You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"டிரம்பை பழிவாங்குவோம்" - இரான் அதிஉயர் தலைவர் காமனேயி மிரட்டல்
இரானின் புரட்சிகர ராணுவப்படையின் தலைவர் காசெம் சுலேமானீயைக் கொன்றதற்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக, இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனேயி வெளிப்படையாக இணையத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அலி காமனேயியின் அதிகாரபூர்வ வலைதளத்தில், ஒரு பெரிய போர் விமானம் அல்லது டிரோனின் நிழலில், டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற ஒரு படம் பகிரப்பட்டிருக்கிறது.
'பழிவாங்கப்படுவது நிச்சயம்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை முதலில் ட்விட் செய்த மற்றொரு ட்விட்டர் கணக்கை, ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
@khamenei_site என்கிற ட்விட்டர் கணக்கு போலியானது எனவும், இந்தக் கணக்கு ட்விட்டர் தளத்தின் கொள்கைகளை மீறிவிட்டதாகவும், ட்விட்டர் தரப்பில் இருந்து ராய்டர்ஸ் முகமைக்கு கூறப்பட்டது.
இந்தப் பதிவை, சுமாராக மூன்று லட்சம் பேர் பின் தொடர்பவர்களைக் கொண்ட அயதுல்லா காமனேயியின் ஃபர்ஸி ட்விட்டர் கணக்கிலும் பகிரப்பட்டது. பின்னர் அக்கணக்கில் இருந்தும் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது.
அந்த ட்விட்டில், ஃபர்ஸி மொழியில் பழிவாங்கல் எனும் சொல் சிவப்பு நிறத்தில் இருந்தது. "சுலேமானீயைக் கொன்றவர். இவர் தான் சுலேமானீயை தாக்க உத்தரவிட்டார். டிரம்ப் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும்" என அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.
அயதுல்லா காமனேயியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 'எப்போது வேண்டுமானாலும் பழிவாங்கப்படும்' என்று கடந்த டிசம்பர் 16ஆம் தேதி காமனேயி கூறியிருந்த கருத்துடன் இந்தப் படம் பகிரப்பட்டிருந்தது.
டொனால்ட் டிரம்புக்கு மட்டும் தடை விதித்துவிட்டு, இரானிய தலைவருக்கு தடை விதிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழவே ட்விட்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
முன்னாள் அதிபர் டிரம்ப், தன் ட்விட்டர் கணக்கில் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத் தாக்குதலைத் தூண்டும் விதத்தில் பதிவு செய்ததாகக் கூறி கடந்த மாதம், அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
"இதுபோன்ற அடாவடித் தனமான, மனநிலை சரியில்லாத ஒருவர், முன்னாள் அமெரிக்க அதிபரை கொலை செய்வதற்கு அழைப்புவிடுக்க முடியும். அவர் ஏன் ட்விட்டரில் இருந்து புறக்கணிக்கப்படவில்லை?" என ஒரு ட்விட்டர் பயனர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.
"டிரம்பு மீது தடை விதிக்கப்பட்டது, ஆனால் இது (டிரம்ப் கொலை மிரட்டல்) பதிவு ஏற்றுக்கொள்ளக் கூடியது. இது என்ன நகைச்சுவையா?" என மற்றொரு ட்விட்டர் பயனர் எழுதியுள்ளார்.
ஓராண்டு காலத்துக்கு முன், இரானின் தலைநகரான பாக்தாத்தில், அந்த நாட்டின் புரட்சிகர ராணுவப்படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டார்.
இவர் தலைமையில்தான், இரானுக்கு ஆதரவான ராணுவக் குழுக்கள் வளர்ந்தன. இதை முதலாக கொண்டே இராக் மற்றும் சிரியாவில் தன் ராணுவ இருப்பை இரான் அதிகரித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
"இவர் (காசெம் சுலேமானீ) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பல லட்சக் கணக்கான மக்களின் இறப்புக்கு காரணம்" என அப்போது டிரம்ப் கூறியது நினைவுகூரத்தக்கது.
பிற செய்திகள்:
- மசினகுடி யானையை தீ வைத்து விரட்டிய வீடியோ வெளியானது - இருவர் கைது
- `நம் மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களைவிட அதிகம்'
- மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் இல்லை
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்