ஆட்சி செய்து வந்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சிறு படகு தோராயமாக கிறிஸ்துவுக்குப் பின் 830 - 950 காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது மாயர்கள் நாகரிகத்தின் பொற்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம்.
அந்த நேரத்தில்தான் மாயர்கள் ஒரு பெரிய அரசியல் சீர்குலைவை எதிர்கொண்டனர். மாயர்களின் சீர்குலைவுவு தொடர்பாக எந்த ஒரு தனிப்பட்ட கோட்பாடும் இன்று வரை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால் தங்களுக்குள் ஏற்பட்ட போர், வறட்சி, மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்கள் அவர்களின் அழிவுக்கு வழிவகுத்த முக்கிய காரணங்களாக இருந்திருக்கலாம்.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள 'மாயா ரயில்' திட்டத்தை அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸின் அரசு முன்னெடுத்துள்ளது. இந்த ரயில் திட்டம் தெற்கு மெக்சிகோவிலுள்ள ஐந்து மாகாணங்கள் வழியாகச் செல்ல உள்ளது.
இந்த ரயில் திட்டம் அப்பகுதியில் உள்ள வறுமையை ஒழிக்க உதவும் என அத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால் அத்திட்டத்தை விமர்சிப்பவர்களோ, அது உள்ளூரில் உள்ள சூழலியலையும், இதுவரை கண்டுபிடிக்கப்படாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் சேதப்படுத்தும் அபாயம் இருப்பதாக வாதிடுகின்றனர்.
பிற செய்திகள்:
- COP26 அமர்வில் கலந்துகொள்லாமல் திரும்பிய இஸ்ரேல் மாற்றுத் திறனாளி அமைச்சர்
- பருவநிலை மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைக்கப் போவது என்ன?
- 2070-இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும்: உலகத்துக்கு மோதியின் 5 வாக்குறுதிகள்
- இலங்கை ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இல்லாதது ஏன்? - அரசின் பதில்
- கிளாஸ்கோ COP26 மாநாட்டில் மாநாட்டில் அதிகம் கவனம் பெறும் 5 பேர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்