You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விவசாய நிலங்களை கண்காணிக்கும் ரோபோக்களை அறிமுகப்படுத்திய கூகுள்
விவசாயிகளின் பயிர் விளைச்சலை மேம்படுத்த, நிலத்தில் தனித்தனிச் செடிகளை கண்காணிக்கும் வகையில் மாதிரி ரோபோக்களை கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃபபெட் அறிமுகப்படுத்தியுள்ளது.
விளைநிலத்தில் விளைச்சலை சேதப்படுத்தாத அளவிற்கு நகரும் இந்த ரோபாக்கள், பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்த பெருமளவிலான தரவுகளை சேகரிக்கும்.
உலகை மாற்றும் தொழில்நுட்பம் உருவாக்குவதை இலக்காக வைத்திருக்கும், ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பிராஜெக்ட் மினரெல் திட்டத்தை தலைமை தாங்கும் எலியோட் கிராண்ட் கூறுகையில், "விவசாயத்துறையில் உணவு எப்படி உருவாக்கப்படுகிறது என்கிற முறையை மாற்ற இந்த தொழில்நுட்பம் உதவும் என நம்புவதாக," தெரிவித்தார்.
உலகில் அதிகரித்துவரும் உணவுக்கான தேவை, மற்றும் உணவை தயாரிக்க நிலையான முறை வேண்டும் என்பது குறித்து தெரிய வைப்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று இத்திட்டக்குழு கூறுகிறது.
ஆனால், தற்போது இருக்கும் முறை, விவசாயிகளுக்கு போதிய தகவல்களை தருவதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
"ஒவ்வொரு பயிர், செடியையும் கண்காணித்து, அதற்கு தேவையான சத்தை கணித்து கொடுத்தால் எப்படி இருக்கும்," என தனது சமூக பக்கத்தில் எலியோட் எழுதியுள்ளார்.
"ஒரு விளைச்சலுக்கான மரபணு மற்றும் சுற்றுச்சூழல் தேவைகள் நமக்கு தெரிய வந்தால் எப்படி இருக்கும்?"
மண் அல்லது காலநிலை குறித்த தகவல்கள் விவசாயிகளுக்கு கிடைக்கலாம். ஆனால், ஒரு செடி ஒரு சுற்றுச்சூழலில் எவ்வாறு வளர்கிறது என்கின்ற குறிப்பட்ட தகவல்களை சேகரிக்க உதவும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கடந்த சில ஆண்டுகளாக இந்த மாதிரி ரோபோக்கள் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ட்ராபெரி நிலங்களிலும், இலினோயிஸில் உள்ள சோயாபீன் நிலங்களிலும் விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அப்போது ஒவ்வொரு ஸ்ட்ராபெரி அல்லது சோயாபீன் செடியையும் பிரித்து, ஆராய்ந்து, உயர்தர புகைப்படங்களை இந்த ரோபோக்கள் அளித்ததாக" இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
செடியின் உயரம், இலை இருக்கும் பகுதிகள், மற்றும் பழத்தின் அளவு ஆகியவற்றையும் இந்த ரோபோக்கள் கண்டறிந்தன.
இந்த தரவுகள் எல்லாம் ஒரு இயந்திரத்தில் இணைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பயனுள்ள வடிவங்களையும் நுண்ணறிவுகளையும் கண்டுபிடிக்க முயற்சிக்கப்படும்.
"விவசாய நிலங்களை கண்காணிக்க ரோபோக்களை பயன்படுத்துவது சிறந்த யோசனையாக இருக்கிறது. பூச்சிகள் இருக்கிறதா என்று பார்ப்பது, பயிர் சரியான நேரத்தில் நடப்படுகிறதா, எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வது, களை எடுப்பது, அல்லது வேலிகளை எவ்வாறு நகர்த்தலாம் போன்ற பல்வேறு விஷயங்களில் இது உதவும்" என்கிறார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் நிறுவனர் மற்றும் தலைவரான இயான் ட்ரூ. இவர் ஒரு செம்மறி ஆடுகளை வளர்க்கும் விவசாயியும் கூட.
இதற்கெல்லாம் விவசாயிகள் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. இந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு மிகப்பெரிய லாபமாக இருக்கும். ஆனால், இதில் சில பிரச்சனைகளும் இருக்கிறதாக கூறுகிறார் இயான்.
"தரவுகள் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். உங்கள் நிலம், பயிர்கள் குறித்த தரவுகளை திருட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார் இயான்.
அதோடு, இந்த தரவுகளுக்கு எல்லாம் யார் உரிமையாளர் என்ற கேள்வியும் வருகிறது.
"தரவுகள் மிகவும் முக்கியமானது. இதனை கட்டுப்படுத்துவது யார், யாரெல்லாம் இதை பார்க்கலாம் என்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டி இருக்கும். ஏனென்றால் இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயமும்கூட"
அமெரிக்க, தென் ஆப்பிரிக்கா, கனடா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளின் விவசாயிகளுடன் ஏற்கனவே இதுதொடர்பாக பணியாற்றி வருவதாக பிராஜெக்ட் மினரெல் கூறியுள்ளது.
ஆனால், இதனை சந்தைப்படுத்துதல் பற்றி இன்னும் எந்த திட்டமும் இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: