You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கா - தென் கொரியா சந்திப்பு: எச்சரிக்கும் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங்
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் வீண் பிரச்னையை கிளப்ப வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரிய ஆட்சி நிர்வாகத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள இவரது இந்த கருத்து கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் கொரிய நாடுகள் குறித்த தனது கொள்கையை வெளியிடத் தயாராக உள்ள நிலையில் கிம் யோ-ஜாங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வட கொரிய அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளவதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்க அரசு செயலர்கள் தென்கொரியா வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடன் ராஜாங்க ரீதியிலான தொடர்புகளை மேற்கொள்ள தாங்கள் பல வாரங்களாக முயற்சி செய்து வருவதாக அமெரிக்க அரசு கூறுகிறது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுள்ளதை வடகொரிய அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை .
வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தால் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சுமுகமான உறவு இல்லை.
"அமெரிக்காவின் புதிய அரசுக்கு ஓர் அறிவுரை சொல்ல விரும்புகிறேன். பெருங்கடலைக் கடந்து நமது நிலத்தில் துப்பாக்கி ரவையின் மணத்தைப் பரப்ப அமெரிக்கா விரும்புகிறது. அடுத்த நான்காண்டுகள் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் துர்நாற்றத்தை உண்டாக்குவதை முதல் நடவடிக்கையாக எடுப்பதை அமெரிக்கா தவிர்க்க வேண்டும்," என்று வட கொரிய அரசின் ரோடோங் சின்முன் செய்தித்தாளிடம் கிம் யோ-ஜாங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வது வடகொரியா மீதான படையெடுப்பு காண முன்னோட்டம் என்று அந்நாடு கூறி வருகிறது.
இந்த கூட்டு ராணுவப் பயிற்சிக்கு கிம் யோ-ஜாங் இந்தப் பேட்டியில் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"தென் கொரிய அரசு 'போருக்கான அணிவகுப்பு' நடத்த மீண்டும் முடிவுசெய்துள்ளது இது 'நெருக்கடிக்கான அணிவகுப்பு' ஆகும்," என்று அவர் கூறியுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் தங்கையான கிம் யோ-ஜாங், அவர் உடன் பிறந்தவர்களில் அதிக அரசியல் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார்.
தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி ப்லின்கன் மற்றும் பாதுகாப்பு செயலர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் இந்த வாரம் பயணம் மேற்கொள்கின்றனர்.
வடகொரியாவின் அணு ஆயுத நடவடிக்கைகளில் இந்த சந்திப்புகளின் போது முக்கியத்துவம் பெறும் என்று கருதப்படுகிறது. வடகொரியா உடன் அமெரிக்க அரசின் தொடர்பு குறித்த கொள்கையை புதிய அதிபர் ஜோ பைடன் அதை அடுத்த மாதம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான உறவு 2017ஆம் ஆண்டு மிகவும் மோசமான நிலையை அடைந்தது . அந்த காலகட்டத்தில் அமெரிக்க நகரங்களை அடைந்து தாக்கக்கூடிய தொலைதூர ஏவுகணைகளை சோதனை செய்து இருந்தது வடகொரியா.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் நேரில் சந்தித்து தனிப்பட்ட விதத்தில் நட்பை வளர்த்துக் கொண்ட பின்பு இரு நாடுகளிடையேயான பதற்றம் சற்று தணிந்தது.
ஆனால் சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் இவர்கள் இடையே நடைபெற்ற சந்திப்புகள் வடகொரியாவை அணு ஆயுத சோதனைகளை கைவிட வைக்கவோ, அமெரிக்கா விதித்த தடைகளை நீக்கவோ செய்யவில்லை.
அமெரிக்கா, தென்கொரியாவை கவனிக்கும் வடகொரியா
லாரா பிக்கர், பிபிசி செய்தியாளர், தென்கொரியா
அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதை வடகொரியா எதிர்க்கும் என்பது பலரும் எதிர்பார்த்ததுதான். சில நேரங்களில் அது ஏவுகணை சோதனை செய்து எதிர்வினையாற்றும் அல்லது இப்போது வெளியிடப்பட்டுள்ள போல கோபமான கருத்துகள் வெளியிடப்படும்.
அவரது சகோதரரின் விருப்பத்துக்குரிய தாக்கும் நாயாக சில காலமாக இருந்து வருகிறார் கிம் யோ-ஜாங். இவரது இந்த கருத்து அதற்கு விதிவிலக்கல்ல.
சமீபத்திய கூற்றின் மூலம் இரண்டு விவகாரங்களை இலக்கு வைக்கிறார். முதலாவது கூட்டு ராணுவ பயிற்சி; இரண்டாவது அமெரிக்க வெளியுறவுச் செயலர், பாதுகாப்பு செயலர் ஆகியோர் சோல் நகருக்கு வருகை தருவது.
வெள்ளை மாளிகை வட கொரிய அரசுடன் தொடர்பு கொள்ள மேற்கொள்ள பல வழிகளில் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆனால் அமெரிக்க மற்றும் தென் கொரியா அரசுகள் என்ன செய்கின்றன என்பதை வடகொரியா கவனித்து வருகிறது என்பதை இது உணர்த்துகிறது.
ஒருவேளை அமெரிக்க - தென்கொரிய சந்திப்பின் முடிவுகள் வடகொரியாவுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யப்படும் என்று கிம் யோ-ஜாங் எதுவும் கூறவில்லை. ஆனால் ஏற்கனவே அவர்கள் எச்சரிக்கப்பட்டனர் என்று இந்த பேட்டியில் அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா வைரஸ் - மாநிலம் முழுவதும் கண்காணிப்பு
- கொரோனா தடுப்பூசி: "ஆஸ்ட்ராசெனிகா மருந்தால் ரத்தம் உறையும் அறிகுறியில்லை"
- ''பெண்கள் பிரதிநிதித்துவத்தை மதிக்கின்றனவா அரசியல் கட்சிகள்?'' - நிலவரம் என்ன?
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்