You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சதாம் ஹுசேன் பயன்படுத்திய மனித கேடயங்கள் - 30 ஆண்டுகளுக்குப் பிறகு வெடிக்கும் சர்ச்சை
இராக்கில் சதாம் ஹுசேனால் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டவர்கள், இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு அது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி - பிரிட்டிஷ் ஏர்வேஸ் 149 விமானத்தில் இருந்து குவைத்தில் இறங்கிய பயணிகள், அதற்கான பொறுப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்போது என்ன நடந்தது என்பது பற்றிய ரகசிய அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கோருகின்றனர்.
'ஆபரேஷன் ட்ரோஜன் ஹார்ஸ்' என்ற புதிய புத்தகம் ஒன்றில், குவைத்துக்கு ஒன்பது ரகசிய ராணுவ அதிகாரிகளை அனுப்ப, அதிகாரிகள் அந்த விமானத்தை பயன்படுத்தியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறுகிறது.
பொதுமக்கள் பிடிபடும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் அறிந்திருந்தார்கள் என்றும் அந்தப் புத்தகம் கூறுகிறது.
நடந்தது என்ன?
இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீஃபன் டேவிஸ், "மூன்றே முக்கால் மணி நேரத்துக்கு முன்னரே, அமெரிக்க புலனாய்வுத் துறையிடமிருந்து பிரிட்டனுக்கு இராக்கியர்கள் தாக்குதல் நடத்தப் போவதாகத் தகவல் கிடைத்தது. இருந்தபோதிலும், விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. அன்று இரவு குவைத்தின் விமான நிலைய கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் அனைத்து விமானங்களையும் திருப்பி அனுப்பின.
விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே ஆயுதம் ஏந்திய இராக் ஜெட் விமானங்கள் ஓடுதளத்தை அடைந்தன. டாங்கிகள் மற்றும் துருப்புகள் விமான நிலையத்தைச் சூழ்ந்தன; அதற்குள் குவைத் படைகள் சரணடைந்தன.
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் இருந்து இறங்கிய 367 பயணிகள் மற்றும் பணியாளர்களில் சிலர் நான்கு மாதங்களுக்கும் மேலாகச் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
மேற்கு நாடுகளின் ராணுவ கூட்டணியின் தாக்குதல் அபாயம் உள்ள இராக்கின் பகுதிகளில் அவர்கள் வைக்கப்பட்டனர்," என்று பதிவு செய்துள்ளார்.
ரகசிய சதி
55 வயதான பெரி மேனர்ஸ் அப்போது தனது நண்பருடன் மலேசியாவுக்குச் சென்று கொண்டிருந்தார்.
"இந்த ரகசிய சதி நிகழ்வுகள் அதிகாரிகளின் மீதான நம்பிக்கையை உடைத்தது. இது மேற்கத்திய சமூகம் பற்றி நாம் கற்றுக் கொண்ட மதிப்புகளுக்கு எதிரானது" என்று அவர் AFP செய்தி நிறுவனத்திடம் கடந்த வாரம் கூறினார்.
65 வயதான மார்கரெட் ஹர்ன், "நான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இது மிகவும் கோபமூட்டுவதாக இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக நான் அதிலிருந்து தப்பித்தாலும் அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன்." என்கிறார்.
கொல்லப்படும் அச்சம்
பிணைக் கைதியாகத் தான் இருந்ததை நினைவு கூர்ந்த மேனர்ஸ், வட இராக்கில் உள்ள டுகன் அணையில் பொறியாளரான மற்றொரு கைதியுடன் தான் நட்பு கொண்டிருந்ததாக கூறினார்.
உணவுப் பற்றாக்குறை மிகப்பெரிய கவலையாக இருந்ததாகவும் கைதிகளைச் சுட்டுக்கொல்ல காவலர்களுக்கு உத்தரவிடப்படும் என்று அஞ்சியதாகவும் அவர் கூறுகிறார்.
"நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள் என்று நம்ப மறுக்கிறீர்கள். இந்தக் கற்பனை உங்களைப் பலவீனப்படுத்துகிறது" என்று டேவிஸின் புத்தக வெளியீட்டில் அவர் கூறினார்.
நான்கு மாதங்களுக்கும் மேலாகச் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் லண்டனுக்குத் திரும்பிய போது அவர் கதறி அழத் தொடங்கினார். 1992 இல் நண்பர் இறந்ததால் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார்.
"இதுபோன்ற நேரங்களில், எதிர்மறை எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகின்றன, அதனால் உலகில் இனி மகிழ்ச்சியே இல்லை என்று தோன்றுகிறது. அவரது மறைவாலும் இராக்காலும் ஏற்பட்ட துன்பங்களின் கலவை விஷம் போல இருந்தது," என்று அவர் கூறுகிறார்.
தனது ஐந்து வார சிறைவாசத்தின் போது, ஹர்ன் குவைத்திலிருந்து பஸ்ரா, பாக்தாத் மற்றும் ஈராக் பாலைவனத்தில் உள்ள இரண்டு தடுப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது இரண்டு இளம் குழந்தைகளின் படத்தைப் பார்த்து அழுததாகக் கூறினார். பிற்காலத்தில் சலிப்பு தட்டத் தொடங்கியதாகவும் கூறினார்.
"நான் உணர்ச்சியற்று இருந்தேன். விஷயங்களை உணரும் திறன் இழக்கப்படுகிறது. பயத்தையும் பதட்டத்தையும் அதிக காலம் தக்கவைக்க முடியாது. நாங்கள் சதாமுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள் போல. அந்த நினைவுகளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிப் பிறகு அதைத் திரும்பிப் பார்க்கவே இல்லை," என்கிறார் ஹர்ன்.
"நான் மீண்டும் பயத்தை உணர விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார்.
49 வயது இருதய மருத்துவர் பாலசுப்பிரமணியம், இரண்டு வாரங்கள் குவைத் ஹோட்டலில் சிறைப்பிடிக்கப்பட்டார்.
அவர் ஒரு மலேசிய குடும்பத்தைச் சேர்ந்தவர், எனவே அவர் மலேசிய அரசாங்கத்தால் மீட்கப்பட்டார். ஆனால் இதற்காக அவர் 20 மணி நேர பஸ் பயணத்தை கொளுத்தும் வெப்பத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
'நான் முன் போல இல்லை'
"உண்மையில் மிகவும் அச்சுறுத்தும் சூழல் அது. நான் குவைத்தில் என் இளமைப் பருவத்தை இழந்தேன். எனக்குள் இருந்த மகிழ்ச்சியான மனிதனை நான் இழந்து விட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது" என பாலசுப்ரமணியம் கூறுகிறார்.
அப்போதைய பிரதமரின் தவறான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு
குவைத்தில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் ஒரு முன்னாள் ராஜதந்திரியின் நட்பு டேவிஸுக்கு இருந்தது. அவர், மூத்த அரசியல்வாதிகள் உளவுத்துறைப் பணியாளர்களை அனுப்பும் தவறான திட்டத்தை வகுத்து, சாதாரண வழிகளை மூடிவிட்டதாகக் கூறினார்.
லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் இரண்டு மணி நேர தாமதம் ஏற்பட்டதாக டேவிஸ் கூறினார், ஏர் கண்டிஷனிங் பிரச்னை காரணமாக, பிரிட்டிஷ் குழுவினர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்சர் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதாகவும், இந்த விஷயத்தில் அமைதியாக இருக்குமாறு பிரிட்டிஷ் ஏர்வேஸ் குழுவினரையும் பயணிகளையும் அச்சுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து கருத்துக் கேட்ட AFP யின் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் மறுத்து விட்டது.
விமான நிறுவனம் மற்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் எப்போதும் அலட்சியம், சதி மற்றும் மறைப்பு குற்றச்சாட்டுகளை மறுத்தே வருகின்றன.
விமானத்தை தரையிறக்கியதன் மூலம் தங்கள் கடமைகளில் அவர்கள் தீவிரமாகத் தவறி விட்டனர் என்று கூறி, பிரெஞ்சு நீதிமன்றம் பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு 1.67 மில்லியன் யூரோக்களை விமானத்தின் பிணைக்கைதிகளிடம் செலுத்துமாறு 2003 இல் உத்தரவிட்டது.
பிற செய்திகள்:
- ஆஃப்கன் அரசு - தாலிபன் மோதலால் 3 நாட்களில் 27 குழந்தைகள் பலி : போர்க்கள நிலவரம்
- உலகின் சிறிய குழந்தை - 13 மாத தீவிர சிகிச்சை நிறைவு
- சீனாவின் பருவநிலை மாற்ற கொள்கைகளுக்கு ஏன் இவ்வளவு கவனம் தரப்படுகிறது?
- உயரும் இந்திய பெருங்கடல் மட்டத்தால் அதிகரிக்கும் ஆபத்து - ஐபிசிசி அறிக்கை
- கடலுக்குள் மூழ்கும் நாடுகளுக்கு ஐபிசிசி அறிக்கை பீதியை ஏற்படுத்துவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்