டிரம்பின் சேனலுக்கு யூட்யூப் கட்டுப்பாடு - 7 நாட்களுக்கு புதிய விடியோ பதிவேற்ற தடை

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

யூட்யூப் சமூக வலைதள கொள்கை விதிகளை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் காணொளிகளை வெளியிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் யூட்யூப் பக்கத்தில் புதிய காணொளிகளை 7 நாட்களுக்கு பதிவேற்ற முடியாத கட்டுப்பாடுகளை யூட்யூப் நிறுவனம் விதித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பதிவேற்றிய காணொளி வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூட்யூப் நிறுவனம் கருதுகிறது.

அந்த காணொளி, யூட்யூப் கொள்கை விதிகளை மீறும் வகையில் இருப்பதால் டிரம்பின் பக்கத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் புதிய காணொளிகளை பதிவேற்றவும், லைவ்-ஸ்ட்ரீமிங் எனப்படும் காணொளி நேரலையை ஒளிபரப்பரவும் அடுத்த ஏழு நாட்களுக்கு முடியாது. இந்த நாட்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைப்பட்ட நாட்களில் டிரம்பின் யூட்யூப் பக்கத்தில் வாசகர் கருத்துகள் பதிவிடுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

யூட்யூப் நிறுவனத்துக்கு எதிராக விளம்பர புறக்கணிப்புக்கு நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக சிவில் உரிமைகள் குழுக்கள் அச்சுறுத்திய சில மணி நேரங்களில் இந்த நடவடிக்கையை யூட்யூப் நிறுவனம் எடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டு பேஸ்புக்கிற்கு எதிராக இதேபோன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவிய ஜிம் ஸ்டேயர், தற்போதைய விவகாரத்தில் அதிபர் டிரம்பின் சேனலையே தளத்தில் இருந்து எடுக்குமாறு யூட்யூப் நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள யூட்யூப் நிறுவனம், "வன்முறை பற்றிய தற்போதைய கவலைகளைப் பொறுத்தவரை, அதிபர் டிரம்பின் சேனலில் வாசகர் கருத்துரைகளை காலவரையின்றி முடக்குகிறோம். ஏனென்றால் பாதுகாப்பு கவலைகள் எழுந்ததால் மற்ற சேனல்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுத்தோமோ அது போலவே டிரம்பின் சேனல் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்," என்று கூறியுள்ளது.

டிரம்ப்

கடந்த வாரம் கேப்பிட்டல் ஹில் பகுதியில் ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தைத் தொடர்ந்து, டிரம்பின் பக்கத்துக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்த நடவடிக்கை ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன்வசம் ஆட்சி அதிகாரம் மாறும்வரை நீடிக்கும் என்று அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

ட்விட்டர் நிறுவனமோ டிரம்ப் தனது பக்கத்தில் பதிவிடுவதற்கு நிரந்தர தடை விதித்திருப்பதாக கூறியுள்ளது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக டிரம்பின் ட்விட்டர் பக்கத்தில் புதிய இடுகைகள் எதுவும் பதிவாகவில்லை.

சமூக ஊடகங்களில் பிரபலமான Shopify, Pinterest, TikTok, Reddit ஆகியவை தங்களின் பக்கங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் தேர்தல் முடிவுகள் குறித்து அதிபர் டிரம்ப் பேசியதாக தெரிய வந்ததால், உடனடியாக அந்த பக்கத்தின் இடுகைகளை முடுக்க நடவடிககை எடுத்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: