You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’இட்லியை தவறாக பேசுவதா?’ - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள்
- எழுதியவர், சுதா ஜி திலக்
- பதவி, டெல்லி
பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இந்திய உணவான இட்லியை 'சலிப்புமிக்கது' என்று ட்விட்டரில் குறிப்பிட்ட சம்பவம் மிகப் பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது.
"இட்லிதான் உலகில் மிகவும் சலிப்பான விடயம்" என்று பிரிட்டனை சேர்ந்த வரலாற்றாசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகையான இட்லி பெரும்பாலும் சாம்பார் அல்லது சட்னி வகைகளுடன் சேர்த்து உண்ணப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தென்னிந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான, தயாரிப்பதற்கு எளிதான மற்றும் சுவையான உணவாக இட்லி கருதப்படுகிறது.
இந்தியா மற்றும் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் நன்கறியப்பட்ட தென்னிந்திய உணவு வகையாக இட்லி இருப்பதாக உணவுகள் குறித்த எழுத்தாளரான விர் சங்வி கூறுகிறார்.
தமிழகத்தை பூர்விகமாக கொண்டவரும், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளருமான ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ், விடுமுறை காலத்தில் தான் சென்னைக்கு வரும்போது தனது அம்மா "இட்லி மீதான தனது காதலை" வெளிப்படுத்தியவை நினைவுகூர்ந்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இந்திய அமெரிக்கர்களின் ஆதரவை பெறுவதற்கு கமலா ஹாரிஸ் இட்லி குறித்து பேசுவதாக சிலர் கருதலாம். ஆனால், இட்லிக்கும் அரசியலுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தப்படுவது இதுவே முதல் முறையும் அல்ல.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில், பெருந்தொற்று காலத்தில் வறுமையில் வாடுபவர்களுக்கு குறைந்த விலையில், "மோதி இட்லியை" விநியோகித்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசால் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகத்திலும், இட்லி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
"மக்கள் இதை ஏன் மிகவும் விரும்புகிறார்கள் என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை" என்று நீங்கள் நினைக்கும் உணவு எது என்று இந்திய உணவு விநியோக நிறுவனமொன்று கேட்ட கேள்விக்கே பிரிட்டனின் நார்த்ம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக பணிபுரியும் ஆண்டர்சன் பதிலளித்திருந்தார்.
ஆனால், தனது கருத்துக்கு இட்லி விரும்பிகள் அதுவும் குறிப்பாக தென்னிந்தியர்களிடமிருந்து இவ்வளவு எதிர்ப்புகள் வந்து குவியுமென்று ஆண்டர்சன் எதிர்பார்க்கவில்லை.
குறிப்பாக, எழுத்தாளரான இஷான் தரூர், ஆண்டர்சனின் கருத்தை ட்விட்டரில் விமர்சித்திருந்தார்.
இதையடுத்து களத்தில் குதித்த இஷானின் தந்தையும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், இட்லி உண்பதற்கான சிறந்த வழியையும் பரிந்துரைத்தார்.
மேலும், பலர் தங்களுக்கு விருப்பமான உணவை தவறாக விமர்சிக்கப்படுவதை பார்த்து விரக்தியடைந்து ட்விட்டரில் பதிவிட்டனர்.
இருப்பினும், தனது கருத்திலிருந்து பேராசிரியர் ஆண்டர்சன் பின்வாங்கவில்லை. அதாவது, ட்விட்டரில் எழுந்த விமர்சனங்களுக்கு பிறகு தான் மதிய வேளைக்கு இட்லியை ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும், அதன் பிறகும் தனது கருத்தை மாற்ற விரும்பவில்லை என்றும் ஆண்டர்சன் கூறுகிறார்.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பேராசிரியர் ஆண்டர்சன், "எனது மனைவி கேரளாவை சேர்ந்தவர். மேலும், நான் இந்தியாவில் நிறைய நேரம் செலவிட்டுள்ளேன் என்பதால் பலமுறை இட்லி சாப்பிட்டிருக்கிறேன். எனது மாமியாரின் காலை உணவில் இட்லி தவறாமல் இடம்பெறும்" என்று கூறினார்.
இருப்பினும், இட்லியை விட்டுக்கொடுக்க விரும்பாத விரும்பிகள் பலர், காலையில் சரியான வகையில் இட்லியை உண்பது குறித்து ஆண்டர்சனுக்கு பாடம் எடுத்தனர். அதாவது, வாழை இலையில் சூடான இட்லியை மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னி மற்றும் சாம்பாரை தொட்டு சாப்பிடுமாறு அவருக்கு அறிவுறுத்தினர்.
இந்த நிலையில், இட்லி குறித்த தனது கருத்தால் எழுந்துள்ள விவாதமானது, ஒரு உணவு என்பது எவ்வாறு மக்களின் அடையாளத்தையும், பிராந்திய பெருமையையும் வெளிப்படுத்துவது மட்டுமின்றி உணர்ச்சிபூர்வமான வகையில் அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாக பேராசிரியர் ஆண்டர்சன் கூறுகிறார்.
"என் கருத்துக்கு உடன்பட்டும், உடன்படாமலும் வந்த பெரும்பாலான பதில்களில் பலரும் தாங்கள் சிறுவயதிலிருந்து இட்லியை குடும்பத்தினருடன் வீட்டிலும், கடைகளிலும் உண்டு வளர்ந்ததை விளக்கி இருந்தனர். எனக்கு பதிலளித்தவர்களில் ஏராளமானோர் இந்தியாவையோ அல்லது புலம்பெயர்ந்த இந்தியர்களாகவோ இருந்தனர். பூர்விகத்துடனான பிரிக்க முடியாத பிணைப்பை உணவு கொண்டிருப்பதை அவர்களது கருத்துகள் வெளிப்படுத்தின."
"பலர் வேடிக்கையான பதில்களை அளித்தாலும், அவற்றில் சில புத்திசாலித்தனமாகவும் இருந்தன" என்று பேராசிரியர் ஆண்டர்சன் மேலும் கூறுகிறார்.
"சிலர் எனது கருத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டதாலும், 99 சதவீதத்தினரின் கருத்துக்கள் நகைச்சுவையாகவே இருந்தன. மேலும் பலர், ரசனையற்ற பிரிட்டிஷ்காரர் ஒருவர் இந்திய உணவை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது என்ற கருத்தை முன்வைத்தனர்."
பிற செய்திகள்:
- நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு - இந்தியா எப்படி சமாளிக்கும்?
- தொல்லியல் படிப்புக்கான தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் சேர்ப்பு
- ஹாத்ரஸ் சம்பவம்: கொலைவெறி தாக்குதல், நள்ளிரவில் தகனம், முகத்தைக்கூட பார்க்காமல் தவித்த குடும்பம்
- பீமா கோரேகான் வழக்கில் 83 வயது பழங்குடியின நல ஆர்வலர் ஸ்டேன் ஸ்வாமி கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: