You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கியூபாவின் கொரோனா தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
உலகளவில் சுமார் 2.25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்கப்போகிறது. உலக பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டறிய பல நாடுகளும் பல்வேறு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளது கியூபா.
சோஷலிச பின்னணி கொண்ட கியூபா, சுகாதார சேவைகளுக்கு பெயர் பெற்ற நாடாக அறியப்படுகிறது. அதே சமயம் இதனை ஒரு ராஜீய உத்தியாகவும் கடைபிடித்துவருகிறது.
தற்போது சொபெரனா 01 அதாவது சவரின் 01 என்ற பெயரில் ஒரு கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. கியூப அரசின் நிறுவனமான ஃபின்லே இன்ஸ்டியூட் இந்த தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.
இறையாண்மை 01 என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை அடுத்த வாரம் முதல் சோதிக்கவுள்ளதாக கியூபா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கியூபா தயாரித்துள்ள தடுப்பூசி அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் தன்னார்வலர்களுக்கு பரிசோதிக்கப்படும். இரண்டு கட்டங்களாக நடைபெறும் தடுப்பு மருந்து பரிசோதனைக்கு 19 முதல் 80 வயதுக்குட்பட்ட 676 தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என கியூபா அரசு ஊடகம் கடந்த புதன்கிழமை கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
உயிரி மருந்தக துறையில் தங்களது செயல்பாடு குறித்து பெருமை கொள்ளும் கியூபா ஏற்கனவே பல தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 1 கோடியே 10 லட்சம் பேர் வாழும் கியூபாவில் கடந்த சில மாதங்களில் கொரோனாவால் மிகப்பெரிய அளவில் மரணங்கள் நிகழவில்லை. கடந்த மார்ச் மாதம் கொரோனா அங்கே பரவத் துவங்கியதில் இருந்து இதுவரை 3,482 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. குறைந்தது 88 பேர் உயிரிழந்ததாக கியூபா அரசு தெரிவிக்கிறது.
கொரோனா பரவல் விவகாரத்தில் முறையாக தொடர்பரிதல், தனிமைப்படுத்தல் உள்ளிட்டவற்றை செய்ததன் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது கியூபா.
எனினும் கடந்த சில வாரங்களாக அங்கே புதிய தொற்றுகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மீண்டும் சமூக முடக்கம் உள்ளிட்ட விதிகளை தலைநகரில் கடுமையாக்கியுள்ளது அரசு.
கியூபாவின் தடுப்பு மருந்து பரிசோதனை ஜனவரி 11-ம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது, பிப்ரவரி 15-ம் தேதி பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும் என அனடோலு செய்தி முகமை கூறுகிறது.
பிற செய்திகள்:
- தோனிக்கு புகழாரம்: பிரதமர் மோதி எழுதிய 2 பக்க உணர்ச்சிப்பூர்வ கடிதம்
- ஆத்திகம் முதல் நாத்திகம் வரை: கொள்கைகள் ஒன்றாகப் பயணிக்கும் தமிழகம்
- இந்திய வம்சாவளி மருத்துவருக்கு பிரிட்டனில் கோவிட்-19 சேவைக்கான விருது
- இந்திய பெண்ணியத்தின் வலுவான தூண் "ருகியா"
- பிரசாந்த் பூஷண்: மன்னிப்பு கேட்க மறுப்பு, அவகாசம் கொடுத்த நீதிமன்றம் - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: