You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடகொரியாவின் கிம் ஜோங் உன்: 'அமெரிக்காவின் அச்சுறுத்தலை முறியடிக்க வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்குவோம்'
எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும், அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே வடகொரியாவின் ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்றும் அந்நாட்டு அவர் தெரிவித்துள்ளார்.
தற்காப்புக்காக மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குவதாகவும் போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
திங்கள்கிழமையன்று ஏவுகணைகள் உள்ளிட்டவை அடங்கிய பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கிவைத்து கிம் உரையாற்றினார்.
கடந்த சில வாரங்களாக வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்திய நிலையில், கிம் ஜோங் உன் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணை ஒன்றை தென் கொரியா பரிசோதனை செய்தது.
எனினும் அண்டை நாட்டுடன் சண்டையிட தாங்கள் விரும்பவில்லை என்று கிம் ஜோங் உன் தனது உரையில் குறிப்பிட்டார்.
"நாங்கள் யாருடன் போர் புரிவதைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக தற்காப்புக்காகவும், இறையாண்மையைக் பாதுகாப்பதற்காகவும்தான் போரிடும் திறன்களை அதிகரித்து வருகிறோம்" என்று கிம் கூறினார்.
வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அமெரிக்கா விரோத மனப்பாங்குடன் செயல்படவில்லை என்பதை வட கொரியா நம்புவதற்கு நடத்தை ரீதியிலான எந்த அடிப்படையும் இல்லை என்றும் கிம் ஜோங் உன் தனது உரையில் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்ற பிறகு, வடகொரியாவைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவரது நிர்வாகம் அழைத்திருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக அணுஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்ற முன் நிபந்தனையை விதிக்கிறது. இதை வடகொரியா ஏற்கவில்லை.
"பாலிஸ்டிக் மிஸைல்" எனப்படும் பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்றபடி பயணிக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை வடகொரியா பயன்படுத்தவும் பரிசோதனை செய்யவும் ஐக்கிய நாடுகள் அவை தடை விதித்திருக்கிறது. ஆனால் அந்தத் தடைகளை வடகொரியா தொடர்ந்து மீறி வருகிறது. அதனால் அடுத்தடுத்து பல சுற்றுப் பொருளாதாரத் தடைகள் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருக்கின்றன.
தங்களது தற்காப்புக்காகவே ஆயுத வலிமையைப் பெருக்கி வருவதாக வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது.
ஆனால் நாட்டை வறுமையில் தள்ளுவதற்கும் இது காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். கொரோனா முன்னெச்சரிக்கையாக நாட்டின் எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்ட பிறகு அந்த நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாக கருதப்படுகிறது.
முக்கிய நட்பு நாடான சீனாவில் இருந்து உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வருவதற்கான வழிகளும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்