You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லியானார்டோ டாவின்சியும் ஒருபால் உறவு சர்ச்சையும்
(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 20வது கட்டுரை இது)
ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தை சேர்ந்த ஓவியர், பல்துறை அறிஞர் லியனார்டோ டாவின்சி. மோனோலிசா, இறுதி இரவு உணவு (தி லாஸ்ட் சப்பர்), வர்ச்சூவியன் மேன், ஆகிய ஓவியங்களின் மூலம் இவர் பரவலாக அறியப்பட்டாலும் அறிவுத்துறையிலும் கலைத்துறையிலும் இவர் செய்தது ஏராளம்.
இவரது கலைப் படைப்புகளை அடிப்படையாக வைத்து கிறிஸ்துவ மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தாங்கி வெளிவந்த டாவின்சி கோட் நாவல் அவரை மேலும் பிரபலமாக்கியது. டான் பிரௌன் என்ற எழுத்தாளர் இந்த நாவலை எழுதியிருந்தார்.
ஆனால், நேரடியாக லியனார்டோ டாவின்சி வேறு சில சர்ச்சைகளிலும் அடிபடுகிற பெயர்தான்.
1476ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி லியனார்டோ டா வின்சி ஒரு பால் உடலுறவு வைத்து கொண்டதாக இத்தாலியின் ஃபோரெண்டின் அதிகாரிகளுக்கு புகார் ஒன்று சென்றது. அப்போது லியனார்டோவிற்கு வெறும் 23 வயது.
17 வயது ஜக்கோபோ சல்டரேலியுடன் பலர் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டாலும், 4 பேர் பெயர்கள் மட்டுமே வெளியே வந்தன. அதில் ஒன்று லியனார்டோ டாவின்சி.
பர்த்தலோமியோ டி பாஸ்கினோ என்ற பொற்கொல்லர், பாக்சினோ என்ற தையல்காரர், லியனார்டோ டார்னா புயானி என்கிற இன்னொருவர் ஆகியோர்தான் மற்ற மூன்று பேர். கடைசி நபர் ஃப்ளோரெண்டின் குடும்பத்தை சேர்ந்தவர். இவர்கள் மெடிசி ஆட்சியாளர்களுடன் சம்பந்தம் செய்திருந்தனர்.
இந்த புகார் தெரிவித்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொள்வது சட்டவிரோதமாக இருந்தாலும், இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகரில் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் உறவு வைத்து கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. வரலாற்று நிபுணரான மைகெல் ராக்கி எழுதிய ஃபோர்பிடன் பிரண்ட்ஷிப்ஸ், புத்தகத்தில் இந்த தவறை செய்து பல ஆண்கள் நீதிபதிகளின் முன்பு நின்றதாக தெரிவித்துள்ளார்.
இன்றைய காலத்தில் இந்த எண்ணிக்கை சற்று ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் வரலாற்று காலத்தில் பின்பற்றப்பட்ட ஒரு பாலியல் முறையை இது பிரதிபலிக்கிறது.
இம்மாதிரியான குற்றம் சாட்டப்பட்டவர்களில் வெறும் 20 சதவீதம் பேர்தான் தண்டிக்கப்பட்டனர். அதிலும் அபராதம் முழுமையாக வசூலிக்கப்படவில்லை. இயற்கைக்கு மாறான உடலுறவு முறை மத ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இம்மாதிரியாக ஆண்களுடன் உறவில் இருந்த நபர்களில் பிரபலமான இருவர் மைக்கலேஞ்சலோ. மறுமலர்ச்சிக் காலத்தில் புகழ் பெற்ற இன்னொரு கலைஞர் இவர். புகழ் பெற்ற டேவிட் சிலையை வடித்தவர். மற்றொருவர் புகழ் பெற்ற அரசியல் சிந்தனையாளர் மாக்கியவல்லி.
மைக்கலேஞ்சலோ டோமாசோ கவாலியேரி என்பவருக்கு காதல் கவிதைகளை எழுதியுள்ளார். மாக்கியவல்லி ரிசியோ என்கிற ஆண் பாலியல் தொழிலாளருடன் உறவில் இருந்தார்.
ஆனால் லியானார்டோ டாவின்சி மற்றும் சலாய் ஆகிய இருவருக்கும் இருந்த உறவுதான் பல சந்தேகங்களை எழுப்பியது. அது டாவின்சியின் ஓவியத்தில் பிரதிபலித்துள்ளது.
லியானார்டோ டாவின்சியின் பாலியல் தேர்வு என்ன?
1476ஆம் ஆண்டு வெளியான ஆவணம் ஒன்றுதான் லியானார்டோ டாவின்சியின் பாலியல் விருப்பம் வு குறித்து பேசுகிறது. அந்த குற்றச்சாட்டுகூட நிச்சயமற்றதாகவோ அல்லது ஊகத்தின் அடிப்படையிலோ அல்லது அவர் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணத்திலோ பரப்பட்டதாக இருக்கலாம்.
லியானார்டோ ஆண்களுடன் உறவு வைத்திருந்தார் என்பதிலோ அல்லது பிரம்மச்சாரி என்பதிலோ வரலாற்றாசிரியர்கள் உடன்படவில்லை.
இது ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் சில காலம் பிரம்மச்சாரியாக இருந்துவிட்டு அதன்பிறகு பாலியல் வாழ்க்கையில் விருப்பம் கொண்டவராக மாறியிருக்கலாம்.
அல்லது அவர் பாலியல் ஆசைகள் அற்றவராககூட இருந்திருக்கலாம்.
லியனார்டோ ஒரு பெண்ணுடன் உறவு வைத்து கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் அவர் அவ்வாறு செய்தார் என்று கூறுபவர்களை அது தடுக்கவில்லை.
இப்போது இருப்பது போல பாலியல் தேர்வு குறித்த கண்ணோட்டம் எல்லாம் மத்திய காலம் முடிந்து நவீன காலம் தொடங்கும் அந்த தருணத்தில் இல்லை.
அப்போது ஆண்கள் இருபால் உறவுக்காரர்களாக இருந்தனர். பெண்கள் குறித்து சரியான தகவல்கள் பதியப்படாத காரணத்தால் அதுகுறித்த தெளிவு இல்லை.
லியனார்டோ மற்றும் சலாய்
லியனார்டோ மற்றும் கியான் கியாகோமா காப்ரோட்டி என்ற சலாய்க்குமான உறவு பேசப்பட்ட ஒன்று. சலாய் என்றால் குட்டிப் பேய் என அர்த்தம். சலாய் 1490ஆம் ஆண்டு லியனார்டோவின் வீட்டில் அவரின் உதவியாளராக பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 10. அதன்பின் அவர் ஓவியரானார். லியனார்டோ அவரை விட 28 வயது மூத்தவர். சலாய் ஒரு திருடர் என லியனார்டோ சொல்வார். ஆனால் லியனார்டோவின் வீட்டில் கடைசி வரை இருந்தார் சலாய்.
லியனார்டோ அவருக்கு ஒரு நிலத்தையும் பரிசாக அளித்திருந்தார்.
கியார்கியோ வாசாரியின், `தி லைவ்ஸ் ஆஃப் ஆர்டிஸ்ட்` புத்தகத்தில் டாவின்சிக்கு பிடித்த அழகிய மற்றும் சுருட்டை முடி வைத்திருந்த இளைஞர் சலாய் என குறிப்பிட்டிருக்கும்.
சலாய் லியனார்டோவின் பல பணிகளுக்கு மாடலாக இருந்தவர். 16ஆம் நூற்றாண்டில் ஓவியர் கியான் பாலோ லோமாசோ லியானார்டோ மற்றும் சலாய் இருவரும் பாலியல் உறவில் இருந்தனர் என தெரிவித்தார். டாவின்சி மற்றும் சலாய் இருவரையுமே லொமாசோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இருவரையும் தெரிந்தவர்களிடம் அவர் உரையாடி இருக்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில்க் 43 வயது நபரும் அவரிடம் பணியாற்றும் 15 வயது இளைஞரும் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தனர் என்பது மிகப்பெரிய சர்ச்சையான விஷயம்.
ஃப்ளோரன்ஸ் நகரில் வாழ்ந்தவர்கள் பழங்கால மரபுகளை சார்ந்து வாழ்ந்தனர். பிரிட்டனின் எழுத்தாளர் நார்மன் டக்லஸ் குறித்த வரலாற்றாளர் ரேச்சல் ஹோப் க்ளீப்ஸின் சமீபத்திய ஆய்வு மூலம் அது தெரிய வருகிறது. ஐரோப்பாவில் 20ஆம் நூற்றாண்டு வரை ஆண்கள் இருவர் உறவில் இருப்பது ஏற்று கொள்ளப்பட்டது.
லியனார்டோ டாவின்சியின் பாலுறவு விருப்பம் குறித்த உண்மை நமக்கு தெரிய வாய்ப்பில்லை. சில வரலாற்று தரவுகளை கொண்டு நாம் ஊகிக்கலாம் அவ்வளவுதான்.
பிற செய்திகள்:
- உத்தராகண்டில் கிராமங்கள் ஒன்றன் பின் ஒன்றாக காலியாவது ஏன்?
- “கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிய இயலாது” – அமெரிக்க உளவு அமைப்புகள்
- பருவநிலை மாற்றத்தை தடுக்க இந்தியா செய்ய வேண்டிய கடமை என்ன? அதற்கு முன் உள்ள சவால் என்ன?
- ஆண் மரபணு இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்த அமெரிக்க பறவை
- “முகமது ஷமியை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள்”: விராட் கோலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்