You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் கொரிய அதிகாரி எரிக்கப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கேட்டார் கிம் ஜாங் உன்
தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் அரிதான நிகழ்வாக, இதுகுறித்து தனிப்பட்ட முறையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மன்னிப்பு கேட்டுள்ளதாக தென் கொரிய தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கு வட கொரிய தலைவர் கிம் எழுதிய கடிதத்தில், "அவமானகரமான இந்த சம்பவம்" நடந்திருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன அந்த அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரியா கூறியிருந்தது.
வட கொரிய வீரர்கள் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாக தென் கொரிய தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.
வட கொரிய படைகளால் தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்படுவது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோசமடைந்து வரும் இருநாடுகளுக்கிடையேயான உறவை இந்த சம்பவம் மேலும் பலவீனப்படுத்தியது.
கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருத்தம் தெரிவித்த கிம் ஜாங்-உன்
இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்று கூறி தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கு எழுதிய கடிதத்திலேயே கிம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக தென் கொரிய அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை "அவமானகரமான விவகாரம்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கிம், இதன் மூலம் மூன் ஜே-இன் மற்றும் தென் கொரிய மக்களை "ஏமாற்றமடையச் செய்ததற்காக" தான் மிகவும் வருந்துவதாக கூறியதாக ப்ளூ ஹவுஸ் என்றழைக்கப்படும் தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வட கொரியா தரப்பில் அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்ட முதல் கருத்து இதுவே ஆகும்.
நடந்தது என்ன?
தென் கொரியாவின் மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வட கொரிய எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ரோந்து கப்பலில் இருந்து கடந்த திங்கட்கிழமை காணாமல் போனார்.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 47 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி வட கொரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படுகிறது.
அவர் கப்பலில் தனது ஷூக்களை விட்டுவிட்டு, உயிர் கவசத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வட கொரிய ரோந்து கப்பல் அவரை அவர்களது நாட்டு எல்லைக்குள் மிதக்கும் சாதனத்தை பிடித்தவாறு, கண்டெடுத்தனர்.
வட கொரிய அதிகாரிகளால் அவர் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவரை சுட்டுத் தள்ளுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முகக்கவசம் அணிந்த சில வட கொரிய வீரர்கள், அந்த அதிகாரியை எரித்ததாக தென் கொரியா கூறுகிறது. ஆனால், அந்த நபர் வந்த மிதக்கும் சாதனத்தை மட்டுமே எரித்ததாக வட கொரிய தரப்பு கூறியுள்ளது.
இதுதொடர்பாக வட கொரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் தென் கொரியா வலியுறுத்தி இருந்த நிலையில், கிம் ஜாங்-உன் எழுதிய இந்த கடிதம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
பிற செய்திகள்:
- எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
- "அண்ணா… உங்கள் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்: இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
- ’நீட் தவறு என்றால் பாஜக அரசு அதனை ஏன் நீக்கவில்லை?`: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பிரத்யேக பேட்டி
- கொரோனா வைரஸ்: காணாமல் போன சீன பத்திரிகையாளர் 6 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: