You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்காத நாள்: ஆச்சரியப்படுத்தும் இஸ்ரேல்
கடந்த 10 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாளில் இஸ்ரேலில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை என தரவுகள் வெளியாகி இருக்கின்றன. அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அதிவேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை, மாற்றமின்றி கடந்த வியாழக்கிழமை 6,346 ஆகவே இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகத் தரவுகள் கூறுகின்றன.
இப்படி இஸ்ரேல் நாட்டில் ஒருவர் கூட கொரோனாவால் இறக்கவில்லை என கடைசியாக கூறியது, கடந்த ஜூன் 2020 காலகட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நாட்டில் கடந்த ஜனவரி 2021-ல் உச்சத்தைத் தொட்டு, தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.
ஒரு மாத காலத்துக்குப் பிறகு, கொரோனா தடுப்பூசி அதிக அளவில் மக்களுக்குச் செலுத்தப்பட்ட பின், இஸ்ரேல் அரசு கொரோனாவை முன்னிட்டு விதித்த ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தத் தொடங்கியது.
உலக அளவில், அதிக அளவில் தன் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டிருக்கும் நாடு இஸ்ரேல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் நாட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 9 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அதில் 5 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கடந்த வியாழக்கிழமை கூறப்பட்டது.
இஸ்ரேலின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமாராக 53 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி (இரண்டு டோஸ்) செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
"இது இஸ்ரேல் நாட்டின் சுகாதார அமைப்பும், இஸ்ரேல் நாட்டு மக்களும் செய்த மிகப் பெரிய சாதனை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸை ஒழிப்போம்" என இஸ்ரேல் சுகாதார அமைச்சர் யுலி எடெல்ஸ்டெய்ன் கடந்த வெள்ளிக்கிழமை ட்வீட் செய்திருக்கிறார்.
இஸ்ரேல் சமூக நோயெதிர்ப்பு நிலையை நோக்கி மிக நெருக்கமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என, இஸ்ரேலின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான தி ஷிபா மருத்துவ மையத்தின் இயக்குநர் இயால் லெஷெம் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தொற்றுக்கு எதிராக, ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் போதுமான பாதுகாப்பு இருக்கும் போது, சமூக நோயெதிர்ப்பு நிலை உருவாகும். அது நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும்.
ஹெர்ட் இம்யூனிட்டி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சமூக நோயெதிர்ப்பு நிலையை அடைவதற்கு உலக மக்கள் தொகையில் 65 - 70 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையிலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதற்கு, சமூக நோயெதிர்ப்பு நிலை மட்டுமே ஒரே காரணமாக இருக்கும் என கூறியுள்ளார் லேஷெம்.
"இஸ்ரேல் மீண்டும் பழைய நிலைக்கும் திரும்பிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது" என்று அவர் கூறினார்.
"ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அவர் சந்திக்கும் பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லை என்பதைத் தான் இது நமக்கு கூறுகிறது"
இஸ்ரேல் நாடு கடந்த டிசம்பர் 2020-ல் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியைத் தொடங்கியது. அப்போதிலிருந்து தன் நாட்டில் உள்ள மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்தும் நாடாக (விகித அடிப்படையில்) முன்னிலை வகித்து வருகிறது.
தொடக்கம் முதலே இஸ்ரேல் ஃபைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியை மட்டுமே செலுத்தி வருகிறது.
ஃபைசர் தயாரித்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள், கொரொனாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 95.8 சதவீதம் குறைந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, கடந்த பிப்ரவரியில் இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கழகம் (எஃப்.டி.ஏ), தடுப்பூசியை குழந்தைகளுக்குச் செலுத்த அனுமதி கொடுத்த உடன், தங்கள் நாட்டிலுள்ள 12 - 15 வயதிலுள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது இஸ்ரேல்.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் முழு முடக்கத்தால் குறைந்த வாகன போக்குவரத்து, கடலூரில் வீதியில் நடந்த திருமணம்
- நரேந்திர மோதி உருக்கம்: "கொரோனா வதந்திகளை தவிருங்கள்"
- பேட்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா, அதிரடி காட்டிய ராஜஸ்தான் பவுலர்கள்
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தேர்தல் பிரசார கூட்டங்கள் காரணமா? #FACTCHECK
- தமிழ்நாடு கொரோனா அலை: ஆக்சிஜன் தேவைப்பட்டால் என்ன செய்வது? ரெம்டிசிவிர் யாருக்கு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: