You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா இடைவெளியை மீறி முத்தம்: பதவி விலகிய பிரிட்டன் சுகாதாரச் செயலர்
தமது அமைச்சகத்தின் சக பணியாளர் ஒருவரை முத்தமிட்டு கொரோனா சமூக இடைவெளியை மீறியதற்காக பிரிட்டன் சுகாதாரத் துறை செயலர் மேட் ஹேன்காக் பதவி விலகியுள்ளார்.
"நாம் கைவிட்டபோதிலும் (கொரோனா விதிகளைபின்பற்றுவதில்) நேர்மையை கடைபிடித்து இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான தியாகங்களை செய்துள்ள மக்களுக்கு அரசு கடன்பட்டுள்ளது," என்று பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேட் ஹேன்காக்கின் பதவி விலகல் கடிதத்தை தாம் பெற்றுள்ளது தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் முன்னாள் சான்சலர் ஷாஜித் ஜாவித் தற்போது புதிய சுகாதார செயலராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்கு காரணமான முத்தம்
சுகாதாரச் செயலர் பதவியில் இருந்த மேட் ஹேன்காக் மற்றும் அதே துறையில் பணியாற்றிய ஜீனா கோலன்டேஞ்சலோ ஆகியோர் முத்தமிடும் படத்தை பிரிட்டனிலிருந்து வெளியாகும் தி சன் நாளிதழ் வெளியிட்டது.
இருவருக்குமே வெவ்வேறு நபர்களுடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
சுகாதார அமைச்சக அலுவலகத்தில் மே 6-ஆம் தேதி இந்தப் படம் எடுக்கப்பட்டதாக தி சன் நாளிதழ் தெரிவிக்கிறது.
இந்தப் படம் வெளியானதிலிருந்து மேட் ஹேன்காக் பதவி விலக வேண்டும் என்று அவர் மீதான அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தன.
அவரது 15 ஆண்டுகால மனைவி மார்த்தா உடனான உறவை மேட் ஹேன்காக் முறித்துக் கொண்டதாக பல பிரிட்டன் ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ள. அந்தச் செய்திகள் துல்லியத் தன்மை வாய்ந்தவை என்று பிபிசி அறிகிறது.
இந்தப் பதவி விலகல் முடிவு மேட் ஹேன்காக்கின் சொந்த முடிவு என்றும், அவருக்குப் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவிப்பதாகக் கூறுகிறார் பிபிசி அரசியல் பிரிவு ஆசிரியர் லாரா கூன்ஸ்பெர்க்.
மேட் ஹேன்காக் முத்தமிட்ட ஜீனாவும் சுகாதாரத் துறையில் அவர் வகித்து வந்த நான்- எக்ஸிக்யூட்டிவ் இயக்குநர் பதவியிலிருந்து விலகுகிறார்.
மன்னிப்பு கேட்ட மேட் ஹேன்காக்
பிரதமருக்கு எழுதியுள்ள பதவி விலகல் கடிதத்தில் விதிமுறைகளை மீறியதற்காக ஹன்காக் மன்னிப்பு கோரியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையை அனுபவிக்க வைப்பதற்காக தமது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களிடமும் மேட் மன்னிப்பு கோரியுள்ளார்.
தமது பதவியிலிருந்து விலகுவதற்காகவே தாம் பிரதமரைச் சந்திக்கச் சென்றதாகவும் ட்விட்டரில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு பிரிட்டனின் சுகாதாரச் செயலர் பதவியை ஏற்ற மேட் ஹேன்காக் அப்பொறுப்பில் மூன்று ஆண்டுகள் இருந்துள்ளார்.
பிற செய்திகள்:
- ஜம்மு விமானப்படைத் தளத்தில் இன்று அதிகாலை 2 குண்டு வெடிப்பு
- பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
- வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
- மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை முன்னாள் எம்.பி-க்கு பொதுமன்னிப்பு – சர்ச்சையாவது ஏன்?
- தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மாவட்ட ஆட்சியராக 11 பெண்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்