You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் தெய்வநிந்தனை வழக்கு: மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறித்தவ தம்பதி விடுவிப்பு
பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று தெய்வ நிந்தனை குற்றம் சுமத்தப்பட்ட தம்பதியினரை போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால் மரண தண்டனையிலிருந்து விடுவித்துள்ளது.
ஷாகுஃப்தா கெளசார் மற்றும் அவரது கணவர் ஷாஃப்கட் இம்மானுவேல் மீது 2014ஆம் ஆண்டு முகமது நபிகளை நிந்தனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் ஞாயிறன்று இந்த தம்பதியினரின் வழக்குரைஞர் இவர்களை லாகூர் நீதிமன்றம் விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை என்பது மரண தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். சட்டப்பூர்வமாக இதுவரை யாரும் கொல்லப்படவில்லை என்றாலும், 12 பேர் குற்றம் சுமத்தப்பட்ட பின் கும்பலால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர்.
"நமது சமூகத்தில் கையறு நிலையில் உள்ள இந்த தம்பதியினர் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என இந்த தம்பதியினரின் வழக்குரைஞர் மலூக் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தம்பதியினர் அடுத்த வாரம் வெளியே வருவர் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த தீர்ப்பை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன.
"ஒரு தம்பதியினரின் ஏழு வருடகால துயரம் இன்றைய தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்களும் இல்லை. மரண தண்டனை அளிக்கப்பட வேண்டியவர்களும் இல்லை" என சர்வதேச அமைப்பா அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் தெற்காசிய துணை இயக்குநர் தினுஷிகா திசாநாயகெ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தம்பதியினர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் என்ன?
கெளசாரின் பெயரில் பதியப்பட்ட அலைப்பேசி எண்ணிலிருந்து உள்ளூர் இஸ்லாமிய மதகுருவிற்கு, நபிகளை நிந்தனை செய்வது போலான செய்திகள் அனுப்பப்பட்டதாக தம்பதியினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் கெளசாரின் சகோதரர் அவர் எந்த தவறையும் செய்யவில்லை என்று பிபிசியிடம் கடந்த வருடம் தெரிவித்தார். மேலும் அம்மாதிரியான செய்திகளை அனுப்பும் அளவிற்கு கெளசார் படித்தவர் இல்லை என்றும் அவர் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
கெளசர் ஒரு கிறித்தவ பள்ளியில் கவனிப்பாளர் பொறுப்பில் உள்ளார். அவரின் கணவருக்கு கை மற்றும் கால்கள் பாதியளவில் செயலழிந்துள்ளன.
மத சிறுபான்மை மக்களை வஞ்சிக்கவும், அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தெய்வ நிந்தனை குற்றங்கள் சுமத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இந்த தம்பதியினரின் வழக்குரைஞர், இவர்களின் அண்டை வீட்டுக்காரர்கள் இந்த தம்பதியினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஷகுஃப்டா கெளசாரின் பெயரில் அலைப்பேசி எண்ணை வாங்கி அவ்வாறு செய்தி அனுப்பியிருக்கலாம் என்று பிபிசியிடம் தெரிவித்தார். அண்டை வீட்டுக்காரர்களும் கிறித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதம் இவர்களின் வழக்கை சுட்டிக்காட்டி ஐரோப்பிய நாடாளுமன்றம், பாகிஸ்தான் மத சிறுபான்மை மக்களை பாதுகாக்க தவறியதாக கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்குகளின் தீர்ப்புகள் பொதுவாக மேல்முறையீடுகளில் விடுவிக்கப்படும் தீர்ப்புகளாக வரும்.
தெய்வ நிந்தனை செய்த குற்றச்சாட்டில் கடந்த பத்து வருட காலத்திற்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டு ஆசியா பிபி என்பவர், பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்த பின் நாட்டைவிட்டு சென்றார். அந்த தீர்ப்புக்கு சில தீவிர மத அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
பாகிஸ்தான் கிறித்தவர்கள்
•பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் வாழும் பாகிஸ்தானில் 1.6 சதவீதம் பேர் கிறித்தவர்களாக உள்ளனர்.
•இவர்கள் பெரும்பாலும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள்
•இதில் பலர் சாதிய வேறுபாடுகளிலிருந்து தப்பிக்க மதம் மாறியவர்கள். பலர் ஏழ்மை நிலையில் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்