You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைட்டி அதிபர் ஷோவனெல் மோயீஸை சுட்டுக் கொன்ற கூலிப்படையினர் யார்? - அதிர வைக்கும் தகவல்கள்
இந்த வாரம் புதன்கிழமை ஹைட்டி அதிபர் ஷோவனெல் மோயீஸ் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வெளிநாட்டு கூலிப்படை ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கொலம்பிய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த குழுவில் இருப்பவர்களில் 26 பேர் கொலம்பியர்கள், இருவர் ஹைட்டியைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் என்று அந்நாட்டு காவல்துறை தலைவர் லியோன் சார்லஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த இரு அமெரிக்கர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எட்டு பேர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூவர் தலைநகர் போர்ட்டா ப்ரின்சில் காவல்துறையினர் உடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலையைத் திட்டமிட்டது யார் என்றும் இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்தும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
தலைநகர் போர்ட்டா ப்ரின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் ஷோவனெல் மோயீஸ் மற்றும் அவரது மனைவி மார்டைன் மோயீஸ் ஆகியோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஷோவனெல் மோயீஸ் மரணமடைந்தார். மார்டைன் மோயீஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது என்று இடைக்காலப் பிரதமர் க்ளாடு ஜோசஃப் தெரிவிக்கிறார்.
கரீபியத் தீவு நாடான ஹைட்டி உலகிலேயே வறுமை மிகுந்த நாடுகளில் ஒன்று. ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு, அரசியல் நிலையின்மை, அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றை சமீப ஆண்டுகளில் சந்திக்கும் இந்த நாட்டின் அதிபராக 2017இல் பதவியேற்றார் கொல்லப்பட்ட ஷோவனெல் மோயீஸ்.
கொலையின் பின்னணியில் யார்?
53 வயதாகும் ஷோவனெல் மோயீஸ் அந்நாட்டில் உள்ள பெரும் தொழிலதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்ததால் அவர்களால் இவரைக் கொல்வதற்கு இலக்கு வைக்கப்பட்டு இருந்தார் என்று இடைக்கால பிரதமர் க்ளாடு ஜோசஃப் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களது கொலம்பிய கடவுச் சீட்டுகள், ஆயுதங்கள் மற்றும் பிற சான்றுகளுடன் ஊடகத்தினர் முன்பு வியாழனன்று காவல்துறை அவர்களை முன்னிலைப்படுத்தியது.
வெளிநாட்டவர்கள் நமது அதிபரைக் கொல்வதற்காக இங்கு வந்துள்ளனர் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த சார்லஸ், விசாரணை மற்றும் தப்பியோடிய 8 பேரை கண்டுபிடிப்பதற்கான தேடல் வழிமுறைகளை வலுப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூலிப் படையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் குறைந்தது ஆறு பேர் தங்கள் ராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று கொலம்பிய அரசு தெரிவிக்கிறது.
ஹைட்டி அதிகாரிகளுக்கு இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தாங்கள் உதவி செய்வோம் என்றும் கொலம்பிய அரசு கூறியுள்ளது.
தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் ஹைட்டியில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனரா என்பதைத் தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது.
ஆனால் இந்தக் கொலையை திட்டமிட்டவர்கள் யார் என்பது இன்னும் விசாரணையாளர்களுக்குத் தெரியவில்லை.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்திற்கு வெளியே பெரும் கூட்டம் ஒன்று நேற்று கூடியது.
இதன் போது சில கார்களும் எரிக்கப்பட்டன. அதிபரின் கொலைக்கு பின்பு ஹைட்டியில் தொடர்ந்து அவசர நிலை அமலில் உள்ளது.
கொலை நடந்தது எப்படி?
அதிகமான ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருந்த கொலையாளிகள் புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் தலைநகர் போர்ட்டா ப்ரின்சின் மலைப்பகுதியில் உள்ள அதிபரின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அமெரிக்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் போன்று கருப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்த அவர்கள், "டிஇஏ ஆபரேஷன்ஸ்! எவ்ரிபடி ஸ்டே டௌன்," என்று கத்துவது கொலைக்கு பின்பு வெளியிடப்பட்ட காணொளிகளில் தெரிகிறது.
இந்தத் தாக்குதலின் போது நிகழ்விடத்திலேயே அதிபர் உயிரிழந்து விட்டார். அவரது உடலில் 12 புல்லட் காயங்கள் இருந்தன என்று குற்றவியல் நடுவர் இன்றி டெஸ்டிங் லே நோவலிஸ்த்தே எனும் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.
அதிபரின் அலுவலகமும் படுக்கை அறையும் சூறையாடப்பட்டன. அதிபர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபரின் மூன்று குழந்தைகள் ஜோமர்லி, ஷோவனெல் ஜூனியர், மற்றும் ஜோவர்லின் ஆகியோர் தற்போது பாதுகாப்பான இடத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஷோவனெல் மோயீஸ் கொலை செய்யப்படுவதற்கு முன்பே அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டில் பரவலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அங்கு நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக சட்டப்பூர்வ ஆணை ஒன்றை பிறப்பித்து அதிபர் பதவியில் நீடித்து வந்தார் ஷோவனெல் மோயீஸ் .
பிற செய்திகள்:
- கொண்டாடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்; கோபப்பட்ட கரூர் ஆட்சியர்
- குறைவாக இறைச்சி சாப்பிடச் சொன்ன அமைச்சர்: கோபமடைந்த சகாக்கள்
- சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - பெற்றோர் அறிய வேண்டியவை
- இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை - என்ன சிக்கல்?
- சீமான் vs லிங்குசாமி: மீண்டும் வெடித்த 'பகலவன்' கதை சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்