பிரான்ஸ் துப்பாக்கி சூடு: போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக் கொலை

பிரான்சில் மூன்று போலீஸ் அதிகாரிகளை ஒரு துப்பாக்கிதாரி சுட்டுக் கொன்றார். பிறகு அந்த துப்பாக்கிதாரியும் உயிரிழந்தார்.

பிரான்சின் மத்திய பகுதியில் ஒரு குடும்ப வன்முறை சம்பவத்துக்காக அந்த போலீஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

புதன்கிழமை அதிகாலை செயின்ட்-ஜஸ்ட் என்ற கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு பெண் வீட்டின் கூரைக்கு தப்பிச் சென்றார்.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உடனடியாக இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார். பிறகு அந்த துப்பாக்கிதாரி வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு மேலும் அங்கு வந்த வேறு இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் கொன்றார்.

கூரை மீது ஏறிய பெண் மீட்கப்பட்டார்.

இந்த சம்வபத்தில் காலில் பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதிகாரி நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்ட நபர், வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலமாக கிடந்தார். குழந்தைகளை அடைத்துவைத்த ஒரு விவகாரத்தில் அவரை அதிகாரிகளுக்குத் தெரியும் என்று கூறப்படுகிறது.

அந்த வீடு எரிந்துவிட்டதாக செயின்ட்-ஜஸ்ட் மேயர் ஃபிரான்சே சௌடார்ட் லீ ஃபிகாரோ ஊடகத்திடம் தெரிவித்தார்.

பொதுமக்களின் உயிரிகைக்காக்க தன்னுயிரை பணயம் வைக்கும் காவல்துறையினர் நமது கதாநாயகர்கள் என்று பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், நடந்த சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸில் 2012ஆம் ஆண்டில் டூலொன் பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்கத் சென்ற இரு பெண் காவலர்கள், வாக்குவாதத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :