You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று எரித்த வட கொரிய வீரர்கள்
தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை "மிருகத்தனமான செயல்" என்று விவரித்துள்ளது தென் கொரியா.
இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன அந்த அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டது தென் கொரியா கூறியுள்ளது.
வட கொரிய வீரர்கள் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. "பலதரப்பட்ட உளவுத்துறை" விசாரணையிலே இது தெரிய வந்துள்ளதாகவும் தென் கொரியா கூறுகிறது.
இது குறித்து வட கொரியா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய் தொற்று அவர்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை "சுட்டுக் கொல்ல" உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது?
தென் கொரியாவின் மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் வட கொரிய எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ரோந்து கப்பலில் இருந்து திங்கட்கிழமை காணாமல் போயுள்ளார்.
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 47 வயது மதிக்கத்தக்க அந்த அதிகாரி வட கொரியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக நம்பப்படுகிறது.
அவர் கப்பலில் தனது ஷூக்களை விட்டுவிட்டு, உயிர் கவசத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வட கொரிய ரோந்து கப்பல் அவரை அவர்களது நாட்டு எல்லைக்குள் மிதக்கும் சாதனத்தை பிடித்தவாறு, கண்டெடுத்தனர்.
வட கொரிய அதிகாரிகளால் அவர் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவரை சுட்டுத் தள்ளும் ஆணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாஸ்க் அணிந்த சில வட கொரிய வீரர்கள், அந்த அதிகாரியை எரித்ததாக வட கொரியா கூறுகிறது.
இதனை வன்மையாக கண்டித்துள்ள தென் கொரியா, இது தொடர்பாக வட கொரியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது
கடந்த ஜூன் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ அவசர எண் தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து, இத்தகவல்களை தென் கொரியா எவ்வாறு சேகரித்தது என்பது தெளிவாக தெரிய வரவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கு உதவிய அலுவலகம் ஒன்றும் வட கொரியாவால் அழிக்கப்பட்டது.
தென் கொரிய நபரை வட கொரிய வீரர்கள் இவ்வாறு கொல்வது இது முதல்முறையல்ல. ஜூலை 2008ஆம் ஆண்டும் கும்கங்க் மலையில் சுற்றுலாவுக்கு சென்ற தென் கொரியர் ஒருவர் வட கொரிய வீரர்களால் சுட்டுத்தள்ளப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :