You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"காவன்" யானைக்கு விடுதலை - தனிமை வாழ்வில் பல ஆண்டுகளை கழித்த வேதனை அனுபவங்கள்
பல பத்தாண்டுகளாக, உலகில் மிகவும் தனிமையில் வாழ்ந்து வந்த யானை, பாகிஸ்தான் மிருகக்காட்சி சாலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட சிறிய வளாகத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்த மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தது.
துதிக்கையை உயர்த்தி அதை சல்யூட் அடிக்க வைக்க, அதன் பெயரை பார்வையாளர்கள் உச்சரிக்கும்போது காவன் மனம் கோணாமல் வணக்கம் வைக்கிறது.
யானைப் பாகன் கையில் உள்ள தார்க்குச்சியால் அதைத் தூண்டி மறுபடி மறுபடி சல்யூட் அடிக்க வைப்பார். அப்போதுதான் அவருடைய பாக்கெட் நிறையும்.
அந்த இடத்தில் இருந்த மற்ற யானைகள் விற்கப்பட்ட நிலையில், கடைசியாக உடனிருந்த பெண் யானையும் தார்க்குச்சியின் கம்பியால் ஏற்பட்ட ஆழமான காயத்தால் ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இறந்து போனது.
பல ஆண்டுகளாக காவன் யானையின் தனிமை பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காலில் கட்டியுள்ள சங்கிலியால் ஏற்பட்ட காயம் அதற்கு நிரந்தர தழும்பாகவே மாறிவிட்டது. மெல்ல, மெல்ல அதன் உடல் பருமனாகி, மனதளவில் பாதிப்புக்கு ஆளானது.
ஆனால், மிகவும் தனிமையில் உள்ள இந்த யானை ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய இருப்பிடத்தில் இருந்து வெளியேறப் போகிறது. தன்னார்வலர் கூட்டமைப்பின் உறுதியான செயல்பாடு காரணமாகவும், எதிர்பாராத வகையில் அமெரிக்க பாப் கலைஞர் செர் ஆதரவு கிடைத்ததாலும், வேறொரு கண்டத்திற்கு இந்த யானையின் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இதுதான் காவனின் கதை.
பாகிஸ்தான் வந்த கதை
பாலிவுட் படம் வராமல் போயிருந்தால், நுட்பமான சர்வதேச உறவு மற்றும் ஒரு சிறிய பாப்பாவின் விருப்பம் இல்லாமல் போயிருந்தால் இந்த யானை பாகிஸ்தானுக்கு வந்திருக்காது.
பாகிஸ்தானின் அப்போதைய ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் ஜியா-உல் ஹக்கின் மகள் ஜெயின் ஜியா `ஹாத்தி மேரா சாத்தி (யானைகள் என் நண்பர்கள்)' என்ற படத்தைப் பார்த்த பிறகு யானைகள் மீது பாசம் கொண்டிருந்தார்.
அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
``நான் வானத்தைப் பார்த்து அல்லாஹ் எனக்கு நண்பனாக ஒரு யானையைக் கொடுங்கள் என்று வேண்டிக் கொண்டேன்.'' என்று பிபிசியிடம் சமீபத்தில் ஜெயின் தெரிவித்தார்.
அவருடைய பிரார்த்தனை அவரது தந்தை மூலமாக நிறைவேறியது. சீக்கிரத்திலேயே, ஒரு நாள் ஜெயின் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரை ஜெனரல் ஹக் நிறுத்தி, கண்ணைக் கட்டி, பின்புற மைதானத்துக்கு அழைத்துச் சென்றார்.
``எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருப்பதாக அவர் சொன்னார்'' என்று ஜெயின் நினைவுகூர்ந்தார். `
`அதைத் தொடும்படி என்னை வழிநடத்தினார். பிறகு என் கண் கட்டை அவிழ்த்தார். அங்கு குட்டி யானை நின்று கொண்டிருந்தது. மிகவும் அழகாக இருந்தது. அதை வீட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் அது அரசாங்கத்துக்குச் சொந்தமானது என்றும், மிருகக்காட்சி சாலைக்கு அனுப்ப வேண்டும் என்றும் என் தந்தை கூறினார். யானையை நாம் பராமரிப்பது கஷ்டம், அதுவும் வளர்ந்த பிறகு பராமரிப்பது கஷ்டம் என்றும் சொன்னார். எனவே நான் ஓ.கே. சொல்லிவிட்டேன்'' என்று ஜெயின் கூறினார்.
காவன் என்ற அந்த யானை அதற்கு முன்பு வரையில் இலங்கையில் பின்னவாலா ஆதரவற்ற யானைகள் பராமரிப்பு முகாமில் இருந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த இலங்கை யானை மறுவாழ்வு நிபுணர் ரவி கோரியா தெரிவித்தார். உள்நாட்டுப் போரில் இலங்கை ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக ஜெனரல் ஹக் அரசிற்கு, ஒரு வயதாகியிருந்த அந்த யானையை இலங்கை அரசு பரிசாகத் தந்ததாகத் தெரிகிறது.
காவன் யானை உண்மையிலேயே ஆதரவற்று இருந்ததா என்பதைப் போலவே, பாகிஸ்தானுக்கு எதற்காக பரிசாக அளிக்கப்பட்டது என்ற காரணமும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 1985-ல் ஒரு காலகட்டத்தில் இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலைக்கு அது வந்து சேர்ந்தது என்பது மட்டும் தெரியும்.
கண்டுகொள்ளப்படாத மிருக காட்சிசாலை
மர்கஜார் மிருகக்காட்சி சாலை 70 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. ஆட்சித் தலைமையில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் ``பிசினஸ் மாபியாக்கள்'' தலையெடுக்கத் தொடங்கினார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் மிருகக்காட்சி சாலையில் என்ன நடக்கிறது, விலங்குகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அதிகார வர்க்கத்தினர் அக்கறை காட்டவில்லை.
எனவே, மிருகக்காட்சி சாலையில் வேலை பார்ப்பவர்களில் செல்வாக்கு உள்ளவர்கள், அங்கு உணவு ஸ்டால்கள் அமைக்க, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதிகளை உருவாக்க தங்கள் குடும்பத்தினருக்கு ஒப்பந்தங்களை அளித்தனர். அருகில் உள்ள பசுமை மைதானங்களில் இவற்றை அமைக்கவும் ஒப்பந்தம் அளித்தனர்.
அவர்கள் பணம் சம்பாதிக்க வேறு வழிகளும் இருந்தன.
பல்வேறு பகுதிகளில், பல சமயங்களில், செல்வாக்கு மிகுந்தவர்கள் நடத்தும் மதுபான விருந்து நிகழ்ச்சிகளில் ஈர்ப்பை அதிகரிக்க மான்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன.
இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையின் நண்பர்கள் அமைப்பை தொடர்பு கொண்ட தன்னார்வலர்கள், அங்கு 2019ல் பல்வேறு சமயங்களில் ஆய்வுகள் நடத்தியுள்ளனர். அப்போது விலங்குகளின் எண்ணிக்கையில் பெரிய மாறுபாடு இருந்ததை அவர்கள் கவனித்துள்ளனர். இதை அவர்கள் சுட்டிக்காட்டிய போது, திடீரென புதிய விலங்குகள் அங்கே கொண்டு வரப்பட்டன.
இந்தக் குழு இதை மட்டும் கண்டுபிடிக்கவில்லை. இன்னும் நிறைய கண்டுபிடித்தது.
``மிருகக்காட்சி சாலையில் கால்நடை மருத்துவ வசதியோ, அதற்கான மருந்துகளோ இல்லை'' என்று முகமது பின் நவீத் என்ற தன்னார்வலர் தெரிவித்தார். ``விலங்குகள் ஆரோக்கிய வளாகம் எதுவும் இங்கே இல்லை; அறுவை சிகிச்சை செய்வதற்கான இடம் கிடையாது. நோயுற்ற விலங்குகளை தனிமையில் வைப்பதற்கான இடவசதியும் இல்லை'' என்று அவர் தெரிவித்தார்.
இவ்வளவு அசாதாரண சூழ்நிலையிலும் காவன் யானைதான் அந்த மிருகக்காட்சி சாலையின் ஸ்டாராக இருந்தது.
விலங்குவழி தொற்று
மிருகக்காட்சி சாலை திறக்கும் நேரத்தில் கம்பி வேலியின் அருகே நின்று கொண்டு, பாகனின் உத்தரவுக்கு ஏற்ப துதிக்கையை நீட்டி காசு வாங்கி, அவரிடம் தருவது தான் காவன் யானையின் வேலையாக இருந்து வந்தது.
இரவு நேரங்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட சுமார் அரை ஏக்கர் பரப்புள்ள மைதானத்தில் காவன் யானை இருந்தது. அதிலேயே கான்கிரீட் தரையுடன் ஒரு கூடாரம் அமைத்துள்ளனர். எப்.பி.ஐ. என்ற விலங்குகள் உரிமை குழுவின் தன்னார்வலர்கள் பிறகு ஒரு அறிக்கை தயாரித்தபோது, குறுகலான கான்கிரீட் சுவர் உள்ள நீர் இல்லாத ஓர் குளத்தைப் பார்த்தனர்; கெட்டியான மண் பரப்பு இருந்தது; இயற்கையான மணற்பாங்கான பரப்பு, மரங்கள், கட்டைகள், புதர்கள், பாறைகள் போன்ற எந்த அமைப்பும் அங்கே இல்லை.
ஆனால் காவன் தனிமையில் இல்லை என்பது ஆறுதலான விஷயம். பல ஆண்டுகளாக சஹேலி (பெண் தோழி என அர்த்தம்) என்ற பெண் யானை அதனுடன் இருந்தது. 1990களின் ஆரம்பத்தில் வங்கதேசத்தில் இருந்து அந்த யானை அங்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
அப்படியொரு துணை இருக்க வேண்டும் என்பதை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. யானைகள் மனிதர்களைப் போல புலன் உணர்ச்சி கொண்டவை என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர். காட்டில் 60 முதல் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியவையாக, மனிதர்களைப் போன்ற உணர்வுகள், குடும்ப பந்தங்களுடன் வாழக் கூடியவையாக உள்ளன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறந்து போன யானைக்கு மற்ற யானைகள் அஞ்சலி செலுத்தவும் செய்கின்றன.
அந்தப் பெண் யானை 2012-ல் இறந்து போனது. வெயில் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அந்த யானை இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். ஆனால், ரத்தத்தில் நச்சுத்தன்மை பரவியதால் தான் அந்த யானை இறந்தது என்று தன்னார்வலர் முகமது பின் நவீத் கூறுகிறார்.
``சில சமயங்களில் பாகன் வைத்திருக்கும் தார்க்குச்சியின் கம்பி, சுத்தம் செய்யப்படாத நிலையில் யானையின் தோலில் ஆழமாகப் பதிந்துள்ளது. சீழ் பிடித்து, ரத்தத்தில் நச்சுத்தன்மை பரவியதில் அந்த யானை இறந்துள்ளது. எல்லோருக்கும் இது தெரியும், ஆனால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்'' என்கிறார் அவர்.
தனக்குத் தேவையான இயற்கை சூழல் கிடைக்காத நிலையில், பெண் யானை இருந்த வரையில் காவனின் மூர்க்கத்தனம் அதிகரித்துக் கொண்டிருந்தது. 2000-வது ஆண்டில் இருந்து அதிக நேரம் சங்கிலி போட்டு கட்டப்பட்டிருந்தது.
பெண் யானை இறந்த பிறகு நிலைமை மோசமானது. காவன் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அதன் பாகன் கூறினார். யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. தனிமையில் இருந்த அந்த யானையின் அருகில் செல்வதை அவரும் தவிர்த்தார்.
எப்.பி.ஐ. குழுவினர் 2016-ல் அங்கு சென்றபோது, ``மூர்க்கத்தனமாக'' இருந்த அந்த யானைக்கு ``விலங்குகள் மூலம் பரவிய தொற்று'' இருந்ததைக் கண்டறிந்தனர்.
``நகர்ந்து செல்லும் செயல்பாடு குறைந்திருந்தது. சௌகரியமான செயல்பாட்டுக்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து தலையை ஆட்டிக் கொண்டு ஒரே மாதிரியான செயல்பாட்டில் இருந்தது'' மனிதர்களைப் பார்க்கும் போது முன்பைவிட மாறுபட்ட உணர்வுகளைக் காட்டியது, ``காசு வாங்குவது மட்டும் தொடர்ந்தது'' என்று அந்தக் குழுவினர் கூறியுள்ளனர்.
யானையின் உடல் நலம் குறைந்து கொண்டே போனது என அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. ``இடது கண்ணில் லேசான சவ்வு அழற்சி இருந்தது,கால்களின் கீழ்ப் பகுதியில் நிறம் மாறியிருந்தது. சங்கிலி போட்டிருந்த பழைய அடையாளங்களாக அவை இருந்தன. பல நகங்கள் உடைந்து போயிருந்தன. புறத்தோல்களில் பாதிப்பு இருந்தது'' என்றும் குழுவினர் கூறியுள்ளனர்.
காவன் யானை நோயுற்றிருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. பராமரிப்பாளர்கள் சர்க்கரை சத்துமிகுந்த உணவுகளை அதிகம் கொடுத்ததால், வழக்கத்திற்கு மாறாக யானை பருமனாக இருந்தது.
ஆனால் மிருகக்காட்சி சாலையின் ஸ்டாரை இழந்துவிட யாருக்கும் விருப்பம் இல்லை. தன்னைவிட ஒரு பெரிய ஸ்டார் வந்தால் தான் காவனுக்கு விடுதலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது
நீடித்த சட்டப்பிரச்சனை
காவனின் பரிதாப நிலை பற்றி 2016-ல் பாப் கலைஞர் செர் அறிந்தார். ஆஸ்கர் பரிசு பெற்ற நடிகையும் பாடகியுமான அவர், வனவிலங்குகளை விடுவிப்போம் என்ற பெயரில், வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையை உருவாக்கி இருந்தார். இந்த யானைக்கு விடுதலை தருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க சட்டக் குழு ஒன்றை அணுகினார்.
காவன் யானையை விடுவிக்க வேண்டும் என்று மே மாதம் நீதிமன்றம் உத்தரவிட்ட போது, தன் வாழ்வில் அது ``மகத்தான தருணங்களில்'' ஒன்றாக உள்ளது என செர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவருடைய ட்விட்டரை 3.8 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். மே மாதத்தில் இருந்து இந்த யானையின் விடுதலை குறித்த நிகழ்வுகளை அவர் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
ஆனால் காவனுக்காகவும், அந்த மிருகக்காட்சி சாலையில் உள்ள மற்ற விலங்குகளுக்காகவும் நடக்கும் போராட்டம் முடிந்துவிடவில்லை. ஒவ்வொரு துறையிலும் இழுத்தடிப்பு செய்து, கடைசியாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு அந்தப் பிரச்னை சென்றது.
கடந்த ஜூன் மாதம் பொது நலன் கருதி மிருகக்காட்சி சாலையை மூடுமாறு உத்தரவு வந்தது. ஆனாலும் காவனின் நிலைமை நிச்சயமற்றதாக இருந்தது. ``பிடிவாத நடவடிக்கையை'' கடைப்பிடிக்கும் சிலர் காவனை வெளிநாட்டுக்கு அனுப்ப மறுத்தனர். ``தாங்களே அந்த யானையை பராமரிக்கப் போவதாக'' அவர்கள் கூறினர் என்று முகமது பின் நவீத் தெரிவித்தார்.
ஆனால் உலக வனவிலங்கு நிதியத்தைச் சேர்ந்த டாக்டர் உஜ்மா கான் சமீபத்தில் தொலைக்காட்சி நேர்காணலில் கூறியதைப் போல, காவன் இருக்கும் மிருகக்காட்சி சாலையில் மட்டும் தான் பிரச்னை என்று சொல்லிவிட முடியாது. பாகிஸ்தானில் விலங்குகள் பராமரிப்பு விஷயத்தில் ஒரே மாதிரியான தரநிலைகள் இல்லை. அதன் மிருகக்காட்சி சாலை எதுவுமே மிருகக்காட்சி சாலைகள் மற்றும் மீன் காட்சியகங்களுக்கான உலக சங்கத்தில் உறுப்பினராக இல்லை.
எனவே இரண்டாவது முறையாக எப்.பி.ஐ. குழு பாகிஸ்தானுக்கு வரவழைக்கப்பட்டது. புதிய திட்டம் உருவானது. கம்போடியாவுக்கு காவனை கொண்டு செல்லலாம் என முடிவானது. ``பாதுகாக்கப்பட்ட'' சரணாலயத்தில் மீதி காலத்தை காவன் கழிக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்னை இருந்தது. காவன் மூர்க்கத்தனமான, உடல் பருமனாக இருந்தது. அதனால் கம்போடியாவுக்கான அதன் பயணம் எளிதாக இருக்காது என்று தெரிந்தது.
இறுதியில், எகிப்தில் பிறந்த எப்.பி.ஐ. குழுவின் தலைவரான டாக்டர் அமீர் காலீல் புதிய ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.
காவனின் ஆரோக்கியத்தை பாதுகாப்புடன் ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்ய வேண்டியிருந்தது. அடைப்பு வேலிக்குள் இன்னொரு பகுதியில் அமீர் காலீல் மற்றும் அவருடைய நண்பர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
அது ரொம்ப போரடிக்கும் வேலையாக இருந்தது என்கிறார் அவர்.
``எனவே நான் பாட்டுப் பாடத் தொடங்கினேன். சிறிது நேரம் கழித்து என் குரலில் யானைக்கு ஆர்வம் வந்ததைப் போல உணர்ந்தேன். மற்ற யாருக்கும் என் குரல் பிடிக்காது என்றாலும், யானைக்குப் பிடித்திருந்தது. எனக்கு ஒரு பெரிய ரசிகன் கிடைத்துவிட்டான் என மகிழ்ச்சி அடைந்து, அவனுக்காக நான் பாடத் தொடங்கினேன்'' என்று அவர் கூறினார்.
சீக்கிரத்திலேயே காலீல் கைகளால் தரும் உணவை காவன் சாப்பிடத் தொடங்கியது. தன் துதிக்கையால் அவரை அணைத்துக் கொண்டது. போர்ட்டபிள் சவுண்ட் சிஸ்டமில் பாரம்பரிய பாப் காலத்தைச் சேர்ந்த தனக்குப் பிடித்தமான பாடல்களை ஒலிக்கவிட்டவாறு குளத்தில் யானையை அவரால் குளிப்பாட்ட முடிந்தது.
ஒரு சமயத்தில் மூர்க்கத்தனமாக இருந்த அந்த யானை சீக்கிரத்தில் டாக்டர் காலீல் மற்றும் அவருடைய சகாக்கள் சொல்வதை கேட்கத் தொடங்கியது. கம்போடியாவுக்கான எட்டு மணி நேர பயணத்துக்கு ஏற்ற வகையில் ஐந்தரை டன் எடையுள்ள அந்த யானையை தாங்கும் வகையில் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கூண்டில் யானையை ஏற்றினர்.
35 ஆண்டுகால ``தவறான பராமரிப்பு, அனுபவமற்ற அலுவலர்கள், மனிதாபமானம் இன்றி யானையை பணத்துக்காக பயன்படுத்தியது, விலங்குகளின் பராமரிப்பில் குறைந்த அக்கறை காட்டியது'' போன்ற சூழ்நிலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அந்த யானையின் துன்பங்கள் முடிவுக்கு வருகின்றன. காவன் விமானத்தில் செல்லப் போகிறது.
மே மாதம் தீர்ப்பு வந்ததில் இருந்தே தாமும் கம்போடியாவுக்கு பயணிக்கப் போவதாக செர் தன் ட்விட்டர் பதிவில் கூறி வந்தார். அதற்காக வெள்ளிக்கிழமை அவர் பாகிஸ்தானுக்கு வந்து சேர்ந்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவருடைய பயணத் திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை அவர் பிரதமர் இம்ரான் கானை சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் இருந்து, காவனின் புதிய வீடாக இருக்கப் போகும் கம்போடியாவுக்கு அவர் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கம்போடியாவில் குலென்-பிராம்டெப் வனவிலங்கு சரணாலயம் ஒரு மில்லியன் ஏக்கர் பரப்பு கொண்டதாக உள்ளது. அழியும் நிலையில் உள்ள பல விலங்கினங்கள் அங்கே பராமரிக்கப்படுகின்றன. இயற்கை சூழலில் அவற்றைப் பராமரிக்க அலுவலர்கள் தன்னார்வலர்கள் அங்கே இருக்கிறார்கள்.
மன பாதிப்பில் இருந்து மீளவும், இயற்கை சூழலுக்குப் பழகவும் காவனுக்கு பிரச்சினைகள் இருக்கலாம் என்று அதன் நண்பர் டாக்டர் காலீல் கூறுகிறார். ஆனால், ஒரு யானையாக வாழ்வதற்கான சூழல், தன்னுடைய பூமி என சொல்லும் பகுதியில் வாழும் வாய்ப்பு காவனுக்கு கிடைத்திருக்கிறது'' என்கிறார் அவர்.
பிற செய்திகள் :
- முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் சென்னையில் கைது - தொடரும் சர்ச்சை வரலாறு
- சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை வீழ்த்திய நடராஜன் - அசத்தும் தமிழக வீரர்
- மேட்டுப்பாளையம் 'தீண்டாமை சுவர்' விழுந்து ஓராண்டு: தெருவில் வாழும் தலித் மக்கள்
- 'அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் நோக்கமில்லை' - இந்திய அரசு
- பைடன் 1.0, ஒபாமா 3.0 ஆக இருக்குமா? எதிர் நிற்கும் சவால்கள் என்ன?
- கொரோனா: குணமடைந்த 3 மாதம் கழித்தும் நுரையீரல் பாதிப்பு - ஆய்வில் அதிர்ச்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்